woensdag 7 augustus 2013

யாழில் கபே அமைப்பின் நடமாடும் சேவை- கொக்குவில் கிராம சேவகரின் வீட்டிற்கு இனந்தெரியாதோர் கல்வீச்சு

இலங்கை வெளிவிவகார அமைச்சர் இந்த மாதம் இந்தியாவுக்கு விஜயம்!- இலங்கைத் தூதரைக் கண்டித்த இந்தியா
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 09:43.50 AM GMT ]
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இந்த மாதம் இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரியவருகிறது.
எதிர்வரும் 18 ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லும் பீரிஸ், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டுக்கான அழைப்பிதழை வழங்க உள்ளார்.
எதிர்வரும் நவம்பர் 15ம் திகதி முதல் 17ம் திகதி வரை கொழும்பில் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பின்னர், தீர்மானம் எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. சில விடயங்களில் அடிப்படையில் அவரது தீர்மானம் அமையும் எனவும் கூறப்படுகிறது.
அதேநேரம் வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இந்தியாவுக்கு சர்வதேச சமூகமும் உன்னிப்பான அவதானிப்புகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த தேர்தலும் மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பிலான விடயங்களை தீர்மானிக்கும் என நம்படுகிறது.
இதனிடையே தேர்தலுக்கு பின்னர், 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தில் மாற்றங்களை செய்ய மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்த சட்டங்களில் மாற்றங்கள் செய்வது தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவும் ஆராய்ந்து வருவதுடன் அறிக்கையை தேர்தலுக்கு பின்னர் சமர்பிக்கும் என தெரியவருகிறது.
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை செய்வதை இந்தியா விரும்பவில்லை. இதனை ஏற்கனவே இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது.
அதேவேளை புதுடெல்லி அரசாங்கம், இலங்கையின் இந்த விடயம் தொடர்பில், தமிழக த்தின் அரசியல் அழுத்தங்களை எதிர்நோக்கி வருகிறது.
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்க கூடாது என தமிழகத்தின் இரண்டு பிரதான கட்சிகள் அழுத்தங்களை கொடுத்து வருகின்றன.
இதனிடையே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்த மாத இறுதியில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இலங்கைத் தூதரைக் கண்டித்த இந்தியா
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு இலங்கை தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள இந்திய தூதரகமும் இலங்கை வெளியுறவுத்துறையிடம் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
தற்போது இலங்கை சிறைகளில் தமிழக மீனவர்கள் 114 பேர் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
யாழில் கபே அமைப்பின் நடமாடும் சேவை- கொக்குவில் கிராம சேவகரின் வீட்டிற்கு இனந்தெரியாதோர் கல்வீச்சு
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 08:31.15 AM GMT ]
யாழ். அச்சுவேலி கலாமினி மண்டபத்தில் இன்று புதன்கிழமை கிழமை கபே அமைப்பினரின் அனுசரணையுடன் நடமாடும் சேவை காலை 9 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை இடம் பெற்றது.
இவ்அமைப்பினரால் வழங்கப்பட்ட சேவைகளாக தொலைந்த மற்றும் புதிதாக அடையாள அட்டை பெறல், பிறப்புச் சான்றிதழ் மற்றும் திருமணப்பதிவு போன்ற முன்னெடுக்கப்பட்டன.
அடையாள அட்டை பெறுவதற்கான புகைப்படம் மற்றும் முத்திரைகள் சமாதான நீதவானின் சத்தியக்கடதாசி, பொலிஸ் அறிக்கை என்பன இலவசமாக வழங்கப்பட்டன. இந்நடமாடும் சேவைக்கு பிரதேச செயலக ஊழியர்கள், பட்டதாரிப் பயிலுநர்கள், பொலிஸார், அமர்த்தப்பட்டிருந்ததுடன் இவர்களுக்கான மதிய உணவும் வழங்கப்பட்டது.
புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அவை குறுகிய நேரத்திற்குள் உரியவர்களுக்கு வழங்கப்பட்டதுடன், ஒவ்வொரு பிரிவினரும் தத்தமது கிராம அலுவலர் மூலம் அடையாள அட்டைக்கான விண்ணப்பித்தலை மேற்கொண்டிருந்தனர்.
பிறப்புச் சான்றிதழ் பெறுபவர்களும் அதற்கான விண்ணப்பத்தைப் பூரணப்படுத்திக் கொடுத்த பின் அவர்களுக்கான பிறப்புச் சான்றிதழும் வழங்கப்பட்டன.
இந்தச் சேவையைப் பெறுவதற்கு அச்சுவேலி, ஆவரங்கால், பத்தமேணி, கதிரிப்பாய், தம்பாலை, வளலாய், இடைக்காடு நாவற்காடு, தோப்பு, நவக்கிரி போன்ற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கொக்குவில் கிராம சேவகரின் வீட்டிற்கு இனந்தெரியாதோர் கல்வீச்சு
யாழ். கொக்குவில் கிராம சேவகரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் கல்லால் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்று இரவு கொக்குவில் மேற்கு ஜே/104 கிராம சேவகரின் வீட்டின் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தின்போது, சுமார் 75,000 ரூபா பெறுமதியான பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக, கிராம சேவகர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten