donderdag 15 augustus 2013

கிராண்ட்பாஸ் மசூதி தாக்குதல் சம்பவம்!- மக்கள் முறையிட்டால் பொலிசார் மீது விசாரணை! சேத விபரங்கள்!

ரவிந்து குணவர்தனவிற்கு பாதுகாப்பு வழங்கிய 9வது சந்தேகநபர் பல வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்! - 5 வருடங்களுக்கு முன் கொலை செய்தவருக்கு விளக்கமறியல்
[ வியாழக்கிழமை, 15 ஓகஸ்ட் 2013, 12:00.25 AM GMT ]
வாஸ் குணவர்தனவின் மகன் ரவிந்து குணவர்தனவிற்கு பாதுகாப்பு வழங்கிய ஒன்பதாவது சந்தேகநபரான ஸ்ரீமால் ஹெட்டியாராச்சி என்பவர் பல வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என அவரிடம் தனியான விசாரணையை மேற்கொள்ளப்பட உள்ளதாக குற்ற விசாரணை பிரிவினர் நீதிமன்றில் அறிவித்தனர்.
படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர் மொஹமட் சியாமின் கொலை வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் நேற்று புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த சந்தேகநபருக்கு கொலை குற்றத்திற்காக காலி நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்ட தண்டனை வழங்கப்பட்டது எனவும், இவர் ஹபரதுவவில் நடந்த இரட்டைக் கொலை வழக்கு தொடர்பில் தேடப்படுபவதுடன், காலியில் வீடுடைத்து திருடிய வழக்கின் சந்தேகநபராக உள்ளார் எனவும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன வெவ்வேறு பெயர்களில் பெறப்பட்ட சிம் அட்டைகளுடன் பயன்படுத்திய மூன்று கைத்தொலைபேசிகள் மற்றும் மடி கணினிகளையும் இரகசிய பொலிஸார் பறிமுதல் செய்து ஆய்வுக்குட்படுத்தியுள்ளனர்.
குறித்த உபகரணங்கள் தொடர்பான தீவிர விசாரணைளை மேற்கொண்டு வருவதாக குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் நேற்று தெரிவித்தனர்.
கொழும்பு மேலதிக நீதவான் ஏ.எம்.சஹாப்டீன் முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையின் போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.
இதனையடுத்தே ஒன்பது சந்தேகநபர்களையும் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
5 வருடங்களுக்கு முன் கொலை செய்தவருக்கு விளக்கமறியல்
மட்டக்களப்பு சந்திவெளியில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் 28ஆந் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு ஏறாவூர் நீதி மன்றம் உத்தவிட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு மட்டக்களப்பு சந்திவெளிப் பகுதியில் வைத்து ஒரு நபரைக் கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நால்வருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த கந்தேக நபர்களில் இருவரை ஏற்கனவே கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று சந்தேக நபர்களில் ஒருவராகத் தேடப்பட்டு வந்த குழந்தைவேல் பாஸ்கரன் என்பவரையே தாம் கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.
இச்சந்தேக நபரை நேற்று புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது சந்தேகநபரை ஓகஸ்ட் 28 ஆம் திகதிவரை வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
கிராண்ட்பாஸ் மசூதி தாக்குதல் சம்பவம்!- மக்கள் முறையிட்டால் பொலிசார் மீது விசாரணை! சேத விபரங்கள்
[ வியாழக்கிழமை, 15 ஓகஸ்ட் 2013, 12:08.56 AM GMT ]
இலங்கையில் சட்டத்தை மீறிச் செயற்படுகின்ற பொலிசாருக்கு எதிராக பொதுமக்கள் முறைப்பாடுகளை செய்ய முன்வராத காரணத்தினாலேயே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளதாக இலங்கை தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொலிசார் சட்டப்படியான தமது கடமைகளை செய்யத் தவறினாலோ அல்லது சட்டத்தை மீறிச் செயற்பட்டாலோ அது பற்றிய முறைப்பாடுகளை நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள தமது பிராந்திய அலுவலகங்களில் மக்கள் நேரடியாக முறைப்பாடு செய்ய முடியும் என்று தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஆரியதாச குரே தெரிவித்தார்.
வடக்கு கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தமது மாகாண பணிப்பாளர் அலுவலகங்களூடாகவோ அல்லது கொழும்பிலுள்ள தமது தலைமையகத்தினூடாகவோ முறைப்பாடுகளை பதிவுசெய்ய முன்வரவேண்டும் என்றும் அவர் கூறினார்.
2012- ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தான் தேசிய பொலிஸ் ஆணைக்குழு இயங்கத் தொடங்கியது. கடந்த ஆண்டில் 601 முறைப்பாடுகள் கிடைத்தன. அவற்றில் 591 பிரச்சனைகள் தீர்க்கப்பட்டன. 2013-ம் ஆண்டில் இதுவரை 230 முறைப்பாடுகளில் 145 முறைப்பாடுகளுக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது என்றார் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஆரியதாச குரே.
கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்கப்பட்டபோது, காவல்துறையினர் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுவது தொடர்பில் பொதுமக்களிடமிருந்து நேரடியாக முறைப்பாடு வந்தால் அதுபற்றி விசாரணையை தொடங்க முடியும் என்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிப்பாளர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
இலங்கை அரசியலமைப்பின் 17-ம் திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இலங்கை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரங்கள், 18-ம் திருத்தத்தின் மூலம் குறைக்கப்பட்டன.
அதன்படி, குற்றஞ்சாட்டப்படும் பொலிஸ் உத்தியோத்தர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தேசிய பொலிஸ் ஆணைக்குழு விசாரிக்க மட்டுமே முடியும். ஒழுக்காற்று நடவடிக்கையை எடுப்பதற்கு அந்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை. அத்தோடு பொலிஸ் மா அதிபரின் ஒத்துழைப்பும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்குத் தேவைப்படுகிறது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு சுதந்திரமாக இயங்க முடியாத சூழ்நிலையே இருப்பதாக பல தரப்பிலும் சுமத்தப்படும் குற்றச்சாட்டு பற்றி தமிழோசை கேள்வி எழுப்பியபோது, எந்தவிதமான அழுத்தங்களுமின்றி தாம் செயற்படுவதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஆரியதாச குரே கூறினார்.
இதேவேளை, முறைப்பாடுகளை உரிய முறையில் பதிவுசெய்யாமை, குற்றஞ்சாட்டப்படும் சந்தேகநபர்களுக்கு முறைப்பாட்டாளர்கள் பற்றிய தகவல்களை வழங்குதல், பக்கச்சார்பாக செயற்படுதல், பொலிஸ் காவலில் வைத்து சித்திரவதை விசாரணை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை இலங்கை பொலிசார் மீது கடந்த காலங்களில் மனித உரிமை ஆர்வலர்கள் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிராண்ட்பாஸ் சம்பவத்தில் பொலிஸார் சட்டப்படி கடமையை ஆற்றாது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைதுசெய்யவில்லை என்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிராண்ட்பாஸ் தாக்குதல் சேத விபரங்கள்
கொழும்பு, கிராண்ட்பாஸில் பள்ளிவாசல் தாக்கப்பட்ட தினத்தன்று அந்தப் பிரதேசத்திலுள்ள  வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கலவரம் இடம்பெற்ற தினம் அந்தப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீடுகள் சேதப்படுத்தப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நபர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் 20 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இருப்பினும் இந்தச் சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்துக் கொண்டிருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளார்.
தாக்குதல் நடத்திக் கொண்டே வீடு ஒன்றினுள் நுழைந்த  காடையர்கள் சுமார் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இதேவேளை, தாக்குதலுக்கு உள்ளான வீடுகள் முஸ்லிம்களுக்குரியன என்றும் தாக்கப்பட்ட நபர்களும் முஸ்லிம்களே என்றும் தெரியவந்துள்ளது. முஸ்லிம் ஒருவரின் வீட்டிலேயே நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten