வலி,வடக்கு இடம்பெயர் முகாம்கள் அமைந்துள்ள காணியை படையினர் அளவீடு! தடுக்கச் சென்ற கூட்டமைப்பினர் துரத்தியடிப்பு
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 02:26.05 PM GMT ]
குடாநாட்டில் வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்காக சுமார் 6381 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டு அங்கிருந்த மக்கள் சுமார் 20ற்கும் மேற்பட்ட முகாம்களில் கடந்த 25வருடங்களாக தங்கியிருக்கின்றனர்.
இந்நிலையில் யாழ்.குடாநாட்டுக்கு வரும் சர்வதேச பிரதிநிதிகள், மனிதாபிமான அமைப்புக்கள் ஆகியன, மேற்படி முகாம்களில் உள்ள மக்களை பார்க்கின்றனர்.
இதனால் தமிழ் மக்கள் போரின் பின்னரான 5வருடங்களில் இன்னமும் முழுமையாக குடியேற்றப்படவில்லை. என உறுதிப்படுத்தப்படுவதுடன், அடாத்தாக பொதுமக்களின் காணிகளை படையினர் ஆக்கிரமித்திருப்பதும் வெளிப்படுத்தப்படுகின்றது.
இது படையினருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் பெரும் குடைச்சலை கொடுக்கும் விடயமாக மாறியிருக்கும் நிலையில் யாழில் உள்ள நலன்புரி நிலையங்கள் அமைந்துள்ள காணிகளை தனியார் நில அளவையாளர்களை கொண்டு அளவீடு செய்து சுவீகரிப்பதன் மூலம் நிரந்தரமாக அந்த மக்களை அங்கேயே குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
இதனால் நலன்புரி முகாம் பிரச்சினை மற்றும் உயர்பாதுகாப்பு வலய பிரச்சினை என்பன வெளியே தெரியாததுடன், நலன்புரி முகாம் எவையும் குடாநாட்டில் இல்லை எனவும் காண்பிக்க முடியும்.
இந்நிலையில் படையினரும், அவர்களுடன் சேர்ந்தியங்கும் கே.ரி. இராஜசிங்கம் போன்றவர்களும் குடாநாட்டில், நலன்புரி நிலையங்கள் அமைந்துள்ள தனியாருடைய காணிகளை சுவீகரிக்க தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்றய தினம் சபாபதிப்பிள்ளை முகாம் காணி அளவீடு செய்ய முயற்சிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்றைய தினமும் சபாபதிப்பிள்ளை கண்ணகி, மடத்தடி ஆகிய முகாம்கள் அமைந்துள்ள காணியை, படையினர் அளவீடு செய்துள்ளனர்.
இதனை தடுக்கச் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரை மக்களைக் கொண்டு துரத்தியடித்துள்ளதுடன், இன்றைய தினம் காலை மடத்தடி நலன்புரி முகாமில் மக்களும் ஒட்டுக் குழுக்களும் சேர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் குடாநாட்டு ஊடகங்களை மிக மோசமாக திட்டித் தீர்த்துள்ளதுடன், இங்கே நீங்கள் நிற்கவேண்டாம். உடனே வெளியேறுங்கள் என மக்கள் கடும்தொனியில் கத்தியதுடன், அங்கே பற்றைகளை வெட்டி துப்புரவு செய்து கொண்டிருந்தவர்கள் கத்திகளுடன் ஓடிவந்த சம்பவமும் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இதனால் வலி,வடக்கு பிரதேச சபை உபதலைவர் எஸ்.சஜீவன், மற்றும் உறுப்பினர் மதி மற்றும் ஊடகவியலாளர்கள் அங்கிருந்து உடனடியாகவே வெளியேறிய சம்பவம் இடம்பெற்றது.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjsz.html
முன்னாள் போராளி கொலை! நடவடிக்கை எடுக்குமாறு கோத்தபாயவிடம் ரிஷாத் வேண்டுகோள்
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 02:41.42 PM GMT ]
கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் முன்னாள் போராளியும் இரு பிள்ளைகளின் தந்தையுமான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக பாதுகாப்பு செயலாளருடன் அமைச்சர் ரிஷாத் நேற்று தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளார்.
இதனையடுத்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
மன்னார் - வெள்ளாங்குளம் - கணேசபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் என்பவரின் இழப்பு மன்னார் மாவட்டத்துக்கே ஏற்பட்ட பேரிழப்பாகவே நான் பார்க்கின்றேன்.
முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினரான நகுலேஸ்வரன் படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வும் பெற்று வழமையான தனது பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதுதான் இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
மாந்தை பிரதேச அபிவிருத்தி குழு உறுப்பினராக இருந்து - அவரது பிரதேச நலனுக்காக பல்வேறு உதவிகளை என் மூலமாக பெற்றுச் சென்றிருக்கிறார்.
என்னைச் சந்திக்கும் போதெல்லாம் அதிகமாக அவரது பிரதேச அபிவிருத்தி தொடர்பாகவே உரையாடுவார்.
இவ்வாறு சகஜ வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இவர் படுகொலை செய்யப்பட்டதானது மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் மத்தியில் இன்று ஏற்பட்டுள்ள சந்தேகத்தை அகற்றி இக்கொலையின் பின்னணியிலுள்ள சதிகாரர்களைக் கண்டறிந்து உண்மையை வெளிப்படுத்த வேண்டிய கடமை பொலிஸாருக்கு உண்டு.
இது தொடர்பில் உண்மைநிலையைக் கண்டறிந்து பின்புலத்தையும் அறிந்து உரிய விசாரணையை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
மேலும், நகுலேஸ்வரன் கொலையால் துயருற்றிருக்கும் ஆசிரியையான அவரது மனைவிக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjs0.html
Geen opmerkingen:
Een reactie posten