zondag 11 augustus 2013

களனியில் உருவாகும் புதிய பாதாள உலகக் குழுக்கள்- படையினருக்கு தகவல் வழங்கியவர்களை பாதாள உலக குழுவினரே கடத்தினர்?- பயங்கரவாத விசாரணை பிரிவு


களனி பிரதேசத்தில் புதிதாக பாதாள உலக குழுக்கள் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இராணுவம், சிறைச்சாலைகளில் தப்பிச் சென்றவர்கள், தொழிலின்றி இருப்போர் இந்த குழுக்களில் இணைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த குழுக்களுக்கு உதவி வரும் அரசியல்வாதிகள் தொடர்பிலும் பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதுதொடர்பாக பொலிஸார் அறிக்கையை தயாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அறிக்கை தயாரிக்கப்பட்டு முடிந்த பின்னர், சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போர் காலத்தில் படையினருக்கு தகவல் வழங்கியவர்களை பாதாள உலக குழுவினரே கடத்தினர் - பயங்கரவாத விசாரணை பிரிவு?
போர் நடைபெற்ற காலத்தில் இலங்கை படையினருக்கு விடுதலைப் புலிகள் தொடர்பில் தகவல்களை வழங்கிய கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்த நபர்களை பாதாள உலக குழுக்களை சேர்ந்தவர்களே கடத்திச் சென்று அவர்களை விடுதலைப் புலிகளிடம் ஒப்படைத்ததாக பயங்கரவாத விசாரணை பிரிவினர் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பாதுகாப்பு வட்டார தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை பகுதியில் இயங்கிய பாதாள உலக குழுவொன்றுக்கே, புலிகளின் கொழும்பு நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்களை வழங்கும் நபர்களை கடத்துமாறு விடுதலைப் புலிகள் ஆலோசனை வழங்கியிருந்தாக தெரியவந்துள்ளது.
படையினருக்கு தகவல்களை வழங்கிய நபர்கள் வெள்ளை வேன்களில் கடத்திச் செல்லப்பட்டு சிலாபம் கடல் வழியாக படகுகள் மூலம் வடபகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் புதுக்குடியிருப்பு, வள்ளிப்புனம் பிரதேசங்களில் இருந்த புலிகளின் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாக பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அதேவேளை போர் நடைபெற்ற காலத்தில் சில பாதாள உலக குழுக்கள் விடுதலைப் புலிகளின் புலனாய்வாளர்களாக செயற்பட்டுள்ளன. அந்த குழுக்களின் உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten