vrijdag 7 juni 2013

வாழைச்சேனையில் இராணுவம் தேடுதல்!-கூரிய ஆயுதங்கள் வைத்திருந்த 7 இளைஞர்கள் கைது!

வாழைச்சேனையில் இராணுவம் தேடுதல்!-கூரிய ஆயுதங்கள் வைத்திருந்த 7 இளைஞர்கள் கைது!
[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 04:53.25 PM GMT ]
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் கூரிய ஆயுதங்களை வைத்திருந்த இளைஞர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினரால் இச்சுற்றிவளைப்பு தேடுதல் இன்று வியாழக்கிழமை காலை 5 மணி முதல் 8 மணி வரை மேற்கொள்ளப்பட்டது.
வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற கோஸ்டி மோதலில் இரண்டு இளைஞர்கள் கத்தி குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்திருந்தனர்.
அத்துடன் அவ்விடத்தில் கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்தே இராணுவத்தினரால் இந்த சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போதே கூரிய ஆயுதங்களை வைத்திருந்த இளைஞர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இளைஞர்கள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தங்க நாக பாம்பை எடுக்க சுரங்கம் தோண்டிய நபர் கைது
[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 08:47.34 PM GMT ]
தங்கத்திலான நாக பாம்பின் சிலையொன்று இருப்பதாக கூறி நிலத்துக்கு அடியில் 10 அடி ஆழத்தில் 12 அடி நீளமாக சுரங்க மொன்றை தோண்டிய நபர் ஓருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிலாபம் கரவிட்டாகார பகுதியில் தம்பகெலேயாய என்ற இடத்தில் மிகவும் பழைமையான பாரிய மருதமொன்றுள்ளது. இதன் கீழே தங்கத்திலாலான நாகபாம்பின் சிலை ஒன்று இருப்பதாக கூறி புதையல் தோண்டுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே நேற்று முன்தினம் மாலை இப்பகுதியை பொலிஸார் சுற்றி வளைத்தனர்.
பொலிஸார் அங்கு சென்றபோது களியினால் செய்யப்பட்ட நாகபாம்பின் சிலையொன்றை வைத்து மரத்தின் கீழே ஒருவர் பூஜைகளை செய்துகொண்டிருந்துள்ளார். அவர் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகே சுமார் 8 அடி அகலமான பாரிய குழியொன்றும் தோண்டப்பட்டிருந்தது.
குழிக்குள் இறங்கியதும் அது சுமார் 10 அடி ஆழமாக தென்பட்டது. 10 அடி ஆழமான குழிக்குள் சுமார் 12 அடி நீளமான பக்க வாட்டில் சுரங்கமொன்றும் தோண்டப்பட்டிருந்ததை பொலிஸார் அவதானித்தனர். இதனையடுத்து பூஜைகளில் ஈடுபட்டிருந்த நபரையும் பூஜைப் பொருட்களையும் சிலாபம் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
புதையல் தோண்டும் நடவடிக்கையுடன் தொடர்புடைய ஏனைய நபர்களையும் கைது செய்யும் நடவடிக்கைகளில் சிலாபம் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். சிலாபம் பொலிஸ் நிலைய மோசடி ஒழிப்பு பிரிவினர் இந்த சுற்றி வளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten