[ திங்கட்கிழமை, 10 யூன் 2013, 07:40.54 AM GMT ]
கொழும்பு அமெரிக்க தூதரகத்தில் விசா பெறுவதற்கான விண்ணப்பத்தை கையளித்துள்ள ஒரு யாழ்ப்பாண குடும்ப பெண் ஒருவர் பிழையான ஆவணங்களை சமர்ப்பித்ததாக கொழும்பு கோட்டை நீதிமன்றில் அமெரிக்க தூதரக விசாரணை அதிகாரி வழக்கு தாக்கல் செய்திருந்தார். ஆயினும் 8 வருடங்களின் பின் அவர் வழக்கிலிருந்து நிரபராதி என விடுதலையாகியுள்ளார்.
இது குறித்து தெரியவருவதாவது:
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் ஜெயகாந்தா தனது கணவருக்கும் தனக்கும் தங்களது மூன்று பிள்ளைகளுக்கும் 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பு அமெரிக்க தூதரகத்தில் அமெரிக்க விசா பெறுவதற்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பங்களை கையளித்துள்ளார்.
விசாவிற்காக கையளிக்கப்பட்ட ஆவணங்களை பரிசீலனை செய்த அமெரிக்க தூதரகத்தின் கொன்சுயூலர் விசாரணை அதிகாரி பிரசன்னா கம்மன்பில,
விசா விண்ணப்பதாரியான ஆறுமுகம் ஜெயகாந்தாவினால் கையளிக்கப்பட்ட விண்ணப்பத்தில் ஜெயகாந்தாவின் பிறந்த திகதி 25-11-1959 என குறிப்பிடப்பட்டிருக்கையில், பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ்களில் தாயாரான ஜெயகாந்தாவின் பிறந்த திகதி 01-04--1960 எனக் குறிப்பிடப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார்.
அதன் பின்னர் தூதரக விசாரணை அதிகாரி, கொழும்பு மோசடிப் பிரிவுப் பொலிஸாரிடம் இது குறித்து முறைப்பாடு செய்ததையடுத்து ஆறுமுகம் ஜெயகாந்தாவை கைது செய்த பொலிஸார் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.
கொழும்பு மோசடிப் பிரிவுப் பொலிஸார் நீதிமன்றில் தாக்கல் செய்த அறிக்கையில், பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையையறிய மாளிகாவத்தையில் அமைந்துள்ள பதிவாளர் காரியாலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், தமக்கு கிடைக்கப்பெற்ற அறிக்கையின் படி இந்த ஆவணங்கள் மோசடியானவை எனவும் தெரிவித்திருந்தனர்.
பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த ஆறுமுகம் ஜெயகாந்தாவிறகு எதிராகத் பொலிஸாரால் தாக்கல் செய்யப்படடிருந்த இந்த வழக்கு விசாரணையில் முதலாவது சாட்சியான அமெரிக்க தூதரகத்தின் கொன்சுயூலர் விசாரணை அதிகாரி பிரசன்னா கம்மன்பில சாட்சியமளித்திருந்தார்.
தொடர்ந்து, பதிவாளர் நாயகம் சார்பாக சாட்சியமளித்த அப்துல் லத்தீப் முகமட் இல்லியாசை எதிரி தரப்பில் குறுக்கு விசாரணை செய்கையில்,
ஆறுமுகம் ஜெயகாந்தாவின் பிறந்த தினமான 01-04-60- பிறப்புச் சான்றிதழில் 25-11-1959 எனப் பதியப்பட்டிருந்ததாகவும் தனது சரியான பிறந்த தினத்தை திருத்தியமைப்பதற்காக விண்ணப்பதாரி சட்ட ரீதியாக பதிவாளர் நாயகத்திற்கு விண்ணப்பித்ததையடுத்து அவரது பிறந்த தினம் 01-04-1960 எனப் பதியப்பட்டுள்ளதாகவும் சாட்சியமளித்தார்.
தமிழில் இருந்து மொழிமாற்றம் செய்கையில் விண்ணப்பதாரர்களான மூன்று பிள்ளைகளின் பிறப்புச் ;சான்றிதழ்களிலும் தவறுதலாக 25-11-1959 என்ற திகதி குறிப்பிடப்பட்டிருந்தமையையும் பதிவாளர் நாயகக் காரியாலயத்தினால் பொலிசாருக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையில் ஏற்பட்ட தவறும் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அதனையடுத்து கொழும்புக் கோட்டை நீதவான் எதிரியை வழக்கிலிருந்து விடுதலை செய்ததுடன், கடவுச்சீட்டு, அடையாள அட்டை ஆகியவற்றை உடனடியாக ஆறுமுகம் ஜெயகாந்தாவிடம் கையளிக்கும்படியும் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
எதிரி தரப்பில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா ஆஜராகியிருந்தார்.
காணிப் பதிவு சட்டமும் சீர்த்திருத்தப்படவுள்ளது?
[ திங்கட்கிழமை, 10 யூன் 2013, 03:19.51 AM GMT ]
இலங்கையில் காணி உரிமை பதிவு சட்டமும் சீர்த்திருத்தம் செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டு அரசாங்க ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்த சட்டம் தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு ஒன்று ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த குழு காணிப்பதிவு சட்டத்தில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் அறிவித்ததன் பின்னர், இதனை சீர்த்திருத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தனியார் காணிகள் மற்றும் பொது காணிகளையும் உள்ளடக்கியதாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவலின்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களில் உள்ள தனியார் காணிகள் பலவற்றை, உரிமைக் கோரப்படாத காணிகளாக அறிவித்து, சிங்களவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten