maandag 19 augustus 2013

எதிர்க்கட்சிகள் மீது சேறு பூசும் அரசாங்கம்- தொடர் போராட்டங்களை நடாத்த எதிர்க்கட்சிகள் திட்டம்! - அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நவனீதம்பிள்ளையிடம் பேசப்படும்

சர்வதேச விசாரணைகளுக்கு இடமில்லை!– அரசாங்கம் - போர் குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கமளிக்கப்படும்!– கோத்தபாய
[ ஞாயிற்றுக்கிழமை, 18 ஓகஸ்ட் 2013, 01:29.39 AM GMT ]
போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை, போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென கோரினாலும் அதற்கு இடமளிக்கப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விசாரணைகளுக்காக இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலை நவனீதம்பிள்ளை கோரி நிற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இவ்வாறான கோரிக்கைக்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என தெரிவிக்கப்படுகிறது.
நவனீதம்பிள்ளை, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
போர்க் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் போலியானவை என இதன் போது பாதுகாப்புச் செயலாளர், நவனீதம்பிள்ளைக்கு விளக்கம் அளிக்க உள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்யும் நவனீதம்பிள்ளை பல்வேறு தரப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
காணாமல் போதல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கமளிக்கப்படும் – கோத்தபாய
காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமளிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் இறுதிக் கட்ட போரின் போது கடத்தல்கள் காணாமல் போதல்கள் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு விளக்கமளிக்கப்பட உள்ளது.
சர்வதேச சமூகத்தினால் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.
இது தொடர்பில் முழுமையான விளக்கம் அளிக்கப்படும்.
அதனை நம்புவதும் நம்பாமல் விடுவதும் அவரது விருப்பம் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் மீது சேறு பூசும் அரசாங்கம்- தொடர் போராட்டங்களை நடாத்த எதிர்க்கட்சிகள் திட்டம்! - அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நவனீதம்பிள்ளையிடம் பேசப்படும்
[ ஞாயிற்றுக்கிழமை, 18 ஓகஸ்ட் 2013, 01:37.28 AM GMT ]
அரசாங்கத்தின் பிழைகளை மூடி மறைத்துக் கொள்ளும் நோக்கிலேயே எதிர்க்கட்சி மீது சேறு பூசப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி பலவீனமடைந்துள்ளது குற்றம் சுமத்துவதனை விடவும், ஆளும் கட்சி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். வடக்கு தேர்தல் குறித்து அரசாங்கம் அச்சமடைந்துள்ளது.
வடக்கில் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்பதனை அரசாங்கம் புரிந்து கொண்டுள்ளது. வடக்கு தேர்தலை குழப்புவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.
ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சி மீது பல்வேறு குற்றச் சாட்டுக்களை சுமத்திய போதிலும், உண்மையில் அரச சொத்து துஸ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விதி மீறல்களில் ஆளும் கட்சி ஈடுபட்டுள்ளது.
அரசாங்கத்தின் எதேச்சாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக பாரியளவில் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளது என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களை நடாத்தத் திட்டம்
அரசாங்கத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களை நடாத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான எதிர்க்கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் கூட்டாக இணைந்து இந்த போராட்டத்தை நடாத்த உள்ளன.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் போராட்டங்கள் மற்றும் பேரணிகள் என்பன நாடு முழுவதிலும் நடத்தப்பட உள்ளது.
2014ம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரையில் நாட்டின் அனைத்து நகரங்களிலும் இவ்வாறான எதிர்ப்பு போராட்டங்கள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான இந்தப் போராட்டங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தீவிரப்படுத்தப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாரிடம் அரசாங்கத்தின் சில செயற்பாடுகள் தொடர்பில் பேசப்படும்: திஸ்ஸ அத்தநாயக்க
இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை தமது கட்சி சந்திக்க உள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நவநீதம்பிள்ளை சந்திக்கும் சந்தர்ப்பம் ஐக்கிய தேசியக்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் தமது கட்சியின் பிரதிநிதிகள் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
ஆணையாளருடனான சந்திப்பின் போது, அரசாங்கத்தின் சில செயற்படுகள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்றார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதுடன் அவர் 31 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் அறிவித்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten