maandag 5 augustus 2013

வடக்கில் இராணுவ அச்சுறுத்தல் தொடர்வதாக பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளிடம் ஐ.தே.க எடுத்துரைப்பு!


வடக்கு மாகாணசபை தேர்தல் நீதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதற்கு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளிடம் ஜ.தே.கட்சியின் வேட்பாளர்கள், வடக்கில் இராணுவ அச்சுறுத்தல்கள் தொடர்வதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
பொதுநலவாய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான ஆலோசகரும், ஆசியா, ஐரோப்பா நாடுகளிற்கான செயலாளருமான அம்னா ஜெஸ்ரி, பொதுநலவாய நாடுகளின் ஜனநாயக விவகாரங்களுக்கான தலமை ஆலோகர் மார்சின் கெசி ஆகியோர் நேற்று யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்து,
ஜ.தே.கட்சியின் வேட்பாளர்களைச் சந்தித்து சமகால தேர்தல் நிலமைகள் குறித்துக் கேட்டறிந்து கொண்டுள்ளனர்.
இதன்போதே மேற்படி விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து கட்சியின் மாவட்ட அமைப்பாளர் என்.விஸ்ணுகாந்தன் தெரிவிக்கையில்,
வடக்கில் அரசாங்க கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளுடைய வேட்பாளர்கள் அச்சுறுத்தப்படும் சம்பவங்கள் இராணுவத்தினராலும், அரச கட்சியின் கையாட்கள் மூலமாகவும் மேற் கொள்ளப்படுவது தொடர்பில் எமது கட்சியின் வேட்பாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். மேலும் தேர்தல் காலத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள்,
தீவிரப்படுத்தப்படுவதுடன், வாக்களிப்பு நிலையங்கள், வாக்கு எண்ணும் நிலையங்கள் போன்றவற்றுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவேண்டும் என ஜ.தே.கட்சி வேட்பாளர்கள் மேலும் கேட்டுள்ளனர். இதற்கு பதிலளித்த பொதுநலவாய நாடுகளின் அதிகாரிகள் இவ்விடயங்கள் குறித்துத் தேர்தல்கள் ஆணையாளருடன்,
பேசி தீர்வு காணப்படுவதுடன், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கும் தாம் உதவுவதாக தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten