[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 02:10.28 PM GMT ]
டக்ளஸ் தேவானந்தா, இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற தகவல் பரவலாக உறுதிப்படுத்தப்பட்டிருந்த அந்தச் சூழலில், இந்தத் தேர்தலில் நீங்கள் போட்டியிடவில்லையா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்கு அவர் நேரடியாகப் பதிலளிக்கவில்லை.
இறுதிவரை பொறுத்திருக்கும் படியும், வேட்பாளர் பட்டியல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
உண்மையில், ஈ.பி.டி.பி.யின் வேட்பாளர்களில் அப்படியானதொரு அதிர்ச்சியை கொடுக்கக் கூடியவர்களாக யாரும் இருக்கவில்லை.
ஈ.பி.டி.பி.யில் எதிர்பார்க்கப்படாத ஒரு வேட்பாளர் சுந்தரம் டிவகலாலா தான்.
முன்னாள் நிர்வாகசேவை அதிகாரியான அவர், கடைசியாக வடக்கு, கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
போர் முடிவுக்கு வந்தவுடனேயே, மாகாண சபை ஆசனம் மீது குறிவைத்திருந்தவர்.
அதற்காக சிலரை அணிதிரட்டி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக நிற்பதற்கான எத்தனங்களை நீண்டகாலத்துக்கு முன்னரே மேற்கொண்டவர்.
ஆனால் அதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டு கொள்ளாமல் போனதால், கடைசியாக ஈ.பி.டி.பி. பக்கம் போய் சேர்ந்து தனது மாகாண சபைக் கனவை நனவாக்க முயன்றுள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா கூறிய அதிர்ச்சியான தகவல், டிவகலாலா பற்றியது அல்ல. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இருந்து தயா மாஸ்டர் நீக்கப்பட்டது தான் பரபரப்பான- அதிர்ச்சியான செய்தியாக அடிபட்டது.
இவர் அரசதரப்பின் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டத ற்கு டக்ளஸ் தேவானந்தாவின் நெரு க்குதலே காரணம் என்ற பரவலான கருத்து இருந்த போதிலும், அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கடந்த வாரம் நிராகரித்துள்ளார்.
எனினும், தயா மாஸ்டர் நீக்கம் பற்றிய தகவலை அவர் முன்னரே அறிந்திருந்தார் என்பதையே, அவர் கூறிய அதிர்ச்சியான செய்திக்கு காத்திருங்கள் என்ற கருத்து உறுதிப்படுத்துகிறது.
முன்னர், ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து செயற்பட்டிருந்த தயா மாஸ்டர், ஆளும் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்து கொண்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அரசாங்கமும், அவரை நன்றாகவே நம்பவைத்து கழுத்தறுத்து விட்டன என்பதே உண்மை.
ஏனென்றால், தயா மாஸ்டருக்கு அரசியலில் குதிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டு, உச்சியில் ஏற்றிவிட்டு குப்புறத் தள்ளிவிட்டது அரசாங்கம் தான். எதற்காக அரசாங்கம் இவ்வாறு நடந்து கொண்டது? - ஏன் அவர் ஒதுக்கப்பட்டார்? என்ற கேள்விக்கான சரியான பதில் இதுவரை இல்லை. அவரைத் தேடிச் சென்று அரசியலுக்குப் பொருத்தமானவர் என்று இழுத்து வந்த அரசாங்கமே, கடைசி யில் அவரைப் பொருத்தமற்றவர், தகைமையற்றவர் என்று ஒதுக்கித் தள்ளி விட்டது.
போர் முடிவுக்கு வந்த பின்னர், யாழ்ப்பாணத்தில் ஊடகம் ஒன்றில் பணியாற்றி வந்த, தயா மாஸ்டரை சுதந்திரக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட இழுத்து வந்தது பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தான்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பப் பணிகள் தொடங்க முன்னரே இவரை அரசியலுக்கு இழுத்து வரும் நகர்வை மேற்கொண்டிருந்தார் கோத்தபாய.
அதன் தொடர்ச்சியாக, தயா மாஸ்டர் சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.
சுதந்திரக் கட்சியின் அழைப்பின் பேரிலேயே தாம் அந்தக் கட்சியில் போட்டியிட முன்வந்ததாகவும், அதற்காகவே அந்தக் கட்சியில் இணைந்து கொண்டதாகவும், தயா மாஸ்டர் ஊடகங்களுக்கு தெளிவாக கூறியுள்ளார்.
ஆக, சுய அரசியல் ஆர்வத்தினால் அவர் இந்த அரங்கிற்கு வரவில்லை, அரசாங்கத்தினால் இழுத்து வரப்பட்டிருந்தார் என்பதே உண்மை.
இவரை மட்டுமன்றி, விடுதலைப் புலிகளின், முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரான கே.பி எனப்படும் செல்வராசா பத்மநாதன், முன்னாள் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி ஆகியோரையும், வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு இழுத்து வர முயன்றது அரசாங்கம்.
ஆனால் அவர்களெல்லாம், சாதுரியமாக ஒதுங்கிக் கொண்டதால், தயா மாஸ்டரைப் போன்ற நிலைக்கு உள்ளாகாமல் தப்பிக் கொண்டனர்.
சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட பின்னர், தயா மாஸ்டர் முன்னாள் போராளிகள் பலரையும் வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு முயன்றபோதிலும் அதுவும் கைகூடவில்லை.
கடைசியில் அவர் ஒருவரே, விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி என்ற அடைமொழியுடன் அரச வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டார்.
வேட்பாளர் நேர்முகத் தேர்வு முடிந்த பின்னரும், அவர் ஒருவரே, அரசதரப்பில் போட்டியிடவுள்ள முன்னாள் போராளி என்று அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேம் ஜெயந்த் போன்றவர்கள் உறுதிப்படுத்தியிருந்தனர்.
ஆனால் கடைசியில் சுதந்திரக் கட்சியின் பட்டியலில் அவரது பெயர் இருக்கவில்லை.
அவர் அதில் இடம்பெறாத தகவலைக் கூட கட்சித் தலைமை, சக வேட்பாளரும், யாழ்.மாவட்ட அமைப்பாளருமான அங்கஜன் இராமநாதன் மூலமே தெரியப்படுத்தியது.
அரசாங்கத் தரப்பு தயா மாஸ்டரை திட்டம் போட்டு பழிவாங்கி விட்டதாகவே இதனைக் கருதலாம்.
வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்காக அரசதரப்பினால், நிறுத்தப்படவுள்ள வேட்பாளர் என்று முன்னர் ஊடகங்களில் தயா மாஸ்டர் அறிமுகப்படுத்தப்பட்டார்.
ஆனால் கடைசியில் அவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் கூட இடம்பெறவில்லை.
எதற்காக இவரது பெயர் நீக்கப்பட்டது என்பதற்கு அரசதரப்புக் கூறும் நியாயம் அந்தளவுக்குப் பொருத்தமானதாக இல்லை.
சுதந்திரக் கட்சிக்கு வரையறுக்கப்பட்ட ஆசனங்கள் தான் இருந்தன, அவற்றுக்கு மிகப் பொருத்தமான, வெற்றிபெறத் தகுதிவாய்ந்தவர்க ளையே போட்டியில் நிறுத்தியுள்ளதாக, அமைச்சர்கள் நியாயம் கூறுகின்றனர்.
இருந்தாலும், இது உண்மைக் காரணம் என்று கூற முடியாது. ஏனென்றால், வடக்கு மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகு முன்னரே, அதற்கான முன்னா யத்தங்களை இவரை வைத்தே கோத்தாபய ராஜபக்ச முன்னெடுத்திருந்தார்.
அப்போது தகைமையானவர் என்று தெரிந்ததால் தான், அவரைத் தேடிச் சென்றிருந்தார் கோத்தபாய.
திடீரென அவர் தகைமையற்றவ ராக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன, ஊகிக்கப்படுகின்றன.
முதலாவது சுதந்திரக் கட்சியில் இணைந்த பின்னர், 13வது திருத்தச் சட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி வெளியிட்ட கருத்து.
இரண்டாவது 13வது திருத்தச்சட்ட விவகாரத்தில், அரச உயர்மட்டத்துக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக கருதப்படும் சூழலில், பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவினால் கொண்டு வரப்பட்டவர் என்பதால் நிராகரிக்கப்பட்டிருக்கலாம்.
மூன்றாவது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நெருக்குதல்.
நான்காவது விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பேச்சாளராக இருந்தவர், அரசதரப்பின் மாகாண சபை வேட்பாளராக போட்டியிடுவதற்குக் கூடத் தகைமையற்றவர் என்று காட்டி அவமானப்படுத்துவது.
ஐந்து தனக்குப் பின்னால், ஒருதொகுதி முன்னாள் போராளிகளை அணிதிரட்டி அரசின் பின்னால் கொண்டு செல்லத் தவறியது.
ஆறு அரசதரப்பு முன்னாள் விடுதலைப் புலிகளின் தயவில் ஆட்சியைப் பிடிக்க முனைகிறது என்ற விமர்சனங்களை தவிர்ப்பதற்கு.
ஏழு அறிமுகமான வேட்பாளராக இருந்தாலும், வாக்குகளைக் கவரும் திறன் இவருக்கு இல்லை என்றும், முன்னாள் புலியான இவரை அரச வேட்பாளராக ஏற்கும் நிலையில் மக்கள் இல்லை என்றும் கொடுக்கப்பட்ட புலனாய்வு அறிக்கை கூறுகிறது.
இப்படிப் பல காரணங்கள் கூறப்படுகின்றன, ஊகிக்கப்படுகின்றன. இதில் சரியான காரணம் என்ன என்பதை, அரச உயர்மட்டம் தான் அறியும்.
வேட்பாளர் தெரிவு முடிந்த பின்னர், இவரும் ஒரு வேட்பாளர் என்று வேட்பாளர் தெரிவுக்குழுவில் இடம்பெற்ற அமைச்சர்களால் கூறப்பட்டதுடன், இறுதி முடிவை ஜனாதிபதியே எடுப்பார் என்றும் கூறியிருந்தனர்.
தயா மாஸ்டர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதும், வேட்பாளர்களைத் தெரிவு செய்தது, வேட்பாளர் தெரிவுக்குழுவே என்று தான் தப்பிக் கொண்டார் ஜனாதிபதி.
எது எவ்வாறாயினும், ஆங்கில நாளிதழ் ஒன்று தலைப்பிட்டது போன்று அரசாங்கம் தயா மாஸ்டரின் முதுகில் குத்திவிட்டதாகவே உணரப்படுகிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிட வைத்து, மீண்டும் தமிழ்த் தேசிய சக்திகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் வெறுப்பையும் சம்பாதிக்க வைத்து விட்டு, கடைசியில் இவரது காலை வாரிவிட்டது அரசாங்கம்.
அரசாங்கத்தின் தெரிவை ஏற்காது போயிருந்தால் சிலவேளைகளில் இவருக்கு ஈ.பி.டி.பி.யாவது வாய்ப்பைக் கொடுத்திருக்கும்.
ஆனால், இப்போது தயா மாஸ்டரின் நிலை அரசனை நம்பி புருஷனைப் பறிகொடுத்தாக அமைந்து விட்டது.
கபில்
கைகொடுப்பாரா நவநீதம்பிள்ளை?
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 01:56.29 PM GMT ]
வரும் 25ஆம் திகதி தொடக்கம், 31 ஆம் திகதி வரை நவநீதம்பிள்ளை இலங்கையில் பயணத்தை மேற்கொள்கிறார்.
அவரது ஒருவார கால உண்மை கண்டறியும் பயணம், 31 ஆம் திகதி கொழும்பில் நடத்தவுள்ள செய்தியாளர் சந்திப்புடன் நிறைவடையும்.
இலங்கை அரசாங்கம் தொடர்பான கடு மையான விமர்சனங்களை சர்வதேச அரங் கில் முன்வைத்து வருபவர்களில் நவநீதம்பிள்ளையும் ஒருவர்.
அவர் ஒரு தமிழர் என்பதால், இலங்கை அரசுக்கு எதிராகச் செயற்படுவதாக கூட அரசாங்கம் அவரை விமர்சித்தது.
எப்போதெல்லாம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை விவகாரம் குறித்து விவாதம் எழுகிறதோ, அப்போதெல்லாம், நவநீதம்பிள்ளையும் அவரது பணியகமும், நடுநிலையுடன் செயற்படவில்லை என்றும், பக்கச்சார்பாக நடந்து கொள்வதாகவும் குற்றஞ்சாட்டுவது இலங்கையின் வழக்கம்.
இலங்கை அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைப்பவராக நவநீதம்பிள்ளையும், அவரை கடுமையாக விமர்சிக்கும் நிலையில் இலங்கை அரசாங்கமும் இருக்கும் நிலையில், இந்தப் பயணம் உலகளவில் முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கமையவே இலங்கை வரும் நவநீதம்பிள்ளை, இங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்டு, முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படியும் பணிக்கப்பட்டுள்ளார். நவநீதம்பிள்ளையின் இலங்கைப் பயணம் முடிந்த அடுத்தவாரமே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 24ஆவது அமர்வு ஆரம்பமாகவுள்ளது.
அந்த அமர்வில் தனது இலங்கைப் பய ணம் குறித்த அறிக்கையை நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையாக இல்லாவிட்டாலும், இலங்கை குறித்த ஒரு மேலோட்டமான- இடைக்கால அறிக்கையையாவது அவர் ஜெனீவாவில் அடுத்த மாதம் முன்வைப்பதற்கு சாத்தியமுள்ளதால், அரசாங்கம் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதாகத் தெரிகிறது.
உண்மையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள 25ஆவது அமர்வில் தான், இலங்கை நிலைமைகளின் முன்னேற் றம் குறித்த முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, 25ஆவது அமர்வில் எத்தகைய அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது என்பது குறித்து அரசாங்கம் இப்போது கவலைப்படவில்லை.
24வது அமர்வில் நவநீதம்பிள்ளை இடைக்கால அறிக்கையை சமர்ப்பிப்பதானாலும், அதில் குற்றம் காணப்படக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது.
ஏனென்றால், நவநீதம்பிள்ளை அளிக்கும் அறிக்கை இலங்கை அரசாங்கத்துக்குப் பாதகமாக அமைந்து விட்டால், வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டை அது பாதிக்கும்.
ஏற்கனவே, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகள் கொமன்வெல்த் மாநாட்டையும் மனித உரிமை விவகாரங்களையும் இணைத்து வைத்து தலையிடி கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில், நவநீதம்பிள்ளை அடுத்த மாதம் கொடுக்கும் அறிக்கை பாதகமாக அமைந்து விடக் கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகத் தெரிகிறது.
இதற்காக அரசாங்கம் நீண்டகாலமாக நிறைவேற்றாமல் இழுத்தடித்து வந்த சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகள் சிலவற்றை நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் மேலும் சிலவற்றை நடைமுறைப்படுத்த இணங்கியுள்ள அரசாங்கம் அதன் செயல்முறை குறித்து விபரிக்கும் இணையத்தளத்தையும் ஆரம்பித்துள்ளது.
திருகோணமலையில், ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, 11 விசேட அதிரடிப்படையின ரைக் கைது செய்துள்ளது.
காணாமற்போனோர் தொடர்பாக ஆரா யும் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
தங்காலையில், பிரித்தானிய சுற்றுலாப் பயணியின் கொலை தொடர்பாக ஆளும்கட்சியின் செல்வாக்குமிக்க உள்ளூர் தலைவர் உள்ளிட்டவர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் வலிகாமம் பகுதியில் பொதுமக்களின் காணிகளில் அமைந்திருந்த 13 முகாம்களை மூடுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை.
இவையெல்லாம், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையையும், சர்வதேச சமூகத்தையும் திருப்திப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள்.
ஆனால், சர்வதேச அழுத்தங்களின் பேரில் காணாமற்போனோர் தொடர்பான ஆணைக்குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
ஆனால், உண்மை சர்வதேச அழுத்தங்கள் தான் என்பதில் சந்தேகமில்லை.
இவற்றையெல்லாம் அரசாங்கம் தானாகவே முன்வந்து செய்தது என்பதை நம்புவதானால், எதற்காக இதனைச் செய்வதற்கு இவ்வளவு காலமும் தேவைப்பட்டது என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கும்.
காணாமற்போனவர்கள் தொடர்பான ஆணைக்குழு விடயத்தில் அரசாங்கம் அக்கறை காட்டாமலேயே இருந்து வந்தது.
ஏனென்றால் அது, போரின் இறுதிக்கட்டத்தில், சரணடைந்து காணாமற்போன புலிகளின் முக்கிய தளபதிகள், பிரமுகர்கள் பற்றிய விவகாரத்தையும் கிளறிவிடும் என்பது அரசாங்கத்துக்குத் தெரியும்.
எனவே தான், இந்தளவு காலமும் இந்த விவகாரத்தை இழுத்தடித்து வந்தது.
தனக்கு அல்லது படையினருக்குப் பாதி ப்பை ஏற்படுத்தும் என்பதால் தான், இதுபோன்று நடவடிக்கைகளை எடுக்காமல் அரசாங்கம் தவிர்த்து வந்தது.
ஆனால், இப்போது நவநீதம்பிள்ளையின் வருகை, கொமன்வெல்த் மாநாட்டை குறையேதுமின்றி நடத்த வேண்டும் என்பதற்காக அரசாங்கம் தனது பிடிவாதத்தில் சில சமரசங்களை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கொமன்வெல்த் மாநாடு விவகாரம் ராஜபக் ஷ அரசாங்கத்துக்கு என்பதை விட, அந்தக் குடும்பத்தின் கௌரவப் பிரச்சினையாகவே உள்ளது.
இலங்கையில் இதற்கு முன்னர் நடந்த மிகப்பெரிய சர்வதேச மாநாடு என்றால் அது சிறிமாவோ காலத்தில் நடத்தப்பட்ட அணிசேரா நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு தான்.
அதற்குப் பின்னர் சார்க் தலைவர்களின் மாநாட்டைத் தவிர வேறேதும் இலங்கை யில் நடந்ததில்லை.
அணிசேரா மாநாட்டைத் திறம்பட நடத்தி, புகழ் சேர்த்த சிறிமாவோ பண்டார நாயக்கவைப் போன்று கொமன்வெல்த் மாநாட்டினால், புகழ்பெற நினைக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.
அந்த திட்டம் நிறைவேறுவது நவநீதம்பிள்ளையின் கையிலும் உள்ளது.
எனவே தான் அவரது வருகைக்கு முன்னர் அரசாங்கம் ஏதோ சிலவற்றைச் செய்து அவரைச் சமாதானப்படுத்த முனைகிறது. ஆனால், அவர் அரசாங்கத்தின் தேவைகளை நிறைவேற்றும் ஒருவராக இருப்பார் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.
ஏற்கனவே இலங்கை அரசாங்கம் தொடர்பாக அவர் கொண்டிருக்கும் கருத்தும், இலங்கைப் பயணத்தில் பக்கச்சார்பு நிழல் ஏதும் படிந்து விடாமல் தவிர்ப்பதில் ஐ.நா அதிகாரிகள் காட்டும் அக்கறையும் அத்தகைய எதிர்பார்ப்புகளை கொள்ள வைக்கவில்லை.
நவநீதம்பிள்ளை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலைப் பகுதிகளுக்கு பயணம் செய்வதையே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளார்.
இந்தப் பகுதிகளுக்கு தனியார் விமானத் தில் அவர் பயணத்தை மேற்கொள்வதற்கே, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகம் திட்டமிட்டுள்ளது.
ஆனால், போர் முடிவுக்கு வந்தவுடன், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இலங்கை விமானப்படை ஹெலியில் பாதுகாப்பாக பயணத்தை மேற்கொண்டதைச் சுட்டிக்காட்டி, நவநீதம்பிள்ளையையும், விமானப்படையின் ஹெலி ருவர்ஸ் விமானங்களை பயன்படுத்தும்படி அழுத்தம் கொடுத்துள்ளது.
பான் கீ மூன் பயணத்தை மேற்கொண்டிருந்த காலத்தில், தனியார் விமானங்கள் போர் வலயத்தில் பயணம் மேற்கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
அதனால், தனியார் விமானத்தை பான் கீ மூன் பயன்படுத்தக் கூடிய நிலை இருக்கவில்லை. ஆனால், இப்போது நிலை அப்படியில்லை.
எந்த விமானமும் எங்கும் பயணம் மேற்கொள்ள அனுமதி உள்ளது.
அரசாங்கம் விமானப்படை விமானத்தை பயன்படுத்த அழுத்தம் கொடுப்பதற்குக் காரணம், தாம் விரும்பியவாறு நவநீதம்பிள் ளையின் பயணத்தை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கே என்று கருதப்படுகிறது.
பான் கீ மூன், விமானப்படை விமானங்க ளில் பயணம் செய்ததால், முக்கியமான பல இடங்களை தவறவிட்டிருந்தார்.
அரசாங்கம் எங்கெல்லாம் கொண்டு சென் றதோ அந்த இடங்களைத் தான் அவர் பார்வையிட்டார்.
யாரையெல்லாம் ஒழுங்கு செய்ததோ, அவர்களைத் தான் சந்தித்தார்.
ஆனால், அப்படியொரு தவறைச் செய்ய நவநீதம்பிள்ளை தயாராக இல்லை என்பதையே, விமானப்படை விமானத்தில் பயணத்தை மேற்கொள்ள மறுப்பு வெளியிட்டதில் இருந்து உணர முடிகிறது.
எவ்வாறாயினும், நவநீதம்பிள்ளையின் பயணத்தை தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொள்ள அரசாங்கம் முனைந்தாலும், அது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது சந்தேகம் தான்.
ஹரிகரன்
Geen opmerkingen:
Een reactie posten