maandag 19 augustus 2013

போர்க்குற்றங்கள் தொடர்பாக பீரிஸிடம் இந்திய அரசு கேள்வியெழுப்ப வேண்டும்!- மன்னிப்புச் சபை கோரிக்கை

நவி.பிள்ளை பக்கச்சார்பின்றி செயற்படுவார்?- எதிர்பார்ப்பில் இலங்கை அரசு
[ திங்கட்கிழமை, 19 ஓகஸ்ட் 2013, 02:36.12 AM GMT ]
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் இருந்து, பாரபட்சமற்ற அறிக்கை ஒன்றை எதிர்பார்ப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நவநீதம்பிள்ளை இந்த மாதம் 25ம் திகதி இலங்கை வரவுள்ளதுடன், தமது விஜயம் குறித்த அறிக்கை ஒன்றினை செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் தாக்கல் செய்யவுள்ளார்.
இந்த அறிக்கையில் அவர் இலங்கையில் தங்கி இருந்து மேற்கொண்ட மனித உரிமைகள் சார்ந்த விடயங்கள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் குறித்த அறிக்கை பரபட்சமின்றி காணப்படும் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சர் மகிந்தசமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நவநீதம் பிள்ளை இலங்கையின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் விஜயம் செய்ய முடியும்.
அவரது விஜயத்தின் போது இலங்கையின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றம் நல்லிணக்க பரிந்துரைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் செயற்பாட்டு குழுவும் தமதுபதிவுகளை மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பாக பீரிஸிடம் இந்திய அரசு கேள்வியெழுப்ப வேண்டும்!- மன்னிப்புச் சபை கோரிக்கை
[ திங்கட்கிழமை, 19 ஓகஸ்ட் 2013, 02:41.48 AM GMT ]
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் இந்தியா இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் கேள்வியெழுப்ப வேண்டும் என்றும்,  மனித உரிமை நிலவரங்கள் தொடர்பில் கட்டாயமாக தலையீடு செய்ய வேண்டும் என்றும்  சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியா வந்துள்ள நிலையில், அவரிடம் இந்திய மத்திய அரசாங்கம், மனித உரிமை நிலவரங்கள், யுத்த குற்றங்கள் மற்றும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பில் கேள்வி எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கிய உறுதி மொழிகளை தொடர்ச்சியாக மீறி வருகிறது.
யுத்த காலத்திலும், யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இதுவரையில் இலங்கையில் நடைபெறகின்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் அரசாங்கத்தினால் மறைக்கப்படுகிறது.
இந்த நிலையில் பாதிக்கப்படுகின்ற இலங்கை மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில், இந்தியா உறுதியாக இருக்க வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கையில் போரின் போதும், போர் நிறைவடைந்த பின்னரும் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார். எனினும் அந்நாட்டின் ஆணைக்குழு விசாரணைகளில் நம்பிக்கை செலுத்த முடியாது என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் போரின் போதும், அதன் பின்னரும் ஏராளாமானோர் கொல்லப்பட்டது, அங்குள்ள மக்களின் ஒரு பிரிவினர் ஒடுக்கப்படுவது, மனித உரிமைகள் மறுக்கப்பட்டு வருவது உள்ளிட்ட பிரச்னைகளை இந்தியா எழுப்ப வேண்டும்.
இலங்கையின் நிகழ்வுகள் குறித்து சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளக் கூடிய நம்பகத்தன்மையும், சுதந்திரமும் உள்ள அமைப்பு மூலம் விசாரணை நடைபெற வேண்டியது அவசியம்.
இது விடயத்தில் இலங்கை அரசு தாங்கள் உறுதியளித்தபடி நடந்து கொள்ளவில்லை என்றும் சர்வதேச மன்னிப்பு சபை கூறியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten