woensdag 14 augustus 2013

இலங்கைக்கு போப் ஆண்டவர் போகக் கூடாது! அனல் கக்கும் கத்தோலிக்க திருச்சபைகள்!

[ விகடன் ]

ஈழத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, போப் ஆண்டவர் பிரான்சிஸ்,  போர்க்குற்றவாளியான ராஜபக்சவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு செல்லக் கூடாது என்பது எங்களது திட்டவட்டமான முடிவு. இவ்வாறு கத்தோலிக்க திருச்சபைகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
உலகம் முழுவதும் வாழும் கத்தோலிக்க சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் தங்கள் நாட்டுக்கு வர வேண்டும் என இலங்கை அதிபர் ராஜபக்ச அழைப்பு விடுக்க... அந்த அழைப்பை ஏற்று இலங்கைச் செல்வதற்குப் பரிசீலித்து வருவதாக போப் சொல்லியிருப்பது இலங்கை, தமிழகம் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
போர்க்குற்றவாளியான ராஜபக்ச அழைப்பை போப் ஏற்கக் கூடாது என்கிற கோரிக்கை தமிழக தேவாலயங்களுக்கு உள்ளே இருந்தும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
இதுபற்றி நம்மிடம் பேசிய பாளையங்​கோட்டை மகாராஜ நகர் ததாதேயு ஆலயத்தின் பங்குத் தந்தையான பாக்கியசெல்வன்,
இலங்கையில் இப்போதும் கூட கிறிஸ்தவ தேவால​யங்களும் சிவ தலங்களும் இஸ்லாமிய தர்காக்களும் தரைமட்டம் ஆக்கப்பட்டு, சிங்கள மயமாக்கும் வேலைகளை செய்கிறது அந்நாட்டு அரசு.
இப்போது ராஜபக்சவுக்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதனால் உலக அரங்கில் தனது முகமூடி கிழிவதைப் பொறுக்க முடியாத ராஜபக்ச, போப் பிரான்சிஸ் தங்கள் நாட்டுக்கு வந்து சென்றால், தான் செய்த பாவங்கள் எல்லாம் மறைந்து விடும் என நினைக்கிறார்.
உலகம் முழுவதும் அகதிகளாக அவதிப்பட்டு வரும் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஈழத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர் இலங்கைக்கு செல்லக் கூடாது என்பது எங்களது திட்டவட்டமான முடிவு.
இதனை வலியுறுத்தி அனைத்து கத்தோலிக்க குருக்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறோம் என்றார் திட்டவட்டமாக.
பாளையங்கோட்டை இங்கிலீஷ் தேவாலய குருவான கிப்ஸ்டன்,
பன்னாட்டு விசாரணையில் இருந்து தப்புவதற்காக எந்தவிதமான மோசடி வேலைகளைச் செய்யவும் ராஜபக்ச அரசு தயங்குவது இல்லை. அதன் ஒரு பகுதியாகவே போப் ஆண்டவரை இலங்கைக்கு அழைத்து இருக்கிறார்.
அவரது மோசடி வலையில் போப் ஆண்டவர் வீழ்ந்துவிடக் கூடாது.  அவர் அங்கே சென்றால், அந்த நாட்டில் நடந்த போர்க்குற்றத்தை அங்கீகரிப்பது போல ஆகிவிடும் என்றார்.
தமிழர்களின் குரல் வத்திக்கானை எட்டுமா?

Geen opmerkingen:

Een reactie posten