தனியார் காணிகள் மற்றும் வீடுகளிலிருந்தும் இராணுவத்தினர் விரைவில் வெளியேறுவார்கள் என்று யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ். அரியாலையில் இடம்பெற்ற இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பல வருடங்களுக்குப் பின்னர் இந்த வீடுகளை பொது மக்களிடம் கையளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம். இது அரசியல் நோக்கத்திற்காக நாங்கள் மேற்கொள்ளவில்லை.
யுத்தத்திற்குப் பிந்திய காலத்தில் யாழ். நகரில் முக்கிய இடங்களில் இருந்த இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி அந்த இடங்களை பொது மக்களிடம் வழங்கியிருக்கின்றோம்.
மிகவிரைவில் தனியார் காணியில் உள்ள 52 படையணி, மற்றும் 513, 515 ஆகிய படைப்பிரிவுகள் உள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டு உயர்பாதுகாப்பு வலயப்பகுதிக்கும் அரச காணிகளுக்கும் மாற்றம் செய்யப்படவுள்ளது.
அத்துடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனியார் காணிகளில் இருந்து வெளியேறவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றார்.
இதனால் அவரின் வேண்டுகோளுக்கிணங்க காணிகளை விடுவித்து வருகின்றோம். இருந்தாலும் பலாலியை விடச் சொல்லிக் கோரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
2008ம் ஆண்டுக்கு முன்னர் யாழில் 43 ஆயிரம் படையினர் இங்கிருந்தனர். முப்பதாயிரம் இராணுவத்தினர் குறைக்கப்பட்டு தற்போது 13 ஆயிரம் படையினர் நிலைகொண்டுள்ளனர் என்றார்.
அத்துடன் சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்ற பேதங்களை விடுத்து நாம் அனைவரும் இலங்கையர் என்ற எண்ணத்தில் செயற்படவேண்டும் என்றும் அவர் கோரினார்.
யாழில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டுமென்ற கோஷத்தை நிறுத்தவும்: ஹத்துருசிங்க
யாழ். குடாநாட்டிலிருந்து கடந்த 4 வருடங்களில் 30 ஆயிரம் படையினர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், இராணுவம் நிலைகொண்டிருந்த பொதுமக்களின் நிலங்கள் பெருமளவு விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில் படையினர் வெளியேறவேண்டும் என்ற கோஷத்தை நிறுத்திக் கொள்ளுங்கள் என யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் அரியாலை, கோப்பாய், ஊரெழு போன்ற இடங்களில் இராணுவம் தங்கியிருந்த பொதுமக்களுடைய நிலங்களை விடுவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,
கடந்த 2008ம் ஆண்டு யாழ்.குடாநாட்டில் 43 ஆயிரம் படையினர் நிலைகொண்டிருந்தனர். எனினும் கடந்த 4 வருடங்களில் 30 ஆயிரம் படையினர் வெளியேற்றப்பட்டு தற்போது 13ஆயிரம் படையினர் மட்டுமே தற் போது யாழ்.குடாநாட்டில் உள்ளனர்.
அதேபோன்று இராணுவம் தங்கியிருக்கும் பொதுமக்களுக்குச் சொந்தமான நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. இன்றும் பெருமளவி லான நிலம் விடுவிக்கப்படுகின்றது. 512 வது படைப்பிரிவு தங்கியிருக்கும் ஊரெழு, 52வது படைப்பிரிவு தங்கியிருக்கும் வறணி, 515 வது படையணி தங்கியிருக்கும் தென்மராட்சி படைமுகாம் போன்றனவும் அகற்றப்படும்.
எனவே யுத்தத்தின் பின்னர் யாழ். குடாநாட்டிலிருந்து படையினர் முற்றாக அகற்றப்பட்டு வருகின்றனர்.
எனவே மக்கள் வாழும் பகுதிகளுக்குள் இராணுவம் எதிர்காலத்தில் இருக்கப் போவதில்லை. அவர்கள் அனைவரும் பலாலிக்கு கொண்டு செல்லப்படுவர். அந்த வகையில் இராணுவம் வெளியேறவேண்டும், பலாலியிருந்தும் இராணுவம் போகவேண்டும் என யாரும் கேட்க கூடாது. நாங்கள் இதனை அரசியல் நோக்கத்திற்காகச் செய்யவில்லை. இந்த நாட்டில் சிங்கள, தமிழ் மக்கள் சகோதரத்துவத்துடன் வாழவேண்டும் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten