woensdag 7 augustus 2013

சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்!- இலங்கை சிறையில் 159 தமிழக மீனவர்கள்!

தங்கைக்காக பரீட்சை எழுதிய அக்கா கைது செய்யப்பட்டுள்ளார்!
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 02:03.23 AM GMT ]
நடனப் பாடத்திற்காக இடம்பெற்ற பரீட்சையில் தங்கைக்காக அக்கா பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
இவ்வாறு பரீட்சை மோசடியில் ஈடுபட்ட குறித்த யுவதியை எம்பிலிபிட்டி மொரகட்டிய மஹா வித்தியாலய பரீட்சை பரிசோதகர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
தங்கையின் தேசிய அடையாள அட்டையின் புகைப்படத்திற்கு மேல் தனது புகைப்படத்தை ஒட்டி குறித்த யுவதி பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
குறித்த யுவதி பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்பினை மேற்கொள்பவர் என்பது விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய யுவதி எம்பிலிபிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்!- இலங்கை சிறையில் 159 தமிழக மீனவர்கள்!
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 12:43.08 AM GMT ] [ விகடன் ]
நாளுக்கு நாள் தமிழக மீனவர்களின் நிலை மோசமாகி வருகிறது. கடந்த சில தினங்களில் மட்டும் காரைக்கால், நாகை மற்றும் இராமேஸ்வர மீனவர்களை கொத்து கொத்தாகப் பிடித்துச் சிறையில் அடைத்துள்ளது இலங்கை அரசு.
காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 29 மீனவர்கள்; நாகை, நம்பியார் நகர், அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 110 மீனவர்கள், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள்... என மொத்தம் 159 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு திருகோணமலை, யாழ்ப்பாணம் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த திடீர் கைதுகளால் பல லட்ச ரூபாய் நஷ்டமடைந்து, தொழிலை விட்டு வெளியேறும் அவல நிலைக்கு மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த மாதவன், ''எங்க அப்பா சின்னையன் கடந்த 26-ம் தேதி மீன் பிடிக்கக் கடலுக்குப் போனாரு. அப்பாகூட அஞ்சு பேர் போனாங்க. மீன் பிடிச்சுட்டுக் கரைக்குத் திரும்பும் போது, இலங்கை கடற்படை பிடிச்சுட்டாங்க. இப்ப யாழ்ப்பாணம் சிறையில் அடைச்சு வெச்சிருக்காங்க. எங்களுக்குத் தொழில் பண்ணவே பயமா இருக்குங்க. இதை விட்டாலும் வேற எந்தத் தொழிலும் எங்களுக்குத் தெரியாது. கடல்ல மீன்வரத்து குறைஞ்சுட்டதால, ஏற்கெனவே எங்களுக்குச் சரியான பாடு இல்லை. இதுல இந்திய எல்லை வரை உள்ளே நுழைஞ்சு, இலங்கை கடற்படைக்காரங்க எங்களை கைதுபண்ணிட்டுப் போறாங்க. இதைத் தட்டிக் கேட்க மத்திய அரசுக்கு தைரியம் கிடையாது'' என்றார் வேதனையோடு.
அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர் மதியின் மனைவி சூரியகலா, ''மீன் பிடிச்சது குத்தமா? அதுக்கு ஜெயில் தண்டனையா? அப்பா எப்ப வருவாங்கனு பிள்ளைங்க கேக்குதுங்க... அவங்ககிட்ட என்ன சொல்றதுன்னே தெரியல'' என்றார் கண்ணீரோடு.
வங்கக் கடல் மீன் தொழிலாளர் சங்க நிர்வாகி குமாரவேல், ''நாளுக்கு நாள் இந்தப் பிரச்னை அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. மத்திய அரசு எங்கள் மீது போதிய அக்கறை காட்டவில்லை. பி.ஜே.பி. ஆட்சியின் போது இலங்கை நடத்தும் அடாவடி கைதுகளுக்கு கடுமையான கண்டனங்களை அரசு தெரிவிக்கும். ஆனால் காங்கிரஸ் கட்சியோ, எங்களை மனிதனாகக்கூட பார்ப்பது கிடையாது.
வெளியுறவுத் துறை அமைச்சர், இலங்கையிடம் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, இனி இதுபோன்று நடக்காது என்று அறிக்கை கொடுக்கிறார். கொடுத்து சில மணி நேரத்திலேயே கைது நடக்கிறது. இந்தப் பிரச்னைக்காக போராடி சோர்ந்ததுதான் மிச்சம்.
கச்சதீவு அருகே மீன் பிடிப்பவர்களை கைதுசெய்த இலங்கை இராணுவம், இன்று கொஞ்சம் கொஞ்சமாக இந்திய கடல் எல்லை வரை வந்து விட்டார்கள்.
இந்திய அரசின் சட்டத்துக்குக் கட்டுப்பட்டே அமைதியாக இருக்கிறோம். நாங்கள் கையாலாகாதவர்கள் கிடையாது. இலங்கை இராணுவத்தினருடன் எங்கள் மீனவன் மோதினால், நாங்கள் யாரென்று தெரியும்.
இனி நாங்கள் பொறுமை காக்க மாட்டோம்.
மத்திய அரசு உடனடியாக தலை​யிட்டு இலங்கை மற்றும் தமிழக மீனவ பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகளைக் கொண்டு புதிய ஒப்பந்தம் போட வேண்டும்.
இதனை மத்திய அரசு நிறைவேற்றாத பட்சத்தில், சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்வோம்.
கேரளாவில் இரண்டு மீனவர்களை இத்தாலி வீரர்கள் கொன்றதற்காக கொதித்தெழுந்த மத்திய அரசு, இதுவரை 549 பேரை கொன்று, 2000 பேரை ஊனமாக்கி, 1000 பேரை தேடுபவர் பட்டியலில் வைக்க காரணமாக இருந்த இலங்கை அரசை என்ன செய்தது?'' என்று கேள்வி எழுப்பினார்.
தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படை ஒரு பக்கம் குடைச்சல் கொடுக்கிறது என்றால், மறுபக்கம் இந்திய கடற்படை பெரும் தலைவலியாக உள்ளது.
இந்திய கடற்படை வீரர்களின் மீது மனித உரிமை அமைப்பில் புகார் கொடுத்துள்ளார் தேசிய மீனவப் பேரவையின் பொதுச் செயலாளர் இளங்கோ.
மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதல், அப்பட்டமான மனித உரிமை மீறல். அவர்கள் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளோம்.
வேளாங்கண்ணியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதையெல்லாம் தட்டிக் கேட்க இந்திய கடற்படை முன்வராது. மாறாக, அப்பாவி தமிழக மீனவன் மீது தன் முழு அதிகாரத்தையும் செலுத்தி நசுக்குகின்றனர்  என்றார் காட்டமாக.
இலங்கை கடற்படை, இலங்கை மீனவர்கள், இந்திய கடற்படை... எத்தனை எதிரிகள்தான் தமிழக மீனவனுக்கு?

Geen opmerkingen:

Een reactie posten