[ சனிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2013, 09:26.04 AM GMT ]
மன்னார் விடத்தல் தீவைச் சேர்ந்த யுவதி ஒருவர் கடந்த வியாழக்கிழமை காணாமல்போயுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார் விடத்தல் தீவைச் சேர்ந்த ஏ.சுகன்னியா (வயது-17) என்ற யுவதியே காணாமல் போயுள்ளார்.
தனது உறவினர்களுடன் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த யுவதி, தனது பெற்றோரை பார்ப்பாற்காக நேற்று முன்தினம் மன்னார் பேருந்து நிலையத்திற்கு உறவினர் ஒருவருடன் வந்துள்ளார்.
அரச பேரூந்து தரிப்பிடத்தில் மதியம் 1 மணியளவில் குறித்த யுவதி நின்ற போது, அவரை அழைத்து வந்த உறவினர் கடைக்குச் சென்று விட்டு மீண்டும் வந்தபோது யுவதியை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, எங்கு தேடியும் யுவதியைக் காணாத நிலையில், பெற்றோர் மற்றும் உறவினர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் நேற்று காலை முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த யுவதியும்,அவருடய பெற்றோர்களும் இந்தியாவில் வசித்து வந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மீண்டும் இலங்கை வந்து விடத்தல் தீவில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் பொலிஸார் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அரசு போடுகிற எல்லா தாளத்துக்கும் நாங்கள் காவடி ஆட முடியாது!- ஹக்கீம் பேட்டி
[ சனிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2013, 09:34.45 AM GMT ]
முஸ்லிம் காங்கிரஸ் பதவிகளுக்காக பிச்சைக்கேட்டு நிற்கும் ஒரு கட்சி அல்ல. அரசு போடுகிற எல்லா தாளத்துக்கும் நாங்கள் காவடி ஆட முடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து வெளியாகும் பிரபல தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் வழங்கிய நேர்காணலின் முழுவிபரம் வருமாறு
கேள்வி: நடைபெறவுள்ள மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கான காரணம் என்ன?
பதில்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தனித்துவத்தை பாதுகாப்பதற்காகவும் சமூகத்தின் நலனை கருத்திற்கொண்டுமே நாம் இத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்தோம். எந்தவொரு தேர்தலிலும் நாம் தனித்து போட்டியிட்டால் பல்வேறு விமர்சனங்கள் எழுகின்றன. நாம் இவ்வாறு தனித்து போட்டியிடுவதால் கூட்டமைப்பிற்கு சாதகமாகவும் அரசாங்கத்திற்கு பாதகமாகவும் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். நான் மேலே கூறியது போல காங்கிரஸின் தனித்துவம் மற்றும் சமூகத்தின் நலனை பாதுகாப்பதற்கான சரியான அணுகுமுறையாக இதனை கருவதனாலேயே நாம் இத்தீர்மானத்தை எடுத்தோம்.
தெற்கில் இருக்கின்ற இரண்டு மாகாணங்களில் நாங்கள் போட்டியிடும் போது அரசாங்கத்துக்கு சாதகமானதாகவும் ஐ.தே.க விற்கு பாதகமானதாகவும் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தமையும் சுட்டிக்காட்ட வேண்டும். இதனை அடியொட்டி முஸ்லிம் காங்கிரஸை பிளவுபடுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான குள்ளநரிகளின் தந்திரத்திற்கு அஞ்சுகின்ற ஒரு கட்சியாக மு.கா இருக்காது. எமது கட்சியின் ஒற்றுமையை விலைபேசி மாற்றுத் தரப்புக்களுக்கு அங்கத்தவர்களை தாரை வார்த்து கொடுக்கின்ற சில சகுனி வேலைகள் கட்சிக்குள்ளேயே இடம்பெறுகின்ற ஒரு சூழல் குறித்து கட்சி ஆதரவாளர்கள் கவலையும் ஆத்திரமும் அடைகின்றார்கள். அது சம்பந்தமாக நாம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் ஆரம்ப காலத்தில் இருந்தே இவ்வாறான துரோகத் தனங்களை தவிர்க்க முடியாதளவிற்கு ஒவ்வொருவருக் குமிடையில் பதவி ஆசைகள் தத்தமது சொந்த நலன்கள் குறித்த விருப்பங்களும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
கேள்வி: தனித்து போட்டியிடும் உங்களது நிலைப்பாட்டுக்கு அரசாங்கம் எவ்வித கருத்தையும் கூறவில்லையா?
பதில்: ஜனாதிபதிக்கு இது சம்பந்தமாக எங்களது பக்கத்தில் உள்ள நியாயங்களை எடுத்துக் கூறினோம். கிழக்கு மாகாணத் தேர்தலில் மு.கா வை அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்வதற்கு முயற்சித்ததுடன் கட்சியை பலவீனப்படுத்துவதற்கான விட்டுக்கொடுப்புக்கள் இடம்பெறும் என எதிர்ப்பார்த்தார்கள், அந்த எதிர்ப்பார்ப்பு நடக்கவில்லை. அதனடிப்படையில் நாம் தனித்து போட்டியிடுவதனை அங்கீகரிக்க வேண்டிய நிலைமை அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. இறுதியாக ஆட்சியை தீர்மானிக்கும் ஒரு சக்தியாக மு.கா இருந்தது.
ஆனால், வடக்கை பொறுத்தமட்டில் கூட்டமைப்பு அதிக பெரும்பான்மையை பெறக்கூடிய நிலைவரம் இருக்கின்றது என்பது கண்கூடு. இது சம்பந்தமாக அரசதரப்பில் கள யதார்த்த நிலையை உணர்ந்தவர்கள் தெரிந்து வைத்திருக்கின்றார்கள் என்பது எல்லோருக்கும் புரிந்த விடயம். அந்த அடிப்டையில் நாம் தனித்து போட்டியிடுவதனால் பெரிய அரசியல் சாகசங்களை செய்யப் போவதும் இல்லை. இதனால் பாரிய மாற்றங்கள் ஏற்படுவதும் இல்லை என்பதும் கண்கூடு.
மு.கா. வை எவ்வாறு அரச தரப்பில் இணைத்துக்கொண்டு எங்களுடைய முதுகில் சவாரி செய்து தங்களுடைய உறுப்பினர்களை அதிகரித்து கொள்ள அரச தரப்பு முஸ்லிம் அமைச்சர் ஒருவர் முயற்சிக்கிறார். அதற்கு உடந்தையாக அரச தரப்பில் அபிவிருத்தி அமைச்சர் ஒருவரும் முழு ஒத்தாசை புரிகின்றார். இந்த விடயங்கள் எங்களை பலவீனப்படுத்துவதற்கான முயற்சியின் அங்கமாகத்தான் அரங்கேறுகின்றது என்று நாம் நினைக்கின்றோம்.
இவ்வாறான வியாக்கியானங்களில், உள்ளே இருந்து கொண்டு கட்சியின் தவிசாளர் போன்றவர்கள் தலையிடுவதானது மக்கள் மத்தியில் எடுபடாது என்பதனை தெரிந்துக்கொள்ள வேண்டும். கட்சி ஒரு தீர்மானத்திற்கு வந்தப் பின்னர், அது சம்பந்தமாக மாற்றுக் கருத்துக்களை கூறுவது கட்சியின் கட்டுப்பாட்டை மீறுகின்ற செயற்பாடு என்பதனை அவர் கருத்திற்கொள்ள வேண்டும்.
கேள்வி: கிழக்குத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு இறுதிநேரத்தில் அரசாங்கத்துடன் இணைந்தீர்கள். வடக்குத்தேர்தலில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படும் என்று அமைச்சர் நிமால் ஸ்ரீ பால டி சில்வா அண்மையில் கூறியிருந்தார் இதுபற்றி...?
பதில்: எமது சார்பில் கருத்து கூறுவதற்கு நிமலுக்கு எந்தவொரு அதிகாரமும் கிடையாது. நாம் தனித்துவமான ஒரு அரசியல் இயக்கம். இத்தேர்தலில் அரசாங்கக் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்பது பற்றி அவர் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். கள யதார்த்தங்கள் எவ்வாறு இருக்கின்றது என்பதை அரசியல் அவதானிகள் மிகத் .தெளிவாக அடையாளம் கண்டிருக்கின்றார்கள்.
வடக்கில் அமையவுள்ள மாகாணசபையில், குறிப்பாக வடக்கு முஸ்லிம்களுடைய அரசியல் அபிலாஷைகளுக்கு ஒரு குரல் இருக்க வேண்டும் என்பது எமது விருப்பமே தவிர ஏதாவது ஒரு தரப்பின் கைக்கூலியாக அவர்களுக்கு எடுபிடியாக இருக்க வேண்டும் என்பது எமது நோக்கம் அல்ல. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அரசு போடுகின்ற எல்லா தாளங்களுக்கும் நாங்கள் காவடி ஆட வேண்டும் என்று எதிர்ப்பார்த்தால் அது சாத்தியப்படாது.
கேள்வி: தேர்தலில் தனித்து போட்டியிடுவதால் அரசாங்கத்தில் இருந்து உங்களை விலக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது. அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் உங்களது நிலைப்பாடு எவ்வாறு இருக்கும்?
பதில்: முஸ்லிம் காங்கிரஸ் பதவிகளுக்காக பிச்சைகேட்டு நிற்கும் ஒரு கட்சி அல்ல. இந்த அரசாங்கத்துடன் நாங்கள் இணைவதற்கான வேண்டுகோள் விடுக்கப்பட்ட போது அன்று இருந்த கள நிலைவரத்தின்படி இந்த அரசாங்கத்திற்கு 2/3 பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்காக எங்களுடைய 8 ஆசனங்கள் அவர்களுக்கு அவசியமானதொன்றாக இருந்தது. அந்த எட்டு ஆசனங்களிலும் பிளவுகள் ஏற்படாமல் ஒட்டுமொத்தமாக ஆட்சி பேரம் பேசும் சக்தியை பிரயோகிக்கக் கூடிய வலிமையை குறைந்தபட்சம் 2/3 தேவைப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினோம்.
18 ஆவது திருத்தச் சட்டத்திற்கு நாம் ஆதரவளிக்கவில்லையென்றால் இன்று ஜனாதிபதிக்கு இந்த வலிமை இருந்திருக்காது. ஜனாதிபதிக்கு வலிமையை சேர்க்கும் இந்த கைங்கரியத்தைச் செய்துவிட்டு, எங்களிடம் இருந்து அவர்கள் இந்த உதவியை அடைந்து விட்டு அவர்களாக விரும்பினால் எங்களை அரசாங்கத்தில் இருந்து அகற்றினாலேயேயொழிய நாங்களாக அதிலிருந்து வெளியேற வேண்டிய அவசியம் இல்லை என்பது எமது தெளிவான நிலைப்பாடு.
கேள்வி: உங்களது கட்சிக்குள்ளேயே தவிசாளரும் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதுதான் சிறந்தது என்றும் இதனால் கூட்டமைப்பிற்கு பாதிப்பு வராது என்றும் கூறியிருந்தார். மத்தியகுழு தீர்மானித்தபின்னர் அவர் இவ்வாறான கருத்துக்களை கூறுவது பற்றி...?
பதில்: கூட்டமைப்பை சமாளிப்பதற்காகவே இந்த விடயத்தை அவரது பாணியில் கூறியிக்கிறார் ஆனால் எங்களுடைய கட்சி எடுத்த தீர்மானம் கூட்டமைப்பின் சாதக, பாதக விடயங்களை அடிப்படையாக வைத்து எடுத்த தீர்மானம் அல்ல. எமது கட்சி அதன் இருப்பு சம்பந்தமான விடயத்தில் எமது கட்சி உயர்பீடத்தில் இருக்கின்ற கரிசனையும் அக்கறையும் கொண்டதே இத்தீர்மானமே தவிர வேறு எந்த நோக்கமும் அல்ல.
கேள்வி: பள்ளிவாசல்கள் உடைப்பு, முஸ்லிம் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கும் போது நீங்கள் தொடர்ந்து அரசாங்கத்தில் இருப்பதால் மக்கள் உங்கள் மீது அதிருப்தியடைய மாட்டார்களா?
பதில்: மு.கா அரசுக்கு உள்ளே இருந்துகொண்டு நடத்துகின்ற போராட்டங்கள் பற்றி நாம் வெளியில் வந்து தம்பட்டம் அடிப்பதில்லை. இவ்விடயம் சம்பந்தமாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மிகவும் காரசாரமாக போராட்டங்களை செய்து வருகின்றேன். அரசின் உள்ளே இருக்கின்ற உறுப்பினர்களுக்கு இதுபற்றி நன்றாகவே தெரியும். எமது கட்சியின் மேல்மட்ட உறுப்பினர்களுக்கும் இது தெரியும்.
அண்மைக்காலமாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற சமய, கலாசார நடவடிக்கைகள் ஒரு அச்சுறுத்தல் பாணியில் தொடர்கின்ற இந்த அநியாயங்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். அதற்கான ஒரு சாத்வீகமான போராட்டத்தை மு.கா முன்னெடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இப்போது நெருங்கி இருக்கின்றது.
இதுபற்றி நாம் மிகவும் பக்குவமாகவும் நேர்மையாகவும் செய்யும் இந்த செயற்பாட்டை அரசாங்கத்திறகு எதிராக நாம் செய்யும் முயற்சி என சிலர் சித்தரிக்கலாம். ஆனால், அரசுக்குள் இருந்துகொண்டு எமது சமூகத்துக்காக போராடுகின்ற ஒரே சக்தி மு.கா வுக்கு மாத்திரமே இருக்கின்றது என்று மக்கள் புரிந்துக்கொண்டால் சரி.
கேள்வி: ஆம்! தந்தை செல்வாவின் புத்தக வெளியீட்டு நிகழ்வின்போது இது பற்றி கூறியிருந்தீர்கள். அப்படியாயின் உங்களது சாத்வீக போராட்டம் எவ்வாறானதாக அமையும்?
பதில்: முஸ்லிம் சமூகத்திற்கும் ஏனைய சிறுபான்மை சமூகங்களுக்கும் எதிராக சில தீவிரவாத இயக்கங்கள் முன்னெடுக்கின்ற இந்த விடயங்களை கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது என்பதற்காக அவர்கள் அதட்டல் பாணியில், மற்றுமொரு சமூகத்தை இழிவுபடுத்தும் நிலைமை ஆபத்தானது. இது சம்பந்தமாக அரசாங்கம் கடைபிடித்து வருகின்ற மெத்தனப்போக்கினால் நாம் விசனமடைகின்றோம். எனினும் எமது இப்போராட்டம் எல்லாதரப்புகளின் ஒத்துழைப்பையும் கொண்ட ஒரு போராட்டமாகவே இருக்கும்.
கேள்வி: உங்களது இப்போராட்டத்திற்கு அரசாங்கம் செவிசாய்க்கும் என நீங்கள் நினைக்கின்றீர்களா?
பதில்: அடக்குமுறை பிரயோகித்து சாத்வீக போராட்டத்தை அழித்துவிடலாம் என்று அரசு நினைத்தால் அது எந்த விதத்தில் சாத்தியப்படும் என்பதை அரசாங்கம் எடை போட்டுப் பார்க்கலாம். இவ் விடயத்தில் அரசாங்கம் ஓரளவுக்காவது பொதுவாக நடந்து கொள்ளும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. எனினும் இது ஓர் அரச விரோத நடவடிக்கை அல்ல.
கேள்வி : தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியிருக்கின்றீர்களா?
பதில்: ஆம்! நான் பல தடவை கூறியிருக்கின்றேன். ஆனால் எமக்கு திருப்திகரமான பதில் எதுவும் கிடைக்கவில்லை. நான் அடிக்கடி முரண்பட்டும் உள்ளேன். இன்று இருக்கின்ற தெற்கு தலைமைகள் மத்தியில் எந்த பௌத்த தீவிரவாத அமைப்பும் அவருக்கு இருக்கின்ற செல்வாக்கை பறித்து வேறு எந்த திக்குக்கும் கொண்டு போவதற்கு முடியாதளவிற்கு தெற்கில் இருக்கின்ற சிங்கள முஸ்லிம் மக்களின் அதீத நம்பிக்கையைப்பெற்ற ஒருவராக இந்த ஜனாதிபதி இருக்கின்றார் என்பதை சாதகமாக பார்க்கின்ற ஒரு கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்கின்றது.
ஆனால், ஜனாதிபதி இந்த தீவிரவாத அமைப்புக்களின் செயற்பாடுகளைப் பற்றி அதனுடைய விபரீதங்களைப் பற்றி அறிந்து வைத்திருப்பதாகவும் தெரிகின்றது. ஆனால், களத்திலேயே இந்த சக்திகளின் கை மேலோங்கி வருவதாகவே சிறுபான்மை சமூகங்கள் அச்சமடைகின்றன. பீதியடைகின்றன என்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
எனவே இதனை ஒரு காத்திரமாக தலையிட்டுச் செய்வதற்கு தக்க தருணம் ஜனாதிபதிக்கு வந்திருக்கின்றது என்பது எமது நிலைப்பாடு. ஏதோ ஒரு காரணத்தினால் போதியளவு இவ்விடயத்தில் தலையிடுவதற்கு தயக்கம் காட்டுகின்றார் என்பது எமக்குத் தெரிகின்றது.
நாம் தனித்து போட்டியிடுகின்ற போது, எதிர்க்கட்சியோடும் மாற்றுக்கட்சிகளுடனும் ஆட்சியை கவிழ்ப்பதற்கான ஈடுபாட்டுக்கான ஒரு முதல் அங்கமாக இந்த விடயத்தை செய்கின்றோம் என்கின்ற ஒரு பீதி மனப்பான்மையுடன் அரசாங்கம் எங்களை பார்க்கின்றது. சதி செய்து ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்கிற ஒரு தேவைப்பாடு எமக்கு கிடையாது.
நாட்டில் இருக்கின்ற இந்த அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் 18வது சீர்திருத்தத்தை நிறைவேற்றிக் கொடுப்பதன் மூலம் ஒரு அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக் கொடுத்த கட்சி எமது கட்சி. அவரை பலவீனப்படுத்த வேண்டும் என்ற ஒரு சதி முயற்சியில் நாங்கள் ஒருபோதும் இறங்கியது கிடையாது இறங்க வேண்டிய அவசியமும் இல்லை.
கேள்வி: 13 ஆவது திருத்த விடயத்தில் உங்கள் கட்சி தொடர்ந்து உறுதியான நிலைப்பாட்டில் இருக்குமா?
பதில்: நிச்சயமாக. எமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது. முஸ்லிம் காங்கிரஸ் அதிகாரப்பகிர்வின் உயிர் நாடியாக இருக்கின்ற 13வது திருத்தச் சட்டத்தில் கூட்டல் எதுவும் இல்லாவிட்டாலும் கழித்தல் எதுவும் இடம்பெற்று விடக்கூடாது என்ற விடயத்தில் நாம் கவனமாக இருக்கின்றோம்.
அடிக்கடி அரசாங்கம் 13+என்று சொல்லி வந்திருக்கின்றது. இப்பொழுது 13வது திருத்தச் சட்டத்தை இல்லாது செய்ய வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் அரசாங்க தரப்புக்குள்ளிருந்து சிலரும் ஜனாதிபதியின் சகோதரர்கள் ஒரு சிலரும் கூடபேசி வருவது குறித்து நாம் மிகவும் அவதானமாக இருக்கின்றோம். இவ்விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் எந்த விட்டுக்கொடுப்புக்களையும் செய்யாது.
கேள்வி: ஆனால், இவ்விடயத்தில் உங்களது கட்சியிலுள்ள சிலர் அரசாங்கத்துக்கு ஆதரவாக செய்படுகின்றார்களே?
பதில்: இவ்விடயத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை அவர்கள் மீறினால் மக்கள் மத்தியில் செல்லாக்காசாக போய்விடுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்த விடயம். அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு மறைமுகமாக எவ்வித உத்தரவாதங்களும் அரசாங்கத்துக்கு கொடுத்து எல்வாவற்றையும் அனுபவித்துக் கொள்ளலாம் என்ற ஆசை இருந்தாலும் அவர்களால் அவ்வாறான நடவடிக்கைக்கு போக முடியாதளவு மக்கள் இவ்விடயத்தில் மிகத் தெளிவாக இருககின்றார்கள் என்பதில் சந்தேகமில்லை.
கேள்வி: வடக்குத்தேர்தலில் நீங்கள் தனித்து போட்டியிடும் நிலையில், காத்தான்குடியில் சில முஸ்லிம் அமைப்புகள் ஒண்றிணைந்து கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குகின்றதே? இதுபற்றி உங்களது நிலைப்பாடு என்ன?
பதில்: தமிழ், முஸ்லிம் மக்களிடையே நல்லுறவை வளர்க்க வேண்டும் என்ற ஒரு முயற்சியில் ஈடுபடுவதாக சொல்கின்றார்கள். முஸ்லிம்களின் அதிகபட்ச ஆதரவைப்பெற்ற மு.கா என்பது கூட்டமைப்புடன் இணைந்து ஒரு போனஸ் ஆசனத்திற்காக பிச்சை கேட்பது போல அரசியலை செய்ய முடியாது. அப்படி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஒன்று இல்லாத கட்சி இது.
ஆனால் தமிழ், முஸ்லிம் தரப்புகளுக்கிடையிலான ஒரு இணக்க அரசியல் என்பது ஒரு தேர்தலில் ஒரு அணிக்கு ஆதரவு வழங்குவதால் மாத்திரம் தான் எற்படும் என்று சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.
கேள்வி: ஜனாதிபதிக்கும் உங்களுக்கும் உள்ள உறவு எவ்வாறு இருக்கின்றது.?
பதில்: ஒரு புறத்தில் நெருக்கமும் மறுபுறத்தில் விரிசலுமான உறவாக இருக்கின்றது தனித்துவமான ஒரு அரசியல் இயக்கம் ஜனாதிபதியின் தேசிய அரசியலுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்ப்பார்க்கவில்லை.
எடுத்த விடயத்திற்கெல்லாம் ஆமாம் சாமி போடுகின்ற ஒரு கட்சியாக அது இருந்தால் நாங்கள் சரணாகதி அடைய வேண்டும் என்று பார்க்கப்பட்டு எங்களுக்கு நாங்களே குழிவெட்டிக் கொள்ளும் நிலைமையாகத்தான் இருக்கும். பொறுப்புள்ள நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில் பலமான பொறுப்புள்ள ஒரு அரசியல் கட்சி தன்னுடைய தாளத்துக்கு ஆட வேண்டும் எனறு அவர் எதிர்ப்பார்க்க மாட்டார்.
அவ்வப்போது முரண்பாடுகள் வருகின்ற தருணம் எல்லாம் எங்களால் முடியுமானளவு எமது நியாயப்பாடுகளை தெளிவுபடுத்துவோம். சில சந்தர்ப்பங்களில் அவருக்கு பூரண உடன்பாடு இல்லாது விட்டாலும் எமது பக்கத்தில் உள்ள நியாயங்கள் குறித்த ஒரு விதமான உடன்பாடு மாத்திரம் அல்ல மு.கா. போன்ற ஒரு மக்கள் இயக்கம் தன்னோடு இருப்பது போன்ற அரசியல் பலத்தை அவர் குறைத்து மதிப்பிடவில்லை என்பது அவர் எம்முடன் எவ்வாறு முரண்பட்டாலும் இயன்றவரை அவற்றை அவர் சமாளித்துப் போகவேண்டிய ஒரு நிலைமை உருவாகிவிட்டது என்பதையிட்டு நம் திருப்தி அடைகின்றோம்.
Geen opmerkingen:
Een reactie posten