இலங்கை வரவுள்ள ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்திப்பதற்கு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். இல்லையேல் அவரின் வருகை அர்த்தமற்றதாகிவிடும் என்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல.
எமது நாட்டின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றுக்கான முறையான தெளிவுபடுத்தல்களை அரசாங்கம் இது வரையில் வழங்காதுள்ளது. எனவே அவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு சரியானதும் தெளிவானதுமான பதில் கூற கூடியவர் சரத் பொன்சேகா தான் எனவும் அவர் தெரிவித்தார்.
ஐநா.மனித உரிமை பேரவையின் ஆனையாளர் நவநீதம்பிள்ளையின் வருகை தொடர்பில் கருத்து கூறுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கடுமையான யுத்தம் நடைபெற்ற போது குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் இருந்தவர்களுக்கு அங்கு என்ன நடந்தது என்பது சரியாக தெரியாது.
இறுதி கட்ட யுத்தத்தின் போது களத்திலிருந்து செயற்பட்டவர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.
எனவே அவருக்கு அந்தக் காலகட்டத்தில் என்ன நடந்தது? எப்படி நடந்தது? என்பது நன்றாக தெரியும் என்பதால் தான் எமது நாட்டுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு தெளிவான பதிலை கூற சரத் பொன்சேகாவுக்கு அனுமதி வழங்க வேண்டும். அவர்களின் தெளிவுப்படுத்தல்களால் எமது நாட்டுக்கு நன்மை கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
நவநீதம்பிள்ளையின் வருகையினை நாம் எதிர்க்கவில்லை. அதனை வரவேற்கின்றோம். அதேவேளை அவரின் வருகையானது அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும்.
மாறாக அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய இருக்கக்கூடாது. சுதந்திரமான சுற்றுப்பணத்தினை செய்து உண்மை நிலைமைகளை கண்டறிய வேண்டும்.
இலங்கை வரவுள்ள நவநீதம்பிள்ளையை சந்திப்பதற்கு தனக்கு வாய்ப்பொன்றினை பெற்றுத் தருமாறு முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கோரியிருந்தார். ஆனால் அதற்கு இதுவரையிலும் எதுவித பதிலையும் தெரிவிக்கவில்லை. சரத் பொன்சேகாவின் நியாயமான கோரிக்கைக்கு அரசு வழிசமைத்து கொடுக்க வேண்டும்.
நமது நாட்டுக்கு எதிரான குற்றச் சாட்டுக்களால் ஏற்பட்டுள்ள அபகீர்த்தியை இல்லாமல் செய்ய அதற்கான தெளிவுபடுத்தலை வழங்கக்கூடிய ஒரே நடுவர் சரத் பொன்சேகா தான் என என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
[ ஞாயிற்றுக்கிழமை, 18 ஓகஸ்ட் 2013, 06:29.12 AM GMT ]
Geen opmerkingen:
Een reactie posten