தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 10 juni 2013

கடுமையாகும் சுவிட்சர்லாந்தின் தஞ்சக் கோரிக்கை சட்டங்கள்

கதிர்காமம் முருகன் உற்சவம்! வழமைக்கு மாறாக ஆவணி மாதத்திற்கு மாற்றம்! இந்து பக்தர்கள் ஏமாற்றம்
[ ஞாயிற்றுக்கிழமை, 09 யூன் 2013, 11:47.43 PM GMT ]
இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடி மாத தீர்த்த உற்சவம் வழமைக்கு மாறாக இந்த வருடம் ஆவணி மாதம் நடைபெறும் என்று நிர்வாகத்தினர் எடுத்துள்ள முடிவு காரணமாக இந்து பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.
அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றான கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த உற்சவம் ஆடிப் பௌர்ணமிக்கு 15 நாள் முன்னதாக கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆடிப் பௌர்ணமி தினத்தில் தீர்த்தத்துடன் முடிவடைவது வழமையாகும்.
இந்த உற்சவ காலத்தில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான சிங்கள பௌத்தர்களும் தமிழ் இந்துக்களும் கதிர்காமம் சென்று வழிபடுவார்கள்.
ஆவணிப் பௌர்ணமிக்கு மாற்றம்
இந்த ஆண்டு, ஜூலை 8ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜுலை 22ம் திகதி ஆடிப் பௌர்ணமி தினமன்று தீர்த்த உற்சவத்துடன் முடிவடைவதாக இந்து பஞ்சாங்க நாட்காட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், ஆகஸ்ட் 7ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் உற்சவம் ஆகஸ்ட் 21ம் திகதி ஆவணி பௌர்ணமிக்கு முதல்நாள் அன்றே தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறும் என்று தற்போது ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த மாற்றம் தமக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் அளிப்பதாக இந்து அமைப்புக்கள் தமது கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
கதிர்காம ஆலயத்தின் உற்சவ தேதிகளை ஒட்டியே திருவிழாக்களை நடத்தும் முருகன் ஆலயங்களின் திருவிழாக் காலங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பஸ்நாயக்க நிலமே எனப்படும் கதிர்காம நிர்வாகத் தலைவர்களாலேயே இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான காரணங்கள் பற்றி தெரிவிக்கப்படவில்லை என்றும் நாட்டின் இந்து கலாசார திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆடிவேல் தினம்
இதேவேளை, கதிர்காம உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக வடக்கிலிருந்து- கிழக்கு மாகாணம் ஊடாக மாதக் கணக்கில் பாத யாத்திரையில் ஈடுபட்டுள்ள இந்து- அடியார்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட பாத யாத்திரை குழுவினர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் ஊடாக தற்போது திருகோணமலை மாவட்டம் பட்டித்திடல் முருகன் ஆலயத்தை வந்தடைந்துள்ளனர்.
ஆடி மாதம் பௌர்ணமிதான் முருகனுக்குரிய ஆடிவேல் தினம். அப்படியிருந்தும் கதிர்காமம் ஆடிவேல் உற்சவத்தில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றம் கவலை அளிக்கிறது என்று பாதயாத்திரை பக்தர்கள் கூறுகின்றனர்.
ஆனால், உற்சவத்தை முன்னிட்டு கன்னிக்கால் நாட்டப்பட்டு 45 நாட்களின் முடிவிலேயே தீர்த்தோற்சவம் நடத்த வேண்டுமென்பதால், கன்னிக்கால் நாட்ட வேண்டிய கடந்த வைகாசி பௌர்ணமி தினத்தன்று அதற்கு 'உகந்த நேரம்' அமையவில்லை என்று கதிர்காம ஆலயத்தின் தலைமை கப்புறாளை- பூசகர் சோமபால பி. ரத்நாயக்க தமிழோசையிடம் தெரிவித்தார்.
அதனாலேயே, எதிர்வரும் ஆனி பௌர்ணமி தினத்தில் கன்னிக்கால் நாட்டப்படும் என்றும் அவர் கூறினார்.

கடுமையாகும் சுவிட்சர்லாந்தின் தஞ்சக் கோரிக்கை சட்டங்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 09 யூன் 2013, 09:30.41 PM GMT ]
சுவிட்சர்லாந்தில் அகதித் தஞ்சம் கோருவோர் தொடர்பான சட்ட விதிகளை கடுமையாக்குவதற்கு அந்நாட்டு மக்கள் பலத்த ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.
தஞ்சக்கோரிக்கை தொடர்பான சட்டங்களில் கடந்த செப்டம்பரில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் 80 வீதமான மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளதாக ஆரம்பக்கட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்தப் புதிய சட்டவிதிகளின்படி, இராணுவத்திலிருந்து தப்பிவருபவர்கள் இனிமேல் அங்கு தஞ்சம் கோரமுடியாது.
அதேபோல, வெளிநாடுகளில் உள்ள சுவிஸ் தூதரகங்கள் ஊடாக இனிமேல் எவரும் தஞ்சம் கோரமுடியாதபடியும் சட்டத்திருத்தம் வந்துள்ளது.
தஞ்சக் கோரிக்கை சட்டத்தில் கொண்டுரப்பட்ட சட்டத்திருத்தத்தை எதிர்த்து, மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று மனித உரிமை அமைப்புகளும் இடதுசாரிகளும் நடத்திய கையெழுத்து வேட்டையின் பிரகாரமே இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தில் கடந்த பத்தாண்டுகளில் தஞ்சக் கோரிக்கைகள் அளவுகடந்து அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த சட்டத்திருத்தம் தாய்நாடொன்றிலிருந்து தஞ்சம் கோரி விண்ணப்பிப்பவர்களைப் பாதிக்காது என்றும் மூன்றாவது நாடொன்றில் உள்ள சுவிஸ் தூதரகத்தினூடாக விண்ணப்பிப்பதையே தடுப்பதாகவும் சுவிட்சர்லாந்தின் லுத்செர்ன் மாநில சோசலிஸக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் லதன் சுந்தரலிங்கம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
வெளிநாட்டவர்களின் குடியேற்றத்துக்கு எதிராக மேற்குலக நாடுகளில் அதிகரித்துவரும் அழுத்தங்களின் தொடர்ச்சியே சுவிட்சர்லாந்தின் கொள்கை மாற்றமும் என்றும் அவர் கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten