[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 03:26.32 PM GMT ]
இலங்கையில் நீதித்துறையின் பலவீனம் பற்றி வடக்கு மாகாண முதலமைச்சர் பிரஸ்தாபிப்பது பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
ஆனால்,வடக்கு மாகாண முதலமைச்சர் இலங்கை உயர் நீதிமன்றத்தின் நீதி அரசராக இருந்து ஓய்வு பெற்றவர்.
எனவே உயர்நீதிமன்றத்தின் நீதியரசராக இருந்த விக்னேஸ்வரன் அவர்கள் நீதித் துறையின் பலவீனம் பற்றிப்பேசும் போது அது பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருக்க முடியாது.
அதேநேரம் நம் நாட்டின் நீதித்துறையில் இருக்கக் கூடிய பலவீனங்களை உள்நாட்டில் தெரிவிக்க முடியாது என்ற அடிப்படையிலேயே அவர் தமிழகத்தில் அது பற்றிக் கூறியுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அவர்கள் தான் வழங்கிய தீர்ப்புகள் குறித்து இப்போது கவலை கொண்டுள்ளதாக வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
தான் வழங்கிய தீர்ப்பின் காரணமாகவே மகிந்த ராஜபக்ச இன்றும் ஜனாதிபதியாக இருக்கிறார் என்று தெரிவித்த ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, தான் வழங்கிய தீர்ப்புக்காக வருந்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இணைந்திருந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களைப் பிரித்து தீர்ப்பு வழங்கிய நீதியரசர் சரத் என் சில்வா ஓய்வுக்குப் பின் கூறுகின்ற கருத்துக்களை ஆய்வு செய்தால், நீதிபரிபாலனத்தின் உண்மைத் தன்மை தெரியவரும்.
இது ஒருபுறம் இருக்க, இந்த நாட்டின் பிரதம நீதியரசராக இருந்த சிராணி பண்டா ரநாயக்க அவர்கள் சட்ட திட்டங்களை நடை முறைப்படுத்த முற்பட்டுபட்டுத்தெளிந்த வரலாறு தனிக்கதை.
ஆக, இலங்கையின் நீதித்துறையில் இருக்கக் கூடிய பலவீனங்கள் பற்றிய விடயங்களை ஓய்வுக்குப் பின்னரே நீதியரசர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டார நாயக்காவைத் தவிர, ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் சரத் என் சில்வா மற்றும் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் தங்களின் ஓய்வுக்குப் பின்பாகவே, நீதித்துறையின் பலவீனங்கள் பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
அப்படியானால், சேவையில் இருக்கும் காலம் வரை அவர்கள் நீதியின் பலவீனங்களை சமாளித்துள்ளனர் என்று கூறலாம்.
நீதியின் பலவீனங்களை சமாளிப்பதென்பது ஒரு தரப்பிற்கு அநீதியை வழங்குவதானது. நீதி என்பது தீர்ப்பு வழங்கப்படும் போது இருக்க வேண்டியது.
தீர்ப்பை வழங்கிய பின்பு நானே! தீர்ப்பு வழங்கினேன். என்னாலேயே அவர் பதவியில் இருக்கிறார். அவரைச் சிறையில் அடைக்காமல் விட்டமைக்காக வருந்துகிறேன் என்று கூறுவதானது அர்த்தமற்றது; நீதிக்குப் பாதகமானது, பதவியில் இருப்பதற்காக நீதியை மறந்து செயற்பட்டது என்ற செய்தியைக் கூறுவது.
எதுவாயினும் நீதி பரிபாலனம் சுயாதீனமாக இயங்குவது மிக மிக அவசியம். மக்களின் நம்பிக்கை நீதி பரிபாலனத்தின் மீது இருக்கும் போது சட்டங்களைப் புறம்தள்ளி விட்டுத் தீர்ப்பளிப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.
எனவே, ஓய்வுக்குப் பின்னர் சரியான தீர்ப்பை வழங்குவது செல்லுபடியற்றது என்பதால், பதவியில் இருக்கும் காலத்தில் சரியான தீர்ப்பை வழங்குவதே இறைவனுக்குக் கணக்குக் கொடுக்கும் வழியாகும்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmw1.html
இலங்கை- மொரிடானிய ஜனாதிபதிகள் சந்திப்பு
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 03:52.57 PM GMT ]
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மொரிடானிய ஜனாதிபதி மொஹம்மத் அவுல்ட் அப்துல் அசீஸ் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பின் பின்னர் இரு நாட்டின் தலைவர்கள் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கைச்சத்திடப்பட்டன.
இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், மொரிடானிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சிதி தக் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
மொரிடானிய ஜனாதிபதி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmw2.html
கடற்படையால் கடத்தப்பட்ட ஐந்து மாணவர்கள் எங்கே? சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி சூடான வாதம்
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 03:21.33 PM GMT ]
2008ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17ம் திகதி இரவு 10 மணியளவில் மூன்று தமிழ் மாணவர்களும் அவர்களது நண்பர்களான இரண்டு முஸ்லிம் மாணவர்களும் தெகிவளையில் கடத்தப்பட்டனர்.
கடத்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுக்களின் விசாரணை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று மேலதிக விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
2008ஆம் ஆண்டு சம்பவம் நடைபெற்ற வேளையில் இலங்கைக் கடற்படையின் தலைமையகத்தில் நிர்வாக அதிகாரியாக கடமையபற்றிய கபிதான் சேனக அங்வல்லவின் சாட்சியத்தை மனுதாரர்கள் சார்பில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா நெறிப்படுத்தியபோது,
சாட்சி தனது சாட்சியத்தில் முன்னாள் கடற்படைக் கொமாண்டர் வசந்த கரன்னாகொடையினால் வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய கடற்படையைச் சேர்ந்த லுதினன் கமாண்டர் முனசிங்க ஆராச்சிகே தொன் நிலாந்த சம்பத் முனசிங்கவினால் பாவிக்கப்பட்ட அறை தனது தலைமையில் சோதிக்கப்பட்டபோது,
அந்த அறையிலிருந்து 7.62*25 துப்பாக்கி ரவைகள், 300 7.62mm வெடி குண்டுகள், 105 9*18- 32 வெடி குண்டுகள் 32 -9mm ரக 50 வெடிகுண்டுகளுடன் கொமேர்சியல் வங்கி, சம்பத் வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, எச்.எஸ்.பி.சி வங்கி, இலங்கை வங்கிகளின் சேமிப்புப் புத்தகங்கள், காசோலைகள், காணாமல் போனவர்களின் தேசிய அடையாள அட்டைகள், கடவுச்சீட்டுக்கள், சோனி எரிக்சன் சிம் அட்டைகள், உட்பட 21 தடயப் பொருட்களை கைப்பற்றியதாக சாட்சியமளித்தார்.
மேலும் தனது சாட்சியத்தில் சந்தேக நபரான கமாண்டர் சம்பத் முனசிங்கவினால் பாவிக்கப்பட்ட அறையிலிருந்து கைப்பற்றப்பட்ட சந்தேகத்திற்கிடமான தடயப் பொருட்களை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிசாரிடம் ஒப்படைத்ததாகவும் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்தார்.
சம்பவம் நடைபெற்ற 2008ம் ஆண்டு கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் விசாரணைக்கு பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவரும் தற்பொழுது கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றுபவருமான பொலிஸ் பரிசோதகர் குலரத்ன தனது சாட்சியத்தில்,
2009ம் ஆண்டு மே மாதம் 28ம் திகதி முன்னாள் கடற்படைக் கொமாண்டரும் தற்பொழுது ஜப்பான் நாட்டின் தூதுவருமான வசந்த கரன்னாகொடை கடற்படையில் லுதினன் கமாண்டராக கடமையாற்றிய முனசிங்க ஆராச்சிகே தொன் நிலாந்த சம்பத் முனசிங்க என்பவருக்கு எதிராக பொலிஸ் மா அதிபருக்கு செய்த முறைப்பாட்டை பொலிஸ் மா அதிபர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவிற்கு விசாரணை செய்ய வழங்கிய உத்தரவிற்கு அமைய,
இந்த விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு மேற்கொண்டதாக சாட்சிமளித்ததுடன் கடற்படையைச் சேர்ந்த லுதினன் கமாண்டர் முனசிங்க ஆராச்சிகே தொன் நிலாந்த சம்பத் முனசிங்கவினால் பாவிக்கப்பட்ட அறையிலிருந்து கடற்படை அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்ட சந்தேகத்திற்கிடமான 21 தடயப் பொருட்களையும் தான் கடற்படை அதிகாரிகளிமிருந்து பாரம் எடுத்ததாகவும் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.
மேலும் தனது சாட்சியத்தில் சந்தேக நபரான கடற்படையை சேர்ந்த லுதினன் கமாண்டர் சம்பத் முனசிங்கவை கைது செய்வதற்காக கோட்டையில் அமைந்திருக்கும் கடற்படை தலைமையகத்திற்கு சென்றதாகவும் ஆனால் சம்பத் முனசிங்க தலைமறைவானதால் கைது செய்ய முடியவில்லையெனவும் சாட்சியமளித்தார்.
இந்த இரண்டு சாட்சியங்களும் அரச தரப்பினால் குறுக்கு விசாரணைக்குட்பட்ட பின்னர் மனுதாரர்கள் சார்பில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தது யாதெனில், கடத்தப்பட்டு காணாமல் போயுள்ள ஐந்து மாணவர்களினதும் பெற்றோர்கள் கடந்த ஆறு வருடங்களாக தங்களின் பிள்ளைகளின் வரவை தினமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
கடத்தப்பட்ட தங்கள் பிள்ளைகள் உயிருடன் இருக்கின்றார்கள் என்ற அதீத நம்பிக்கையில் இந்த நீதிமன்றில் நியாயம்கேட்டு வந்து செல்கின்றனர்.
பிள்ளைகள் உயிருடன் இருக்கின்றார்களா என என்னிடம் மன்றாட்டமாக கேட்கின்றனர். என்னால் ஒரு பதிலும் கூறமுடியவில்லை. மனுதாரர்களை ஆறுதல் படுத்தவும் முடியவில்லை.
எனக்கு இது மிகவும் சங்கடமாக சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த விசாரணையை காலம் கடத்தாமல் மிக விரைவாக முடிவிற்கு கொண்டு வரவேண்டியுள்ளதால் இந்த மாதத்திலேயே மேலதிக விசாரணைக்கான திகதி குறிப்பிடும்படி நீதிமன்றத்தை வேண்டிக் கொண்டதையடுத்து,
மேலதிக விசாரணையை நவம்பர் மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் நீதிமன்ற நீதிபதி கியான் பிலப்பிட்டிய, சாட்சிகளை அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmw0.html
Geen opmerkingen:
Een reactie posten