maandag 5 augustus 2013

புதிய இராணுவத் தளபதி எதிர்கொள்ளும் சவால்!


2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற நேரத்தில் வடக்கில் ஒரு கிளைமோர் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான போர்நிறுத்த உடன்பாடு கேள்விக்குறியாகியிருந்த மென்தீவிர யுத்தம் தீவிரமடையத் தொடங்கியிருந்த அந்தச் சூழலில் இருபாலையில் வெடித்த கிளைமோர் குண்டுக்கு 6 படையினர் பலியாகினர்.
இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகா பொறுப்பேற்றதும், அதிகாரபூர்வமாக அவர் பெற்ற முதலாவது செய்தி அதுதான்.
அதையடுத்து உடனடியாகவே அவர் பலாலிக்கு விரைந்தார்.
அதன் பின்னர் சரத் பொன்சேகா தலைமையில் போர் நடத்தப்பட்டதும், விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதும் தெரிந்த செய்திகள் தான்.
கிட்டத்தட்ட சரத் பொன்சேகா பதவியேற்ற தினத்தில் நடந்தது போன்று ஒரு இரத்தக்களரியான சம்பவம் தான் இலங்கை இராணுவத்தின் 20வது தளபதியாக லெப். ஜெனரல் தயா ரத்னாயக்க பதவியேற்ற தினத்திலும் நடந்துள்ளது.
ஒரே வேறுபாடு சரத் பொன்சேகா பதவியேற்ற போது புலிகளின் தாக்குதலில் படையினர் பலியாகினர்.
லெப். ஜெனரல் தயா ரத்னாயக்காவின் பதவியேற்பு நாளில் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டு 15 ற்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகினர்.
கம்பஹா மாவட்டத்தில் உள்ள வெலிவேரியவில், தொழிற்சாலை ஒன்றின் கழிவுகளால் தமது குடிநீர் மாசடைவதாக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீதே இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.
ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் இது போன்று உயிரிழப்பு ஏற்பட்டது.
பொதுமக்களின் போராட்டத்தைக் கலைக்க இராணுவம் அழைக்கப்பட்ட போது அவர்கள் தமது போர்க்கள அனுபவங்களைப் பொதுமக்கள் மீது பயன்படுத்திக் கொண்டமை புதிய இராணுவத் தளபதியின் பதவியேற்பு நாளில் ஏற்பட்ட ஒரு கழுவப்பட முடியாத கறை.
போர் முடிவுக்கு வந்து குறுகிய காலத்திலேயே சரத் பொன்சேகாவிடம் இருந்து இராணுவத் தளபதி பதவியை பெற்றுக் கொண்ட ஜெனரல் ஜகத் ஜயசூரிய கடந்த நான்கு ஆண்டுகளில் போர்க்கால இராணுவத்தை போருக்குப் பிந்திய அமைதிக்கால இராணுவமாக மாற்றுவதில் தான் வெற்றிகண்டதாக பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அவரது கருத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில், இராணுவத்தின் இந்தத் தாக்குதல் அமைந்து விட்டது.
சுத்தமான குடிநீர் கேட்டுப் போராட்டம் நடத்திய மக்களை துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாக்கும் அளவுக்கு அவர்கள் ஒன்றும் ஆயுதப் போராட்டம் நடத்தவோ பிரிவினை கோரவோ இல்லை.
புதிய இராணுவத் தளபதியாக பொறுப்பேற்ற பின்னர் பேசிய லெப். ஜெனரல் தயா ரத்நாயக்க, போர் முடிவுக்கு வந்ததையடுத்து நாட்டில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நல்லிணக்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கின்ற சூழலில் சர்வதேச அளவில் செயற்படும் பிரிவினைவாத சக்திகளின் செயற்பாடுகள் தான் நாட்டுக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்தச் சவால்களுக்கு முகம் கொடுக்க கூடிய வகையில் இராணுவத்தின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
ஆனால் வெலிவேரிய சம்பவம் இந்தக் கருத்துக்கு சற்றும் பொருத்தப்பாடான ஒன்றாக இருக்கவில்லை.
போருக்குப் பிந்திய இணக்கச்சூழல் என்பது தமிழருக்கானது மட்டுமல்ல.
இராணுவத்துக்கும் தெற்கிலுள்ள பொதுமக்களுக்கும் இடையிலான இணக்கச்சூழல் கூட அவ்வாறானது தான்.
நீண்ட போருக்கு முகம் கொடுத்த இராணுவத்தின் மனோநிலை அதற்கேற்றவாறே தயார்படுத்தப்பட்டிருந்தது.
அந்தப் படையினரை சமாதான சூழலில் எவ்வாறு செயற்பட வைப்பது, அவர்களை அதற்கேற்றவாறு எவ்வாறு மாற்றியமைப்பது என்ற விடயத்தில் இந்த நான்கு ஆண்டுகளில் இராணுவ அரசியல் தலைமைகள் தோல்வியைச் சந்தித்துள்ளன.
இதனைத்தான் வெலிவேரிய சம்பவம் உணர்த்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக  ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்ட மக்களின் ஆதங்கங்கள் அதனையே உணர்த்துகின்றன.
இது ஆட்சியாளருக்கு விசுவாசமான படை என்றும், தமிழருக்கு எதிராக தாக்குதல் நடத்திய போது பட்டாசு கொளுத்தி கொண்டாடினோம். இப்போது எமக்கு நடக்கிறது என்றும், தயா ரத்னாயக்கவின் பதவிக்காலத்தை, இது நல்ல ஆரம்பம் என்று கிண்டலடித்தும் கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.
ஆக புலிகளை அழிப்பதற்காக திடீரெனப் பருத்த இரண்டு இலட்சம் பேரைக் கொண்ட இராணுவம், போருக்குப் பின்னர் எவ்வாறு செயற்படுவதென்று தெரியாமல் திணறுகிறது.
தெற்கிலேயே இந்தநிலை என்றால் வடக்கின் நிலைமைகளை எவரும் புரிந்து கொள்வது சிரமமான காரியமாக இருக்காது.
அதனால்தான் வரப்போகும் மாகாண சபைத் தேர்தலில் இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது.
தேர்தலில் இராணுவத்தினர் தலையிட மாட்டார்கள் என்று புதிய இராணுவத் தளபதி உறுதிமொழி கொடுத்துள்ள போதிலும் அதனை நம்புவது சிரமமானது. இராணுவப்புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகவும் பதவி வகித்தவர் என்ற வகையில் லெப். ஜெனரல் தயா ரத்னாயக்கவுக்கு நிலைமைகள் நன்றாகவே புரியும்.
ஏனென்றால் பாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள்.
வெலிவேரிய சம்பவம், இராணுவத்தை மறுசீரமைத்து, கட்டமைப்புகளை சீராக்க வேண்டிய அவசியத்தையும், சமாதான காலத்துக்குரியதாக அதை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியுள்ளது.
ஒரு போர்க்கால இராணுவத்தை அமைதிக்கால இராணுவமாக மாற்றியமைப்பது ஒன்றும் சுலபமான காரியமில்லை.
போர்க்கள மன அழுத்தங்களும் பயிற்சிகள் மற்றும் செயற்பாடுகளும், அவர்களின் போக்கில் நிச்சயம் நீண்ட காலத்துக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும். இதுவரை முரட்டுத்தனமாகச் செயற்பட வலியுறுத்தப்பட்ட படையினரை திடீரென மென்போக்கில் நடந்து கொள்ள அழுத்தம் கொடுக்கும் போது அதை அவர்களால் இலகுவில் ஏற்றுக் கொள்ள முடியாது. அது பல சமயங்களில் எதிர்பாராத விளைவுகளையும் ஏற்படுத்தும்.
ஆனால் எது எவ்வாறாயினும் போர்க்கால இராணுவத்தை அமைதிக்காலத்துக்குரியதாக மாற்றியே ஆகவேண்டிய கடுமையான அழுத்தம் அரசாங்கத்துக்கு உள்ளது.
புதிய இராணுவத் தளபதி நீண்டகால போர்க்கள அனுபவங்களைக் கொண்டவர் மட்டுமல்ல. அமெரிக்கா சீனா பிரித்தானியா இந்தியா என்று உலகின் முக்கியமான பாதுகாப்பு பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சிக்கூடங்களில் பட்டங்களையும் டிப்ளோமாக்களையும் பெற்றுக் கொண்டவர். இலங்கைப் படையினரிலேயே அதிகளவு பட்டங்கள், கற்கைநெறிகளை முடித்தவர் மட்டுமல்ல. இராணுவத்தில் யாருமே பெற்றிராத வகையில் 20ற்கும் அதிகமான விருதுகள் பதக்கங்களையும் பெற்றவர்.
சுருங்கச்சொன்னால் உலக இராணுவ உத்திகளின் கூட்டுக்கலவையாக அவரைக் குறிப்பிடலாம். காலாற்படை அதிகாரியாக மட்டுமன்றி அமெரிக்காவின் புலனாய்வுப் பாடசாலையிலும் பட்டம் பெற்றவர்.
அவருக்கு தற்போதைய நிலைமைகளை எத்தகைய பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஊகித்தறிவது ஒன்றும் சிரமமானது அல்ல.
இராணுவத்தை மட்டுமன்றி விசேட அதிரடி்படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்துவதும் கூட சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.
இரத்தினபுரியில் அண்மையில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து அங்கிருந்து விசேட அதிரடிப்படையினரை வெளியேற்ற வேண்டும் என்று அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார ஜோன் செனவிரத்ன போன்றவர்கள் போர்க்கொடி எழுப்பியுள்ளனர்.
உண்மையில் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை என்று அழைக்கப்பட்டாலும் அது ஒரு துணை இராணுவம் என்பது தான் உண்மை. இலங்கை இராணுவத்துக்கு இணையான பயிற்சிகள் சில வேளைகளில் அதை விடவும் அதிகமான பயிற்சிகள் கூட விசேட அதிரடிப்படைக்கு கொடுக்கப்பட்டு போரில் ஈடுபடுத்தப்பட்டன.
ஆனால் அரசாங்கம் பொலிஸார் என்ற பெயரில் விசேட அதிரடிப்படையை களமிறக்கி சில சட்டவிரோத செயல்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க முனைகிறது.
ஆனால் ஜனநாயக நாடுகளைப் பொறுத்தவரையில்  சட்டம் ஒழுங்கு கடமையில் பரா மிலிட்டரி என்று அழைக்கப்படும் துணை இராணுவப் பிரிவுகள் ஈடுபடுத்தப்படுவதில்லை.
அரிதான அடக்கமுடியாத கலகச் சூழலிலேயே அவர்கள் அழைக்கப்படுவதுண்டு. ஆனால் தெற்கிலும் கிழக்கிலும் இது வழக்கமானது.
விசேட அதிரப்படை விவகாரத்திலும் சரி, இராணுவத்தினர் விவகாரத்திலும் சரி அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைதிக்கால அணுகுமுறைகளை வெளிப்படுத்துவதாக இல்லை.
மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை மோசமான முன்னுதாரணமுள்ள நாடாகக் காட்டப்படும் நிலையில் இத்தகைய சம்பவங்கள் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு இன்னும் பாதிப்பையே ஏற்படுத்தும்.
சுபத்ரா

Geen opmerkingen:

Een reactie posten