வெலிவேரியவில் சுத்தமான குடிநீருக்காகப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாக்கப்பட்ட விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது.
கொமன்வெல்த மாநாடு நடக்கவுள்ள சூழலில், ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வரவுள்ள நிலையில், இந்தச் சம்பவம் இந்தளவுக்கு பாரதூமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசாங்கம் சற்றும் எதிர்பார்த்திருக்காது.
வெலிவேரியவில் இராணுவத்தினர் நடத்தியுள்ள தாக்குதல், புதுமாத்தளனுக்கும், முள்ளிவாய்க்காலுக்கும், நந்திக்கடலுக்கும் சிங்கள அரசியலவாதிகளாலேயே ஒப்பிடப்படுகிறது.
இலங்கை வரும் ஐநா மனித உரிமை ஆணையாளர் வடக்கிற்குச் சென்று என்ன நடந்தது என்று விசாரிக்கத் தேவையில்லை, வெலிவேரியவுக்குச் சென்று பார்த்தாலே என்ன நடந்திருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார் கரு ஜயசூரிய.
இன்னொரு பக்கத்தில், திஸ்ஸ அத்தநாயக்க இதுகுறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இவ்வாறு 2009ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை இராணுவம் சந்தித்துள்ள சந்திக்கின்ற மிகப்பெரிய நெருக்கடியாக இது மாறியுள்ளது.
வெலிவேரிய தாக்குதலை அரசாங்கம் எந்தளவுக்கு நியாயப்படுத்தினாலும், அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் சிங்கள மக்களோ, அரசியல் கட்சிகளோ, வெளிநாடுகளோ, மனித உரிமை அமைப்புக்களோ இல்லை என்பதுதான் உண்மை.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்கவும் இந்தச் சம்பவத்திறகு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
இராணுவத் தளபதியாகப் பதவியேற்ற சில நாட்களிலேயே பதவி விலக வேண்டும் என்ற நெருக்குதலை முன்னெப்போதும் எந்தவொரு இராணுவத் தளபதியுமே சந்தித்திருக்கவில்லை.
வெலிவேரிய தாக்குதல் தொடர்பாக விசாரிக்க, மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தலைமையில் இரு பிரிகேடியர்கள், இரு கேணல்களை உள்ளடக்கிய இராணுவ விசாரணைக் குழுவொன்றை இராணுவத் தளபதி நியமித்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்குள் இந்தக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
இந்த விசாரணைகளின் அடிப்படையில் யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும் தெரிவித்துள்ளார்.
வெலிவேரிய விவகாரத்தில் இரண்டு கேள்விகள் உள்ளன.
முதலாவது எந்தச் சூழலில் இராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டனர்? அவர்களைச் சுட உத்தரவிட்டது யார்? என்பது.
இரண்டாவது வெலிவேரியவிற்கு இராணுவத்தை அனுப்ப உத்தரவிட்டது யார்? என்பது.
இப்போது இராணுவ விசாரணைக் குழு நடத்தும் விசாரணை, தனியே முதலாவது கேள்விக்கு விடை காணும் நோக்கிலானது மட்டுமே.
சுடும் உத்தரவை படையினருக்கு பிறப்பித்தது யார்? ஏன் அத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது? என்ற கேள்விக்கான பதிலையே இராணுவ விசாரணைக் குழு கண்டறிய முற்படுமே தவிர, ஏன் இராணுவம் அங்கு அனுப்பப்பட்டது என்ற கேள்விக்கு பதில் தரப் போவதில்லை.
ஆனால் ஏன் இராணுவம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டது? என்ற கேள்விக்கான விடையும் கிடைத்தால் தான் வெலிவேரிய பற்றிய முழு உண்மைகளும் வெளியே வரும்.
சுடும் உத்தவை யார் பிறப்பித்தது? என்ற கேள்விக்குப் பதிலளிக்காத இராணுவப் பேச்சாளர் அது விசாரணையில் தான் தெரியவரும் என்று கூறியிருந்தார். ஆனால் அரச தொலைக்காட்சிக்கு தானே சுடும் உத்தரவைப் பிறப்பித்ததாகவும், நான்கு படையினர் குறைந்தளவு பலப்பிரயோகத்தைப் பாவித்ததாகவும், இராணுவத்திற்கு தலைமை தாங்கிய 58வது டிவிஷன் தளபதி கூறியுள்ளார்.
அவரும் கொமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த கேர்ணல் ஒருவரும் தான் வெலிவேரிய தாக்குதலுக்குப் பொறுப்பாக இருந்தவர்கள் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றனர்.
இவர்கள் இருவருமே வன்னிப் போரில் மன்னார் தொடக்கம் முள்ளிவாயக்கால் வரை 58வது டிவிஷனில், மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவின் கீழ் செயற்பட்டவர்கள்.
அப்போது லெப். கேர்ணல் தேசப்பிரிய குணவர்த்தன 581 பிரிகேட் தளபதியாக இருந்தார்.
அதே டிவிஷனின் கீழ் இருந்த இரண்டாவது கொமாண்டோ பற்றாலியனுக்கு கட்டளை அதிகாரியாக இருந்தவர் தான் மேஜர் ஷாமல் சில்வா.
விடுதலைப் புலிகளை அழிப்பதில் தீவிர பங்காற்றியது என்ற வகையில் 58வது டிவிஷனுக்கு சிங்கள மக்கள் மத்தியில் இருந்து வந்த பெரும் அபிமானத்தை, வெலிவேரிய தாக்குதல் அடியோடு அழித்துவிட்டது.
அதற்கு இவர்கள் இருவருமே பொறுப்பு என்று குற்றம் சாட்டப்படுகிறது.
ஆனாலும் இவர்கள் வெறும் கருவிகள் தான் என்றும், இவர்களை அந்த இடத்திற்கு அனுப்பியவர்களே மூல காரணம் என்றும் இன்னொரு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் இராணுவ அணிகள் மறுசீரமைக்கப்பட்ட போது சிறப்பு படைப்பிரிவுகளான 53வது டிவிஷனும் 58வது டிவிஷனும் றிசேவ் படைப்பிரிவுகளாக நிறுத்தப்பட்டன.
எந்தவொரு அவசர சூழ்நிலையிலும் பயன்படுத்திக் கொள்ளத் தக்கவாறு இவையிரண்டும் இராணுவத் தளபதியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன.
அத்தகைய ஒரு படைப்பிரிவு தான் வெலிவேரியவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இராணுவத் தளபதியின் அனுமதியுடன் தான் இந்தப் படைப் பிரிவுகளை தேவைக்கு பயன்படுதத முடியும் என்பதால், வெலிவேரியவுக்குப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டதை அவர் அறிந்தேயிருப்பார்.
ஆனால் பதவியேற்பு நாள் மகிழச்சியும், வரவேற்பும், வாழ்த்துகளும் இதை ஒரு தீவிரமான பிரச்சினையாக எடுத்துக் கொள்ள அவருக்குத் தடையாக இருந்திருக்கலாம்.
அதேவேளை பொலிஸ்மா அதிபர் இலங்கக்கோன் கூட்டுப்படைத் தளபதிக்கு விடுத்த கோரிக்கையை அடுத்தே இராணுவம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் குறிப்பிட்ட நாளன்று (ஓகஸ்ட் முதலாம் திகதி) கூட்டுப்படைகளின் தளபதியாக எவரும் பதவியில் இருக்கவில்லை. ஏனென்றால் முதல்நாளே எயர்சீவ் மார்சல் றொசான் குணதிலக அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்.
ஓகஸ்ட் முதலாம் நாள் அந்தப் பதவியை ஜெனரல் ஜகத் ஜெயசூரிய ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
என்றாலும் அவர் தாக்குதல் நடந்த மறுநாளே அதாவது ஓகஸ்ட் இரண்டாம் திகதியே அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார்.
அவ்வாறாயின் கோத்தபாய ராஜபக்ச கூறுவது போன்று கூட்டுப்படைகளின் தளபதியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பேரில் இராணுவம் அனுப்பப்பட்டதென்றால் யாரிடம் அந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது என்ற கேள்வி உள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக விடுக்கப்படும் அரசதரப்பு அறிக்கைகள், கருத்துகள் எல்லாமே முன்னுக்குப் பின் முரணாக உள்ளன.
முன்னதாக இராணுவம் சுடவில்லை என்று கூறப்பட்டது. பின்னர் சுட்டதை ஒத்துக் கொண்டது இராணுவம். இப்படிப் பல குழப்பங்கள் உள்ளன.
மேலும் இந்தத் தாக்குதலில் காயமடைந்து உயிரிழந்தவர்கள் அனைவருமே தலையில் சுடப்பட்டுள்ளனர்.
இவர்களில் இருவர் மாணவர்கள். அதுவும் சம்பவத்தை வேடிக்கை பார்க்கச் சென்றவர்கள்.
மூன்றாமவர், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் தொழிலாளர். வேலை முடிந்து வரும்போது சுடப்பட்டவர்.
இவையெல்லாம் இந்தச் சம்பவத்தை படுகொலைகளாகவே பார்க்கச் செய்துள்ளன.
இதற்கிடையே குழப்ப நிலைமைகளை பொலிஸாரால் சமாளிக்க முடியாத போது விஷேட அதிரடிப் படையையே அழைக்கப்படுவது வழக்கம்.
ஆனால் அவர்கள் அழைக்கப்படாமல், இராணுவம் அழைக்கப்பட்டது ஏன்? என்ற கேள்விக்’கு எவருமே இதுவரை பதிலளிக்கவில்லை.
வெலிவேரியவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது இராணுவத்திலுள்ள கலகம் அடக்கும் பிரிவல்ல, போர்களில் ஈடுபடும் சிறப்பு படைப் பிரிவு.
இந்தப் படைப்பிரிவுக்கு கலகம் அடக்கும் பயிற்சிகள் ஏதும் அளிக்கப்பட்டிருக்கவில்லை.
கலகம் அடக்கும் படையினர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தால் அதற்காகவே பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், இறப்பர் ரவைகளை பயன்படுத்தயிருப்பார்கள்.
ஆனால் இராணுவக் கொமாண்டோக்களிடம் அவை ஏதும் இருக்கவில்லை. போர்க்களத்தில். புலிகளுடன் எவ்வாறு நடந்து கொண்டார்களோ அதுபோன்றே நடந்து கொண்டனர்.
இந்த நிலையில் வெலிவேரிய தாக்குதல் இரண்டு பிரச்சினைகளை இராணுவத்துக்கு ஏற்படுத்தவுள்ளது.
முதலாவது சர்வதேச போர்க்குற்ற விசாரணைக் கோரிக்கையை வலுப்படுத்தப் போகிறது.
இது குறித்து கோத்தபாய ராஜபக்ச ஏற்கனவே அச்சம் வெளியிட்டுள்ளார்.
இதுவரை வன்னியில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தெற்கிலுள்ள சில சக்திகள் கூட அதனை ஏற்கின்ற ஒரு மனோநிலைக்குத் தள்ளி விட்டுள்ளது.
வெலிவேரியவிலேயே இப்படி நடந்துகொண்டுளார்கள் என்றால், வன்னியில் எப்படி நடந்து கொண்டிருந்திருப்பார்கள் என்று சிங்கள மக்களே சிந்திக்கத் தூண்டப்பட்டிருக்கிறார்கள்.
வன்னிப் போரில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த சர்வதேச விசாரணைகளைக் கோரும் முயற்சிகளில் இது முக்கியமானதொரு திருப்பம்.
அடுத்து வீங்கிப் பருத்த இராணுவத்தை ஐநா அமைதிப்படையில் அதிகளவில் ஈடுபடுத்தும் முயற்சிக்கும் இது சவாலை ஏற்படுத்தியுள்ளது.
கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளத் தெரியாத இராணுவம் என்று மீளவும் உறுதி செய்யப்பட்டுள்ளதால் இலங்கை இராணுவத்துடன் புதிய உடன்பாடுகளைச் செய்ய ஐநா தயக்கம் காட்டும்.
வெலிவேரிய தாக்குபுதல் ஒன்றும் கீழ் மட்டப் படையினருடன் மட்டும் தொடர்புடைய ஒன்று அல்ல.
ஆனால் தற்போதைய விசாரணைகள் கீழ் மட்டத்தில் உள்ள படையினரையே குற்றவாளிகளாக்கும் இலக்கைக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது.
பெரும் புள்ளிகள் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கவும், இராணுவம் எதிர்கொள்ளக்கூடிய நெருக்கடிகளில் இருந்து தப்பிக்கவும், இந்தத் தாக்குதலுக்காக குறிப்பிட்ட சில படை அதிகாரிகளும், படையினரும் பலிக்கடாக்கள் ஆக்கப்படலாம்.
ஆனால் யாருடைய தலைகளை உருட்டி உயா்மட்டத் தலைகள் காப்பாற்றப்பட்டாலும், வெலிவேரிய சம்பவத்தால், இலங்கை இராணுவத்துக்கு தெற்கிலுள்ள மக்களிடையேயும், சர்வதேச அரங்கிலும் ஏற்பட்டுள்ள கெட்ட பெயரை மட்டும் துடைத்துவிட முடியாது.
சுபத்ரா
Geen opmerkingen:
Een reactie posten