zaterdag 25 oktober 2014

ஈழ இராச்சியத்தை உருவாக்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திடம் யோசனைத் திட்டம் சமர்ப்பிப்பு?

ஜாதிக ஹெல உறுமய வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானம்?
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 01:56.38 PM GMT ]
ஜாதிக ஹெல உறுமய கட்சி வரவு செலவுத் திட்டத்திற்க எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
வரவு செலவுத் திட்டம் தொடர்பில் விவாதம் நடத்தப்பட்டு பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்படும்.
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது ஜாதிக ஹெல உறுமய கட்சி அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்கும் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமது கட்சி முன்வைத்த யோசனைத் திட்டத்திற்கு அரசாங்கம் உரிய பதிலளிக்காமைக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இவ்வாறு வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கப்பட உள்ளதாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு ஓரளவு அழுத்தத்தை பிரயோகிக்க முடியும் என்பதே கட்சியின் நம்பிக்கையாகும்.
இந்த தீர்மானத்திற்கு ஆளும் கட்சியின் சில அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வரவு செலவுத் திட்டம் தொடர்பில் தீர்மானிக்கும் நோக்கில் இன்று விசேட கூட்டமொன்று நடத்தப்பட உள்ளதாக கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmq0.html
ஈழ இராச்சியத்தை உருவாக்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திடம் யோசனைத் திட்டம் சமர்ப்பிப்பு?
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 02:04.31 PM GMT ]
ஈழ இராச்சியத்தினை உருவாக்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திடம் யோசனைத் திட்டமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சிங்கள வார இறுதிப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்கியதனைத் தொடர்ந்து இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் புலி ஆதரவு தமிழ் அமைப்புக்களினால் இந்த யோசனைத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்குள் தமிழர்களுக்கு தனியொரு நாட்டை உருவாக்கும் நோக்கில் இந்த யோசனைத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஈழ இராச்சியத்தை உருவாக்கிக் கொள்ளும் நோக்கில் புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்கள் ஐரோப்பிய அரசியல்வாதிகள் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தினால் அதற்கு முன்னதாகவே ஐரோப்பிய நாடாளுமன்றின் நிகழ்ச்சி நிரலில் ஈழ இராச்சியம் குறித்த யோசனையை உள்ளடக்குமாறு புலம்பெயர் புலி அதரவு தரப்பினர் கோரியுள்ளனர்.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளை உறுதி செய்யும் இன்டர்போல் மற்றும் யூரோபோல் பொலிஸாரின் அறிக்கைகளை புலிகளுக்கு எதிரான தடை நீக்கம் குறித்த வழக்கு விசாரணைகளின் போது ஐரோப்பிய சட்டத்தரணிகள் சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாக சிங்கள பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmq1.html

Geen opmerkingen:

Een reactie posten