வெலிவேரியாவில் மூடப்பட்ட கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையின் பணியாளர்கள் ஆகஸ்ட் 22 ஆம் திகதியன்று கடமைகளுக்கு திரும்புமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த முதலாம் திகதியன்று இந்த தொழிற்சாலை தொடர்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
அதேநேரம் இந்த சம்பவத்துக்கு முன்னர் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தொழிற்சாலையை இரண்டு கிழமைகளுக்கு மூடுமாறு உத்தரவிட்டிருந்தார்.
இந்தநிலையில் வெலிவேரிய ரத்துபஸ்வெல மக்கள் தமது குடிநீருக்கு இந்த தொழிற்சாலையின் கழிவுகள் ஆபத்தை உண்டாக்குவதாக தெரிவித்த முறைப்பாட்டுக்கு இன்னும் தீர்வு வழங்கப்படவில்லை.
மாறாக குறித்த தொழிற்சாலையை வேறு இடத்துக்கு மாற்றுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
எனினும் அதற்குள் பிரதேச மக்களுக்கான குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்கு அதிகாரிகள் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வெலிவேரிய மக்கள் தெரிவித்துள்ளனர்.
வெலிவேரிய துப்பாக்கி சூடு. இராணுவத்தின் விசாரணை அறிக்கை 21
ஆகஸ்ட் முதலாம் திகதி வெலிவேரிய ரத்துபஸ்வெல என்ற இடத்தில் இடம்பெற்ற இராணுவ துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இராணுவத்தின் விசாரணை அறிக்கை ஆகஸ்ட் 21ம் திகதி கையளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் வாக்குமூலத்தை இராணுவ விசாரணைக்குழு பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையே இதற்கான காரணம் என்று இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த இராணுவ விசாரணை குழுவுக்கு மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் தலைமை வகிக்கிறார்.
வெலிவேரியாவில் குடிநீர் தொடர்பில் பொதுமக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.
வெலிவேரிய சம்பவம்! இராணுவ முகாம்களில் விசாரணை நடத்தக் கூடாது: மனித உரிமை ஆணைக்குழு
வெலிவேரிய சம்பவம் குறித்து இராணுவ முகாம்களில் விசாரணை நடத்தக் கூடாது என மனித உரிமை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
விசாரணை நடவடிக்கைகள் இராணுவ முகாம்களிற்கு வெளியே நடத்தப்பட வேண்டுமென மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பிரதீபா மஹனாமஹேவா தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக மக்களை முகாம்களுக்கு அழைக்கக் கூடாது. பொதுமக்களிடம் விசாரணை நடத்த வேண்டுமாயின் அவர்களை பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்து விசாரணை நடத்த முடியும்.
அவர்களிடம் வாக்க மூலங்களை பதிவு செய்து கொள்ள முடியும். முகாம்களுக்கு பொதுமக்களை அழைத்தால் அவர்கள் அச்சமடையக் கூடும் எனத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் ஏனைய நிறுவனங்களிடமிருந்து கிடைக்கப்பெறும் அறிக்கையின் அடிப்படையில் வெலிவேரிய சம்பவம் தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten