maandag 12 augustus 2013

வட மாகாணசபைத் தேர்தல் தமிழ்மக்களின் மூன்றாம் கட்ட போராட்டம்!- கூட்டமைப்பு விளக்கம்

வடமாகாண தேர்தல்! வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் 10 நாட்களுக்கு முன் இலங்கை வருவர்
[ திங்கட்கிழமை, 12 ஓகஸ்ட் 2013, 02:03.38 AM GMT ]
வட மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு வரவழைக்கப்படவுள்ள சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் 25 ற்கு மேற்பட்டோர்  உரிய நேரத்தில் இலங்கையை வந்தடைவரென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
 தேர்தல்கள் திணைக்களத்தின் நேரடி அழைப்பின் பேரில் தெற்காசிய தேர்தல் முகாமைத்துவ அமைப்பிலிருந்து 17 பேரும் பொதுநலவாய அமைப்பிலிருந்து விசேட பிரதிநிதிகள் குழுவொன்றும் வட மாகாண சபைத் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ளது.
இதற்கு மேலதிகமாக பெப்ரல் அமைப்பு ஆறு நாடுகளிலிருந்து எட்டு கண்காணிப்பாளர்களை தேர்தலின் நிமித்தம் வரவழைக்க தீர்மானித்திருப்பதாக அதன் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஏற்கனவே தெற்காசிய தேர் தல் முகாமைத்துவ அமைப்பு மற்றும் பொதுநலவாய அமைப்புகளிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய அதன் பிரதிநிதிகள் உரிய நேரத்தில் இலங்கை வருவதனை உறுதி செய்திருப்பதாகவும் அவர சுட்டிக் காட்டினார்.
தேர்தலுக்கு முன்பாக இலங்கையின் கள நிலையை ஆராய்வதற்காக பொதுநலவாய அமைப்பின் ஆய்வாளர்கள் அடங்கிய குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வந்து சென்றது.
தேர்தலுக்கு முன்பும் தேர்தலின் போதும் பொதுநலவாய அமைப்பின் மேலும் பல பிரதிநிதிகளடங்கிய குழு குறித்த கால இடைவெளியில் இலங்கைக்கு விஜயம் செய்து தொடர்ந்தும் தேர்தல் கள நிலவரம் குறித்து ஆராயுமெனவும் தேர்தல்கள் திணைக்களத்துக்கு அறியத் தந்துள்ளது.
அத்துடன், தெற்காசிய தேர்தல் முகாமைத்துவ அமைப்பிலிருந்து விசேட பிரதிநிதியொருவரின் தலைமையின் கீழ் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மூன்று கண்காணிப்பாளர்கள் வீதமும் பூட்டான், மாலைதீவு, நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து தலா இரு கண்காணிப்பாளர்களும் ஆப்கானிஸ்தானிலிருந்து ஒருவருமாக 17 பேர் இலங்கை வரவிருப்பதாகவும் அவர் கூறினார்.
தேர்தல் நடைபெறுவதற்கு சுமார் 10 நாட்களுக்கு முன்பாக அவர்கள் வட மாகாணத்திற்கு வருகை தரவுள்ளனரெனவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.
இதேவேளை, பெப்ரல் அமைப்பின் அழைப்பின் பேரில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான தெற்காசிய வலையமைப்பிலிருந்து எட்டு சர்வதேச கண்காணிப்பாளர்கள் இலங்கை வருவது உறுதியெனவும் தேவையேற்படின் இதன் எண்ணிக்கை பின்னர் அதிகரிக்கப்படுமெனவும் அதன் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இவர்கள் தாய்லாந்து, ஜப்பான், பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், நேபாளம் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கை வரவுள்ளனர்.
சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலே சர்வதேசத்தினரின் ஒரே குறியாக இருப்பதனால் வேட்பாளர்களினதும் வாக்காளர்களினதும் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் தாங்கள் வரவழைக்கும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அனைவரையும் வட மாகாணத்திலேயே கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவரெனவும் ரோஹண கூறினார்.
பொதுவாக மாகாண சபைத் தேர்தலுக்காக சர்வதேச கண்காணிப்பாளர்களை நாம் வரவழைப்பது இல்லை. இருப்பினும் வடமாகாண சபைத் தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையென்பதனால் இதனை நீதியாகவும் சுதந்திரமாகவும் நடத்த கூடுதல் முயற்சிகளை முன்னெடுக்கிறோமெனவும் அவர் குறிப்பிட்டார். 
வட மாகாணசபைத் தேர்தல் தமிழ்மக்களின் மூன்றாம் கட்ட போராட்டம்!- கூட்டமைப்பு விளக்கம்
[ திங்கட்கிழமை, 12 ஓகஸ்ட் 2013, 01:03.28 AM GMT ]
இலங்கையில் மாகாண சபை என்பது அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்றும் கூறி வந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெளிவுபடுத்தியது.
வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண சபையிலேயே போட்டியிடப் போவதாகத் தெரிவித்து, கடந்த 2008 ஆண்டு கிழக்கு மாகாண சபைத்தேர்தலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புறக்கணித்திருந்தது.
ஆயினும் தற்போது, வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டு, வடமாகாணத்திற்குத் தனியாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தாக்கல் செய்திருக்கின்றது.
இந்த நிலையில் இந்த மாகாண சபையில் கூட்டமைப்பு ஏன் போட்டியிடுகின்றது என்பது குறித்த விளக்கமளிக்கப்பட்டிருக்கின்றது.
கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைபபின் நாடாளுமன்ற உறுப்பினராகிய மாவை சேனாதிராஜா, தமிழர்களுடைய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அரசாங்கம் இந்தத் தேர்தலை நடத்தவில்லை என்று கூறினார்.
எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கு இது ஒரு களமாக அமையும் என்ற காரணத்தினாலேயே இந்தத் தேர்தலில் பங்கு பெறுவதாகவும் தெரிவித்தார்.
கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன்,
அஹிம்சை வழி போராட்டம், ஆயுதப் போராட்டம் என்ற வகையில் மூன்றாம் கட்ட போராட்டமாக மாகாண சபைத் தேர்தல் அமைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆயுதப் போராட்டத்தின்போது, அது ஜனநாயக முறையில் மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கவில்லை என்று கூறி, சர்வதேசம் அதனை ஏற்கவில்லை என்பதையும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்தத் தேர்தலின் மூலம், மக்களின் ஆதரவைப் பெற்று பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முற்பட்டிருக்கின்றோம் என்பதை சர்வசேத்திற்கு எடுத்துக் காட்டி அதன் ஊடாக உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதற்காகவே இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten