woensdag 12 november 2014

சுரேஷ் பிரேமச்சந்திரனின் கேள்விகளுக்கு பசில் ராஜபக்சதான் பதிலளிக்க வேண்டும்: மனோ கணேசன்

வவுனியாவில் வெடி விபத்தில் இராணுவ சிப்பாய் காயம்
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 09:11.07 AM GMT ]
வவுனியாவில் இடம்பெற்ற வெடிவிபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் காயமடைந்துள்ளார் என வவுனியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா பூவரசன்குளம், பெரியவேலன்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற தவறுதலான வெடி விபத்தில் அப்பகுதியில் அமைந்துள்ள 612 ஆவது பிரிகேட் இராணுவ தளத்தில் கடமையாற்றும் 25 வயதுடைய லான்ஸ் கோப்ரல் தரங்க என்ற இராணுவ சிப்பாய் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரது ரி 56 ரக துப்பாக்கி வெடித்தமையினாலேயே காயமடைந்தார் என பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnxy.html
மஹிந்தவிற்கு முடியும் என நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது: நாமல் ராஜபக்ச
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 09:21.43 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு முடியும் என நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது என ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குருணாகல் வதுராகல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
30 ஆண்டு கால போரை நிறைவுக்குக் கொண்டு வந்த ஜனாதிபதிக்கு மூன்றாம் தடவை போட்டியிட முடியாது என எதிர்க்கட்சியினர் பிரச்சாரம் செய்கின்றனர்.
எனினும் உச்ச நீதிமன்றம் ஜனாதிபதி மஹிந்த மூன்றாம் தவணைக்காக போட்டியிட முடியும் என தீர்ப்பளித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஓர் கட்டமாக குருணாகல் வந்துராகல பிரதேசத்தில் நேற்று கட்சிக் காரியாலயமொன்றை நாமல் ராஜபக்ச அங்குரார்ப்பணம் செய்து வைத்த போது ஜனாதிபதிக்கு மூன்றாம் தடவை போட்டியிடுவதில் பிரச்சினை கிடையாது என தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnxz.html
வெளிநாடுகளில் பயமுறுத்தும் பயங்கரவாதம்: ஜனாதிபதி
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 09:26.29 AM GMT ]
இலங்கையில் தோற்கடிக்கப்பட்ட பயங்கரவாதம் இன்னும் வெளிநாடுகளில் பயமுறுத்திக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று கமத்தொழில் சேவை திணைக்கள அதிகாரிகளை சந்தித்து பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையை மற்றுமொரு ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான் அல்லது எகிப்தாக மாற்ற எந்த விதத்திலும் இடமளிக்க முடியாது.
வெற்றி பெற்ற தேசத்தை பாதுகாக்க அனைவரும் அர்ப்பணிப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
மகிந்த சிந்தனை வேலைத்திட்டம் மூலம் மறந்து போன உரிமைகள் மீண்டும் நினைவூட்டப்பட்டன எனவும் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnx0.html
சுரேஷ் பிரேமச்சந்திரனின் கேள்விகளுக்கு பசில் ராஜபக்சதான் பதிலளிக்க வேண்டும்: மனோ கணேசன்
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 09:41.17 AM GMT ]
அமைச்சர் பசில் ராஜபக்ச, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் ஆதரவை கோரியுள்ளார். இது தொடர்பான செய்தி கொழும்பிலிருந்து வெளியாகும் தேசிய தமிழ் தினசரிகளில் கடந்தவாரம் முன்பக்க தலைப்பு செய்தியாக இருந்தது.
இங்கே பேசிய கூட்டமைப்பு எம்பி சுரேஷ் பிரேமச்சந்திரன், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஆளும் கட்சி மற்றும் எதிரணி பொது வேட்பாளர்களிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
தமது மக்கள் அன்றாடம் முகங்கொடுக்கும், மீனவர், அரசியல் கைதிகள் மற்றும் காணி, சிவில் வாழ்வில் இராணுவ தலையீடு ஆகிய பிரச்சினைகளை தீர்த்துவைக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் தயாரா என அவர் கேட்கிறார்.
உண்மையில் எதிரணி பொது வேட்பாளர், வெற்றி பெற்று நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்துக்கு கையளித்து விட்டு விடைபெறும் ஒரு இடைக்கால ஜனாதிபதியாகவே இருப்பார்.
நமது அரசு ஜனாதிபதியின் அரசாக இருக்க போவதில்லை. அந்த அரசு அடுத்த பாராளுமன்றத்தில் தான் ஆரம்பமாகும். ஆனால், இன்றைய அரசு அப்படியல்ல. இவர்கள் ஒரு இடைக்கால அரசை அமைக்க போவது இல்லை. தொடர்ந்து இதே ஜனாதிபதியுடன் இதே அரசை நீடிக்க விரும்புகின்றார்கள்.
இப்போதும் இவர்கள்தான் ஆட்சியிலும் இருப்பதால், கூட்டமைப்பின் கேள்விகளுக்கு அரசாங்கம்தான் பதில் கூற வேண்டும். எனவே கூட்டமைப்பின் ஆதரவு வேண்டுமென்றால், சுரேஷ் எம்பியின் கேள்விகளுக்கு அமைச்சர் பசில் ராஜபக்சதான் பதிலளிக்க வேண்டும்.
எதிரணி பொது வேட்பாளர் பற்றி குறிப்பிட்டு விட்டு சுரேஷ் எம்பி என்னை பார்த்து புன்னகைத்தார். அதன் அர்த்தம் என்னவோ தெரியவில்லை. ஆனால், அவரது கேள்விகளை அவர் அரசு தரப்பிடம்தான் முன்வைக்க வேண்டும் என அவருக்கு நான் தோழமையுடன் கூறுகிறேன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
சுரேஷ் எம்பி இங்கே 13ம் திருத்தம் பற்றியோ, அதிகார பகிர்வு பற்றியோ பேசவில்லை. இதையெல்லாம் பேசி பயனில்லை என்று நினைக்கிறாரோ தெரியவில்லை. ஆனால், அவர் வடபகுதி மக்களின் அன்றாட பிரச்சினைகள் பற்றி பேசியுள்ளார். மீனவர்களின் கடல்வள அபகரிப்பு, காணி அபகரிப்பு, மக்களின் சிவில் வாழ்வில் இராணுவம் மூக்கை நுழைப்பது, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் அரசியல் கைதிகள் விவகாரம் ஆகிய பிரச்சினைகள் பற்றிதான் பேசினார்.
இந்த பிரச்சினைகளுக்கு உத்தேச ஜனாதிபதி தேர்தலிலே ஆளும் மற்றும் எதிரணி வேட்பாளர்களின் பதில்கள் என்ன என்று அவர் கேட்கிறார். எனவேதான் நான் சொல்கிறேன். கூட்டமைப்பின் ஆதரவை இன்று கோரியுள்ள, அமைச்சர் பசில் ராஜபக்ச இந்த கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும்.
ஏனென்றால் இன்றைய அரசு இந்த ஆட்சியையும் நீடிக்க விரும்புகிறது. அதேபோல் இந்த ஆட்சிமுறைமையையும் நீடிக்க விரும்புகிறது. இந்த பிரச்சினைகள் தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணியின் நிலைபாடுகளை நாடறியும்.
எனவே நாங்கள் இது தொடர்பாக பதிலளிக்க அவசரப்பட போவதில்லை. எதிரணி பொது வேலைத்திட்டம் ஒரு இடைகால ஜனாதிபதி நிர்வாகமே. இந்த சர்வதிகார ஆட்சிமுறைமையை முடிவுக்கு கொண்டு வருவதே எம் நோக்கம். அதையடுத்து பாராளுமன்ற அரசு அமையும் போது இந்த கேள்விகளுக்கு நாம் பதில் தேட முடியும். எமக்கு முன்னால் மூன்று கட்டங்கள் உள்ளன.
ஒன்று, பொது கூட்டணி. இரண்டு, குறைந்தபட்ச பொது வேலைத்திட்டம். மூன்று, பொது வேட்பாளர். இன்று பொது கூட்டணி என்ற வண்டியை தயாரித்துள்ளோம். அடுத்து வண்டியை இழுக்கும் பொது வேலைத்திட்டம் என்ற குதிரையை வண்டியில் கட்டுவோம். இதையடுத்து, இந்த குதிரை வண்டியை ஓட்டி செல்ல தகுதியான, பொது வேட்பாளர் என்ற வண்டியோட்டியை தெரிவு செய்வோம்.
அனைத்தும் உரிய முறையில் நடக்கின்றன. அவை உரிய வேளையில் வெளியே வரும். பொது வேட்பாளர், பொது எதிரணி, பொது வேலைத்திட்டம் பற்றி அரசு தரும் போலி செய்திகளை நம்பி மக்கள் ஏமாற கூடாது. எம்மை விட எம்மை பற்றி இன்று இந்த அரசுக்கு தான் அக்கறை அதிகம்.
இதை நிறுத்தி விட்டு இன்றைய ஆட்சியை நீடிக்க விரும்பி, அதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை கோரும் இந்த அரசு, கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு பதில் தரவேண்டும்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnx1.html

Geen opmerkingen:

Een reactie posten