[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 07:19.26 AM GMT ]
சிறிலங்கா சுகந்திரக் கட்சியின் தேர்தல் சுவரொட்டிகளை இனம் தெரியாத நபர்கள் கிழித்து எறிந்துள்ளதுடன் கழிவு எண்ணை பூசி அழித்துள்ளதாகவும், தங்கள் தேர்தல் நடவடிக்கைகளுக்காக யாழில் வடகைக்கு எடுக்கப்பட்ட வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்
வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் பாரதூரமான வன்முறைச் சம்பவங்களோ, முரண்பாடுகளோ இதுவரைக்கும் எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் பதிவு செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களும் குழப்பங்களும் ஏற்படக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளோம்.
தரம் –5 மாணவர்களின் புலமைப் பரிசில் பரீட்சை, உயர்தர மாணவர்களுக்கான இறுதிப் பரீட்சை, நல்லூர் உற்சவ காலம் மற்றும் வடக்கு மாகாண சபைத் தேர்தல் இவை எல்லாம் ஒரே நேரத்தில் வருவதனால் பொலிஸார் அதிகமானோர் கடமைக்குத் தேவையாகவுள்ளது.
இருப்பினும் எம்மிடம் உள்ள ஆளணியைக் கொண்டு நாம் கடமைகளைப் பிரித்துக்கொடுத்துள்ளோம்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். வன்முறைச் சம்பவங்கள் அதிகமாக இடம்பெற வாய்ப்புள்ளமையினால் பொலிஸாரை யாழ்.மாவட்டச் செயலகத்தைச் சுற்றிக் கடமையில் ஈடுபடுத்தியுள்ளோம்.
அதேபோன்று பல சோதனைச் சாவடிகளையும் புதிதாக அமைத்துள்ளோம்.
மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுவர். யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களிலும் தேர்தல் காலத்தில் ஏற்படும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்வதற்கென விசேட பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டு, அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியுள்ளோம். அப் பிரிவுக்குத் தொலைத் தொடர்பு வசதிகளையும் இலகுபடுத்திக் கொடுத்துள்ளோம் என யாழ். பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
வடக்கு இராணுவ கட்டளை அதிகாரி மோசடியாளர்! அவரை பணியிலிருந்து நீக்கவிருந்தேன்!- சரத் பொன்சேகா
[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 06:57.51 AM GMT ]
வலுவற்ற ஆட்சியாளர்களின் மோசடியான நிர்வாகம் மற்றும் திறமையற்ற முகாமைத்துவம் காரணமாக மக்கள் அன்றாட உணவை பெற்று கொள்ள முடியாத நிலைமைக்கு ஆளாகியுள்ளனர் என்று ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்தார்.
அனோமா பொன்சேகா மன்றத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார்.
இலங்கையின் ஊழல், மோசடிகளை கண்டு முழு உலகமும் ஆச்சரியமடைந்துள்ளது.
அண்மையில் மக்கள் மத்திக்கு சென்ற சில அமைச்சர்கள் தாக்குதலுக்கு உள்ளாகினர். நாட்டின் நியாயம், நீதி, சட்டம் என்பன இல்லை என்பதை மக்கள் அறிந்துள்ளதால் அவ்வாறு செயற்படுகின்றனர்.
தமது பிரச்சினைகளை தீர்த்து கொள்ள மக்கள் அதிகாரத்தை கையிலெடுக்க ஆரம்பித்துள்ளனர். மக்களின் இந்த ஆத்திரம் ஒரு இடத்தை நோக்கி குவியும். அப்போது நாங்கள் கைகளை தட்டி மக்களுக்கு வெற்றி கிட்டட்டும் என்று கோஷமிடுவோம்.
அதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்தியிருந்தோம். ஆனால் கூட்டமைப்பின் சகல விடயங்களுடனும் எம்மால் இணங்கிச் செல்ல முடியாது.
இதன் காரணமாக மாகாண சபை தேர்தலில் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவில்லை. தென் பகுதிகளைப் போல் வடபகுதிக்கு தனியான அரசியல் சக்தி தேவைப்படுகிறது என்பதை நாங்கள் நம்புகிறோம்.
ஜனாதிபதி தேர்தலில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் எனக்கு வாக்களித்தனர். இதனால் அனைத்து மக்களும் ஒத்துழைப்புடன் இருக்கும் நாட்டை உருவாக்க வேண்டியது எமது கடமை.
வடக்கில் உள்ள இராணுவ கட்டளை அதிகாரி மோசடியாளர். நான் இராணுவத்தில் இருந்த போது அவரை பணியில் இருந்து நீக்கிவிருந்தேன். அந்த இராணுவ அதிகாரியின் குழுவினரை தவிர வடக்கில் இருக்கும் ஏனைய இராணுவத்தினர் எவரும் மோசடிகளில் ஈடுபடுவதில்லை.
இந்த நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக வடக்கில் அரசியலில் ஈடுபவர்களுக்கு தடைகள் இருக்கும்.
வடமேல் மாகாணத்தில் எமது ஜனநாயக கட்சியினரை சுவரொட்டிகளை கூட ஒட்டவிடாது விரட்டியடிக்குமாறு கூறியுள்ளனர்.
இன்று இராணுவத்தை பயன்படுத்தி, இராணுவத்திற்கு வெட்கத்தை ஏற்படுத்தும் பணிகளை செய்விக்கின்றனர்.
பிரபலமான அரசியல்வாதிகள் எனக் கூறப்படுவர்களின் செயற்பாடுகளினால் வெறுப்படைந்துள்ள மக்கள், அதற்கு தீர்வாக ஜனநாயக கட்சியுடன் இணைந்து வருகின்றனர்.
எதிர்வரும் மூன்று மாகாண சபை தேர்தலில் மூன்று மாகாணங்களுக்கு ஜனநாயக கட்சி வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten