maandag 12 augustus 2013

பதுளையில் நடத்தப்பட்ட தேடுதலில் 34 பேர் கைது - போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் பொலிஸ் அதிகாரிக்கு சிறை - போதைப் பொருள் மன்னர் எனக் கூறப்படும் குடு ராஜா கைது!

பதுளையில் நடத்தப்பட்ட தேடுதலில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 34 பேர் கைது செய்யப்பட்டனர்.
பதுளையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில், பல குற்றச்சாட்டுகளுக்கு நீதிமன்றத்தினால் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட 9 பேர் உட்பட 34 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பதுளை நகரம், தெல்பெத்ததோட்டம், கிளேன்-ஹெல்பின் தோட்டம், தல்னெ ஆகிய பிரதேசங்களில் நேற்று இந்த திடீர் தேடுதல் நடத்தப்பட்டது என பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 17 பேர் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் பொலிஸ் அதிகாரிக்கு சிறை
கஞ்சா போதைப் பொருளை விற்பனை செய்த, பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு கிழக்கு மாகாண மேல் நீதிமன்றம் இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.
மாவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த இந்த பெண் பொலிஸ் அதிகாரி கஞ்சாவை தன்வசம் வைத்திருந்தமை, அதனை விற்பனை செய்தமை ஆகியன தொடர்பில் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, நீதிபதி தமித் தொட்டவத்த இந்த தீர்ப்பை வழங்கினார்.
சுனிதா விஜேசிங்க என்ற பெண் பொலிஸ் அதிகாரிக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியிடம் 950 கிராம் கஞ்சா இருந்தாக அவரை கைது செய்த பதியத்தலாவ பொலிஸாரின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் மன்னர் எனக் கூறப்படும் குடு ராஜா கைது
போதைப் பொருள் மன்னர் எனக் கூறப்படும் பாதாள உலக குழுவொன்றின் தலைவரான குடு ராஜா என்பவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்த நபர் 2.5. மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் ராகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருளை கொள்வனவு செய்யும் நபர்களை போன்று நடித்த பொலிஸ் அதிகாரிகள் சிலர், சந்தேக நபரிடம் இருந்த போதைப் பொருளை கொள்வனவு செய்வது தொடர்பில் பேரம் பேசியுள்ளனர்.
இதன் போது ஹெரோயின் போதைப் பொருளுக்கு 3 மில்லியன் ரூபா விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு மில்லியன் ரூபாவை முதலில் செலுத்தி விட்டு, எஞ்சிய தொகையை பிறகு செலுத்துவதாக பேசப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சந்தேக நபரை சுற்றிவளைத்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை இரண்டு நாட்கள் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் காவற்துறையினர் தடுத்து வைத்து விசாரணை நடத்திய போது, எஞ்சிய ஹெரோயின் தொகை ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்ணொருவரிடம் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், 7 நாள் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்ற அனுமதியை பெற்று கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் ரி. கணேசனநான், இன்ஸ்பெக்டர் என். அத்தநாயக்க ஆகியோர் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten