முதலாவது கல்வி. இரண்டாவதும் கல்வி. மூன்றாவதும் கல்வி. இந்த மூன்று படிகளும்தான் மலையக மறுமலர்ச்சியின் முதல் மூன்று முக்கிய படிகள்.
இந்த முதல் மூன்று படிகளை கடக்க கற்று கொடுத்து விட்டால் மலையகத்தில் இன்று எழுந்து வரும் இளைய தலைமுறை சுயமாகவே பொருளாதார வளர்ச்சி படிகளை வெற்றிகரமாக ஏறி கடந்து வெற்றிக்கொடி நாட்டி விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் எனக்கு இல்லை.
அந்த கல்வி வளர்ச்சியை கல்வியலாளர்களாலேயே புரிந்துகொண்டு முன்னேடுக்க முடியும் என்பதாலேயே படித்த நேர்மையான இளைஞர்களை மலையகத்தின் நுவரெலியா, கண்டி மாவட்டங்களில் நானே நேரடியாக தெரிவு செய்து நமது கட்சியின் சார்பில் களமிறக்கியுள்ளேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் ராஜ்குமார், சந்திரகுமார், முன்னணியின் மாநகரசபை உறுப்பினர்கள் சின்னத்தம்பி பாஸ்கரா,லோரன்ஸ் பெர்னாண்டோ ஆகியோரும் கலந்துகொண்ட மஸ்கெலிய அச்சினிகா விடுதியில் இன்று நடைபெற்ற ஜனநாயக மக்கள் முன்னணியின் கூட்டத்தில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இன்று கொழும்பில் வர்த்தக துறையில் மலைநாட்டு இளைஞர்கள் சொந்த உழைப்பால் உயர்ச்சி கண்டு வளர்ந்துள்ளார்கள். ஏனைய சமூகத்து இளைஞர்களுக்கு கிடைப்பதைபோல், அரசாங்கத்தின் கடனுதவிகளும், வரிச்சலுகைகளும், காணி நிலங்களும் நம்மவர்களுக்கு கிடைப்பதில்லை. எனவே முழுக்க, முழுக்க சொந்த முயற்சியினாலேயே தலைநகரம் வந்து மலையக இளைஞர்கள் வெற்றி கண்டுள்ளார்கள்.
தோட்ட தொழில் துறையில் தொழில் செய்ய அனைத்து மலையக தமிழ் இளைஞர்களும் தயாராக இல்லை. மலையகத்தில் ஏனைய நவீன வர்த்தக பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களை மலையகத்திலேயே நிறுத்தி வைத்து வளர்த்து விடுவதற்கு மலையகத்தின் பாரம்பரிய தலைமைகளுக்கு முடியவும் இல்லை.
இதுதான் தலைநகரை நோக்கி மலையக இளைஞர் படையெடுப்பதன் நோக்கம் ஆகும். அவர்களுக்கு தலைநகரில் உறுதியான, தன்மானமிக்க தலைமையை நமது கட்சி வழங்குகின்றது.
கொழும்பில் புறக்கோட்டையில் பிரதான வீதி,குறுக்கு தெருக்கள், செட்டியார் வீதி, பழைய சோனக தெரு உட்பட மாநகரம் முழுக்க வர்த்தக தொழில் அதிபர்களாக இருக்கும் பலர் நானறிந்த நண்பர்கள். மலையகத்திலிருந்து இளைஞனாக இங்கு வந்த, தோட்ட தொழிலாளியின் பிள்ளையான நான், இன்று சொந்த உழைப்பினால் முன்னேறியுள்ளேன் என என்னிடம் அவர்களில் சிலர் சொல்லும்போது அவர்களை பார்த்து எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும்.
இங்கு நாம் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள கொள்ள வேண்டும். நமது இளைஞர்கள் கடுமையான உழைப்பாளிகள். இதனாலேயே மாற்று இனத்தவர்கள்கூட நம்மவர்களை நாடுகின்றார்கள். எனது சிங்கள, முஸ்லிம் நண்பர்கள் இதை எனக்கு சொல்லியுள்ளார்கள்.
எனவே உழைப்பில் கெட்டிக்காரர்களான நம்மவர்களுக்கு உரிய வாய்புகள் வழங்கப்பட்டால் அவர்கள் கல்வி அறிவிலும் கொடி கட்டி பறப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இன்று இந்த நாட்டில் வாழும் எந்த ஒரு சமூகத்துடனும், மலையக இளைஞர்கள் கல்வித்துறையிலும் ஆரோக்கியமாக போட்டி போட்டுகொண்டு வளரக்கூடியவர்கள் என நான் திடமாக நம்புகின்றேன்.
அவர்களுக்கு தேவை ஒழுங்கான நவீன கல்வி கட்டமைப்பாகும். அது இன்று இங்கே இல்லை. நுவரெலியாவில் ஒரு தமிழ் தேசிய பாடசாலை இல்லை. இருக்கின்ற பாடசாலைகளை தேசிய கல்லூரிகளாக தரமுயர்த்த இன்றுள்ள மலையக தலைவர்கள் விரும்புவது இல்லை.இது ஏன் தெரியுமா?
தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டால், அந்த பாடசாலைகள் தேசிய கல்வி அமைச்சுக்கு கீழ் வந்துவிடும். அப்படியானால், மாகாண கல்வி அமைச்சுகளை வைத்துகொண்டு, அந்த பாடசாலைகளில் இவர்களுக்கு நாட்டாண்மை செய்ய முடியாது.
இதனால்தான் இவர்கள் மலையக தமிழ் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த விடுவது இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
நான் அரசியலில் நீண்ட நாள் இருக்க போவது இல்லை. நான் விடை பெறுவதற்கு முன்னர் மலையகம் புதிய படித்த இளைஞர்களின் கரங்களுக்கு மாற்றப்படுவதற்கு என்னால் இயன்ற அனைத்தையும் செய்ய விரும்புகின்றேன்.
அதிலும் கல்வியை பற்றி தெரிந்து அந்த துறையிலேயே இருக்கும் கல்வியியலாளர்களுக்கும், இளைஞர்களுக்கும் அதிகாரத்தை பெற்றுகொடுக்க விரும்புகிறேன்.
மோசடிகாரர்களுக்கு பதவிகளை பெற்றுக்கொடுக்க நான் அரசியல் வியாபாரியல்ல. எனக்கொரு நேர்மையான நீண்ட வரலாறு இந்நாட்டில் இருக்கின்றது.
இதனால்தான் நுவரெலியாவில் சந்திரகுமார், ராஜ்குமார், கண்டியில் வேலு குமார் ஆகிய படித்த இளைஞர்கள் எங்கள் கட்சி சார்பாக போட்டியிடுகின்றார்கள்.
Geen opmerkingen:
Een reactie posten