zondag 11 augustus 2013

பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானியா கலந்து கொள்ளக்கூடாது! தமிழ் அமைப்புகள் பாரிய அழுத்தம்


பால்மா தொடர்பில் பேச்சு நடத்த நியூஸிலாந்து அதிகாரிகள் இலங்கை விஜயம்- விசம் கலந்த உணவு, மருந்தை பல்தேசிய நிறுவனங்கள் தயாரிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 11 ஓகஸ்ட் 2013, 02:07.06 AM GMT ]
தமது நாட்டு பால் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து நியூஸிலாந்து அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளனர்.
எனினும் இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் தகவல்கள் எதனையும் உள்ளூர் அதிகாரிகள் வெளியிடவில்லை.
இந்தநிலையில் இலங்கையின் சந்தையில் உள்ள தமது பால்மாக்களில் டிசிடி பதார்த்தம் இல்லை என்று பொன்டேரா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐடிஐ நிறுவனம் தமது பால்மாக்களில் டிசிடி பதார்த்தம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளமை பொய்யான தகவல் என்றும் பொன்டேரா குறிப்பிட்டுள்ளது.
விசம் கலந்த உணவையும், மருந்தையும் பல்தேசிய நிறுவனங்கள் தயாரிப்பு- சுகாதார அமைச்சர்
பல்தேசிய நிறுவனங்கள் விசம் உள்ளடங்கிய உணவு வகைகளையும், அதனால் ஏற்படக் கூடிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய மருந்து பொருட்களையும் உற்பத்தி செய்கின்றன.
உணவுப் பொருட்களில் உள்ளடக்கியுள்ள விச இரசாயனங்களினால் ஏற்படக் கூடிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய மருந்து வகைகள் தயாரிக்கப்பட்டு இலங்கைக்கு விநியோகம் செய்யப்படுவதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உணவுப் பொருள் உற்பத்தியில் ஈடுபடும் பல பல்தேசிய நிறுவனங்கள் கிருமிநாசினிகள், மருந்துப் பொருட்கள் போன்றவற்றையும் உற்பத்தி செய்கின்றன.
இதனால், நாட்டில் இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களை பரிசோதனை செய்ய அதி நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வு கூடமொன்று அவசியம். பொரளை பிரதேசத்தில் இந்த ஆய்வு கூடம் அமைக்கப்பட உள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி அதன் ஒத்துழைப்புடன் அதி நவீன ஆய்வு கூடம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு அதிகாரிகளுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானியா கலந்து கொள்ளக்கூடாது! தமிழ் அமைப்புகள் பாரிய அழுத்தம்
[ ஞாயிற்றுக்கிழமை, 11 ஓகஸ்ட் 2013, 01:59.33 AM GMT ]
பொதுநலவாய அமைப்பு மாநாட்டில் பிரித்தானியா கலந்து கொள்ளக்கூடாது என பிரித்தானிய தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுக்க ஆரம்பித்துள்ளன. இதனை முன்வைத்து லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தவும் அவை திட்டமிட்டு வருகின்றன.
ஏற்கனவே தமிழ் அமைப்புகள் சில விடுத்த இது தொடர்பான கோரிக்கையை பிரித்தானிய அரசு நிராகரித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் இம்முறை புதிதாக அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து அதே கோரிக்கையை முன்வைத்துள்ளன.
அரசின் சில முக்கிய அமைச்சர்களைச் சந்திக்கவும் தமிழ் அமைப்புகள் திட்டமிட்டு வருகின்றன. பிரித்தானிய தமிழர் பேரவையும் நாடு கடந்த தமிழீழ அரசும் இதில் தற்போது மும் முரம் காட்டி வருகின்றன.
தமிழருடனான நல்லிணக்க நடவடிக்கைகள் எதனையும் இலங்கை அரசு மேற்கொள்ளவில்லை.
அதேநேரத்தில் போர் முடிந்து நான்கு ஆண்டுகளைக் கடந்த போதும் தமிழர் பிரச்சினைக்கு எந்த ஒரு தீர்வும் இதுவரை காணப்படவும் இல்லை. மொத்தத்தில் சர்வதேசத்திற்கு இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தமிழரின் வாழ்க்கைத் தரம் அங்கு தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்நிலையில் கொழும்பில் பொதுநலவாய மாநாட்டை நடத்துவது அதன் முக்கிய குறிக்கோளை மீறிய செயலாகும். அதனால் பொதுநலவாய அமைப்பு மாநாட்டை வேறொரு நாட்டுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.
அவ்வாறு கொழும்பில் மொநாடு நடத்தப்படுமேயானால் பிரித்தானியா அதில் கலந்துகொள்ளக்கூடாது எனப் பிரித்தானியா தமிழ் அமைப்புகள் அனைத்தும் இணைந்து குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளன.
பிரித்தானியாவுக்கு அழுத்தம் கொடுப்பதில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரித்தானிய தமிழர் பேரவை பிரதிநிதி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten