zaterdag 17 augustus 2013

பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றமைக்கு எதிராக நல்லூர் பிரதேச சபையில் கண்டனம்- கல்வி அமைச்சருக்கு வலி.மேற்குப் பிரதேச சபைத் தலைவர்கள் மகஜர்

யாழ் நகர காப்பெற் வீதிகளில் ஆளும் கட்சியின் சின்னங்கள்! தேர்தல் பிரசார வாசகங்கள்- அகற்ற பொலிஸார் நடவடிக்கை
[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 02:01.39 AM GMT ]
யாழ்.நகர்ப் பகுதிகளில் தேர்தலுக்காக வீதிகளில் கட்சிகளின் சின்னங்கள், வேட்பாளர்களுடைய பெயர்கள் மற்றும் கட்சி இலட்சனைகள் பொறிக்கப்படுவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் மொகமட் ஜெப்ரி தெரிவித்தார்.
சட்ட விதிகளை மீறுபவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், ஏற்கனவே வீதிகளில் பொறிக்கப்பட்ட சின்னங்களை அகற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்றுக் காலை 10.30 மணிக்கு யாழ்.பொலிஸ் நிலையத்தில் வாராந்த ஊடகவியலளர் சந்திப்பு இடம்பெற்றது.
இச் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.நகர்ப்பகுதி மற்றும் ஏனைய இடங்களில் உள்ள காப்பெற் வீதிகளில் ஆளும் கட்சியின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட தேர்தல் பிரச்சார வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.
இதனை உனடியாக நிறுத்துமாறும், எழுதியவற்றினை அகற்றுமாறும் யாழ்.மாநகர முதல்வர் திருமதி.யோகேஸ்வரி பற்குணராஜா அறிவுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக பொலிஸாருடைய நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது? யாழ்.நகர்ப் பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடும் இடங்களிலும் இவ்வாறான தேர்தல் பிரச்சார வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. இச் செயற்பாடுகளை பொலிஸார் ஏன் தடுத்து நிறுத்தவில்லை? என்றும் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்த எஸ்.எஸ்.பி :- இச் செயற்பாடானது சட்டத்திற்குப் புறம்பானது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் அதனை உடனடியான நிறுத்த வேண்டும். ஏற்கனவே வீதிகளில் எழுதப்பட்ட வாசகங்களை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் வீதிகளில் தேர்தல் வாசகங்கள் எழுதும் போது பொலிஸார் காணவில்லை. பொலிஸார் இல்லாத சமயம் பார்த்தே அவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கண்டிருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்போம்.
இனிவரும் காலங்களில் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்பவர்கள் அந்நடவடிக்கைகளை கைவிட வேண்டும். பொலிஸாரும் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றமைக்கு எதிராக நல்லூர் பிரதேச சபையில் கண்டனம்- கல்வி அமைச்சருக்கு வலி.மேற்குப் பிரதேச சபைத் தலைவர்கள் மகஜர்
[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 02:26.30 AM GMT ]
முஸ்லிம் மக்களின் வழிபாட்டுத் தலங்களான பள்ளிவாசல்கள் தொடர்ச்சியாகத் தாக்கப்படுகின்றமை அநாகரிகமான செயல் என கண்டனத்தைத் தெரிவித்து நல்லூர் பிரதேச
சபையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நல்லூர் பிரதேச சபையின் விசேட கூட்டம் பிரதேச சபைத் தவிசாளர் ப. வசந்தகுமார் தலைமையில் நடைபெற்றபோது முஸ்லிம் சகோதரர்களின் மத வழிபாட்டுத்தலம் பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கும் பிரேரணையை சபைத் தவிசாளர் முன்மொழிந்தார்.
இப் பிரேரணை தொடர்பாக சபையில் உரையாற்றிய உறுப்பினர் எஸ். தியாகமூர்த்தி முஸ்லிம் சகோதரர்களின் பள்ளிவாசல்களைத் தாக்கும் சம்வங்கள் தற்போது அடிக்கடி இடம்பெறுகின்றது.
முஸ்லிம்களது பள்ளிவாசல் தவிர இந்து கிறிஸ்தவ மக்களின் வழிபாட்டுத் தலங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இந்த விடயத்தில் பௌத்த மதகுருமார் தொடர்பு கொள்வது தான் வெட்கக்கேடான ஒரு விடயமாகும்.
அரசாங்கம் இது குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்கள் சுதந்திரமாகத் தமது மத வழிபாடுகளை மேற்கொள்ள உதவ வேண்டுமென தியாகமூர்த்தி தெரிவித்தார். பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சருக்கு வலி.மேற்குப் பிரதேச சபைத் தலைவர்கள் மகஜர்
மின் கட்டணங்களின் அதிகரிப்பினால் பாதிப்புக்குள்ளான பாடசாலைகள் மின் கட்டண நிலுவையைச் செலுத்த முடியாத நிலையிலுள்ளனர். இதனால் மின்சாரம் தடைப்படுகின்ற நேரங்களில் மாணவர்களின் கல்வியிலும் கணிசமான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.
எனவே மாணவர்களின் வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு பாடசாலைகளுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணத்தை மீளாய்வு செய்யுமாறு வலிகாமம் மேற்குப் பிரதேச சபை தவிசாளர் திருமதி என். ஐங்கரன் கல்வியமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மின் கட்டண அதிகரிப்பால் பாடசாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ற தலைப்பில் கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு தவிசாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் ஊடாகவே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அக்கடிதத்தில்,
கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் பாடசாலைகள் அண்மையில் ஏற்பட்ட மின் கட்டண அதிகரிப்பால் மிகுந்த தாக்கத்தை எதிர்கொண்டுள்ளன. இவ்வாறு அதிகரித்த மின் கட்டண உயர்வால் அரச பாடசாலைகள் மாதாந்த மின் கட்டணங்களை இலங்கை மின்சார சபைக்குச் செலுத்துவதில் இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளுக்கு மாதம் இடை நிலை பாடசாலைகளுக்கு 1000 ரூபாவும் சிரேஷ்ட இடைநிலைப் பாடசாலைகளுக்கு 1250 ரூபாவும் மத்திய மகா வித்தியாலயங்களுக்கு 1500 ரூபாவும் மட்டுமே மின் கட்டணத்திற்காக ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
இந்த ஒதுக்கீட்டுத் தொகை போதுமானதாக இல்லை என்பது தாங்கள் அறிந்த விடயம். இச் சந்தர்ப்பத்தில் மேலதிகமான மின் கட்டணத் தொகையை பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள் ஊடாகப் பெற்றே இதுவரை காலமும் செலுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் தற்போது அதிகரித்த மின் கட்டணத்தால் மாதாந்த நிலுவையைச் செலுத்த முடியாத நிலையில் பாடசாலைகள் உள்ளன. இதனால் பாடசாலைகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் நிலை எதிர்காலத்தில் ஏற்படலாம். இவ்வாறான நிலை மாணவர்களின் கல்வியில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதுகின்றேன்.
இது தொடர்பில் தாங்கள் கவனமெடுத்துப் பாடசாலைகளுக்கான மின் கட்டணம் தொடர்பில் மீளாய்வு செய்யவேண்டுமென மிக வினயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.
இதேவேளை பாடசலைகளில் பணம் அறவிடல் தொடர்பாக தங்களது அமைச்சால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள் கூட நிதி வசூல் செய்யமுடியாத நிலை காணப்படுகின்றது.
இதனால் மேலதிகமான நிதிநெருக்கடியைச் சீர்செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. இதனால் மேலதிகமான நிதி நெருக்கடியைச் சீர் செய்ய முடியாத நிலைக்கு அதிபர்கள் தள்ளப்பட்டுள்ளனர். விடயம் தொடர்பில் தாங்கள் பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.
இதற்கு மேலதிகமாக அண்மையில் பட்டதாரி பயிலுனர்களாக நியமிக்கப்பட்ட நுண்கலைப் பட்டதாரிகள் சார்பில் அவர்களுக்கு பொருத்தமற்ற நியமனம் வழங்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக நான்கு வருட காலமாக நுண்கலைப் பாடத்தை சிறப்புப் பாடமாகக் கற்றவர்கள் இன்று அவற்றைச் சமூகத்துக்கு வழங்க முடியாத நிலையில் அவர்களது நியமனம் உருவாக்கப்பட்டுள்ளது.
எமது நாட்டின் கலை, கலாசாரப் பண்பாடு போன்றவற்றை எடுத்துக்காட்டுகின்ற அல்லது சமூகத்துக்கு எடுத்து வருகின்ற முக்கியமான பொறுப்பு நுண்கலைப் பட்டதாரிகளிடம் உள்ளது.
இவ்விடயத்தை கவனத்தில் கொண்டு நுண்கலைப் பட்டதாரிகளை உங்கள் அமைச்சு பாடசாலை வெற்றிடங்களுக்கு நியமித்து அவர்களுக்கு உரிய நியமனத்தை வழங்கு - மாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

Geen opmerkingen:

Een reactie posten