dinsdag 13 augustus 2013

கிராண்ட்பாஸ், வெலிவேரிய வன்முறைச் சம்பவங்கள்! ஐரோப்பிய ஒன்றியம் கவனம் !

கிராண்ட்பாஸ் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் திருப்தி: முஸ்லிம் காங்கிரஸ்
[ செவ்வாய்க்கிழமை, 13 ஓகஸ்ட் 2013, 11:45.54 AM GMT ]
கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் தற்போது நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து திருப்தியடைய முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் நேற்றிரவு கூடியது.
மேற்படி சம்பவம் தொடர்பாக கட்சி என்ற வகையில் எடுக்க கூடிய விடயங்கள் பற்றி இந்த கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இங்கு உரையாற்றிய காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கிராண்ட்பாஸ் சம்பவம் தொடர்பாக பல துறைகள் ஊடாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
இந்த விசாரணைகள் தொடர்பாக திருப்தியடைய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை இரவு பள்ளிவாசல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டதுடன், இதனையடுத்து ஏற்பட்ட சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 8 பேர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கிராண்ட்பாஸ், வெலிவேரிய வன்முறைச் சம்பவங்கள்! ஐரோப்பிய ஒன்றியம் கவனம் !
கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் மற்றும் வெலிவேரிய ரத்துபஸ்வல மக்கள் மீதான படையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்துவதாக கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
குடிநீருக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய வெலிவேரிய பிரதேசத்தில் படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று பேர் கொல்லப்பட்டமை, கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் உட்பட நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்கள் தாக்கப்படுவது குறித்து கவனம் செலுத்தி வருகின்றோம்.
இச்சம்பவங்கள் தொடர்பாக விரைவான விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளின் இணக்கத்துடன் கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten