[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 03:07.24 PM GMT ]
இதனை ஒவ்வொரு தமிழரும் நெஞ்சில் நிறுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட உன்னைச்சைப்பகுதியில் இன்று காலை நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களின் கூட்டத்தில், உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்
'மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தீர்மானித்து விட்டனர். இலங்கை அரசாங்கத்தை பொறுத்த வரையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வாக்களிக்கும் உரிமையை ஜனநாயக உரிமையை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் செவ்வனே நிறைவேற்ற வேண்டும்.
வாக்களிக்க தாமதிக்கும் பட்சத்தில் உங்களின் வாக்களிக்கும் உரிமை, சதிகாரர்களினால் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்படும் நிலைமையேற்படும். உங்கள் வீடுகளுக்கு அப்பால் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் தவறான முறையில் வாக்களிப்பு நடைபெறுகின்றதா என்பதையும் வாக்களிப்பு தாமதிக்கும் பட்சத்தில் மக்கள் அனைவரையும் வாக்களிப்பில் பங்குபெறச் செய்வதற்கான தூண்டுகோளை ஏற்படுத்துவதற்கு முன்னின்று உழைக்க வேண்டும்.
இந்தத் தேர்தலில் தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு ஆதரவாக அளிக்கப்படும் வாக்குகள் எதிர்காலத்தில் தமிழ் தேசியத்தை கொண்டுள்ள எமது பிரதிநிதித்துவத்தை குறைக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தும் என்பதையும் ஒவ்வொரு தமிழரும் நெஞ்சில் நிறுத்தவேண்டும்.
இவை மட்டுமல்ல தென்கிழக்கு அலகை கேட்டவர்கள் கிழக்கு மாகாணத்தை ஆளுகின்றனர். வட, கிழக்கை பிரித்தவர்கள் கிழக்கு மாகாணத்தில் மத்திய அரசாங்கத்தின் ஆளுமையை கட்டியெழுப்புகின்றனர். தமிழ் மக்களுக்கு உரிய உரிமை தொடர்பாக வாக்களிப்பின் மூலம் அதிக உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபையை ஆளும் நிலைமையை ஏற்படுத்துவதன் மூலமே எமது அதிகாரம் தொடர்பான செயற்பாடுகளை முன்கொண்டு செல்ல முடியும்.
இதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தவேண்டுமாயின் பெரும்பான்மையாக மாற்றத்தை விரும்புகின்ற தமிழ் மக்களின் கருத்தை ஒத்ததாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். மக்களின் விரும்பத்திற்கேற்றவாறே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவுகளை எடுக்கும்.
மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாகவே கிழக்கு மாகாணசபையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தமுடியும்.
கிழக்கு மாகாணமானது நிதியொதுக்கீடு, அபிவிருத்தி காணிப்பங்கீடு தொடர்பான விடயத்தில் வீதாசாரத்துக்கு ஏற்றமுறையில் சட்டவாக்கங்களை உருவாக்கி செயற்படுவதன் ஊடாக நல்லாட்சிமுறையை ஏற்படுத்தமுடியும். இதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுத்துவதற்கு முன்னின்று உழைக்க வேண்டும். எனவே எதிர்வரும் தேர்தலில் மக்கள் விரும்புகின்ற மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாகவே செயல்படுத்த முடியும்' என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszCScKalu3.html
கடந்த கால சம்பவங்களை மறந்து வடக்கு மக்கள் எனக்கு ஆதரவளிக்க வேண்டும்: முல்லைத்தீவில் மஹிந்த
[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 03:28.05 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கையில் முப்பதாண்டு கால இருண்ட யுகத்திற்கு முடிவு கட்டி, அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள வேளையில், நாடு பின்னோக்கிச் செல்வதற்கு இடமளிக்க முடியாது என்றும் மேலும் வளம் நிறைந்த ஓர் எதிர்காலத்தை நோக்கி இலங்கை முன்னேறிச் செல்வதற்கு வடபகுதி மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இனவாதம் பேசுவதாகக் குற்றம் சாட்டியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இனவாத அரசியல் மிக மிக மோசம் என்றும் எமக்குத் தேவை சகோதர பாசம் என்றும் தெரிவித்துள்ளார்.
இனவாதம் பேசும் டிஎன்ஏ தலைவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில். உங்களுடைய பிள்ளைகள்தான் இங்கு இருக்கின்றார்கள்.
அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் யோசிக்க வேண்டும். கடந்த முறை எனக்கு நீங்கள் வாக்களித்தீர்கள். வளமான அபிவிருத்தியை நாங்கள் உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றோம்.
எதிர்காலத்திலும் வளமான அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு நீங்கள் எனக்கு ஆதரவளிக்க வேண்டும்" என்றார் மகிந்த ராஜபக்ச.
முப்பது ஆண்டுகள் யுத்தம் நடைபெற்றது என்றும் ஆனால் ஐந்து ஆண்டுகளாகவே அபிவிருத்திச் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இந்த ஐந்து ஆண்டு காலத்தில் வடகுதிக்கு பெருமளவு நிதி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் பல அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், கல்வி, சுகாதாரம், சாலை அபிவிருத்தி என பல துறைகளிலும் இன்று வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
யுத்த காலத்தைப் போலல்லாமல், இப்போது யாரும் நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று வரலாம் என்றும் உயிர்ப் பாதுகாப்பு குறித்து அச்சமடையமத் தேவையில்லை என்றும், இருபத்தேழு ஆண்டுகளின் பின்னர் வடமாகாணத்தில் ஒரு மாகாண அரசுக்கான தேர்தலை தாங்களே நடத்தினோம் என்றும் வடமாகாண சபைக்கென பெருமளவு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.
கடந்து போன இருண்ட யுகத்திற்கு திரும்பிச் செல்வதற்கு அனுமதிக்க முடியாது. குரோதம் நிறைந்த அந்தக் காலத்தை மறந்து, எல்லா மத மக்களும், எல்லா இன மக்களும், நாம் எல்லோரும் ஒன்றுபட வேண்டும்.
ஒருவர் மற்றவர்களுடைய கலாசாரத்தை, மதத்தை மதித்து வாழ வேண்டும். அதற்காக எனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முள்ளியவளையில் கேட்டுக்கொண்டார்.
தற்போதுள்ள அமைதியான நிலைமையை இல்லாமல் செய்வதற்கு சிலர் முயற்சிப்பதாக குற்றம் சுமத்திய மஹிந்த ராஜபக்ச, தலைவர்கள் பலர் வருவார்கள், பலதையும் கூறுவார்கள், அவர்கள் இங்கு வசிப்பவர்களல்ல, அவர்களுடைய பிள்ளைகள் வெளிநாடுகளில் படிக்கின்றார்கள்; எனவே இங்கு வருபவர்கள் உங்கள் மீதோ உங்கள் பிள்ளைகள் மீதோ அக்கறை கொள்ள மாட்டார்கள்.
இந்த நாட்டில் உள்ள எல்லா இன மக்களையும் நாட்டில் உள்ள எல்லா சிறுவர்களையும் பாதுகாக்க வேண்டிய உரிமை எனக்குத் தான் இருக்கின்றது என்று நான் நம்புகிறேன்.
எனவே வளமான ஓர் எதிர்காலத்தை நோக்கி நீங்கள் எல்லோரும் என்னுடன் கரம் கோர்த்துச் செயற்படுவதற்கு முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
முள்ளியவளையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் கிளிநொச்சியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, யுத்த காலத்தின் போது இழந்திருந்த காணிகளையும் விடுதலைப் புலிகளின் வங்கிகளில் அடைகு வைத்திருந்த தங்க நகைகளையும் தமது அரசு மக்களுக்கு மீண்டும் திருப்பிக் கொடுத்ததைப் போன்று வடபகுதி மக்களுக்கு என்னென்ன தேவையோ அவற்றையெல்லாம் வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.
வடமாகாண சபையின் ஊடாக வடபகுதி மக்கள் நன்மையடைய வேண்டும் என்றும், அதற்கு பெருமளவு நிதியைத் தாங்கள் ஒதுக்கியிருப்பதாகவும், அவற்றின் மூலமான நன்மைகள் வடபகுதி மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
முள்ளியவளை மற்றும் கிளிநொச்சி தேர்தல் பரப்புரை கூட்டங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவனாந்தா, பிரதியமைச்சர் பிரபா கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கனகரட்னம், கிளிநொச்சி மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர் திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும் இந்தக் கூட்டங்களில் காணப்பட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszCScKalu4.html
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யக்கூடிய முடிவு விரைவில்! மாவை சேனாதிராஜா
[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 04:08.54 PM GMT ]
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளையெல்லாம் நிறைவு செய்யக்கூடியதாக யாருக்கு நாங்கள் வாக்களிக்க வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை உறுதியாக தெரிவிப்போம் என தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கட்சி முக்கியஸ்தர்களின் கருத்தறியும் விசேட கூட்டம் இன்று மட்டக்களப்பு கல்லடி, உப்போடை துளசி மண்டபத்தில் நடைபெற்றது.
வடகிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றுவரும் இந்த கலந்துரையாடலானது நேற்று திருகோணமலையில் நடைபெற்றதுடன் இன்று காலை அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பகுதியில் பிற்பகல் மட்டக்களப்பிலும் நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளருமான மாவை சேனாதிராஜா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சட்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட பாரர்ளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இதன்போது கலந்துகொண்டனர்.
இதன்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் எவ்வாறான நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என்பது தொடர்பில் ஆராயப்பட்டது.
குறிப்பாக தமிழ் மக்கள் இம்முறை தமது வாக்கு உரிமையை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என இங்கு கலந்துகொண்டு பலர் கருத்து தெரிவித்தனர்.
அத்துடன் இதுவரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த முடிவினையும் அறிவிக்காது தொடர்பிலும் கருத்துகள் பரிமாறப்பட்டன.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த மாவை சேனாதிராஜா,
நேற்று திருகோணமலையிலும் இன்று காலை அம்பாறையிலும் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற பிரதிநிதிகளிடத்திலுமிருந்து கருத்துக்களை அறிந்து கொண்டோம்.
இக்கருத்துகள் மிகவும் ஆரோக்கியமான முறையில் பரிமாறப்பட்டிருக்கின்றன. மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு தமது கருத்துகளை வெளியிட்டிருக்கின்றார்கள்.
இவையெல்லாவற்றையும் ஒன்றுதிரட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன் நாங்கள் தொடர்ச்சியாக விவாதித்துக் கொண்டிருக்கின்றோம்.
இறுதியான முடிவு மிகவிரைவில் எடுக்கப்படும். மிகவிரையில் எங்களுடைய நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிப்பதற்கு நாங்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.
வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் இம்முறை முழுமையான வாக்குப்பதிவை மேற்கொள்வதற்கு உரிய வேலைகளை செய்யும்படி நாங்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளின்படி கிடைத்த இந்த ஜனநாயக சந்தர்ப்பத்தில் தங்கள் வாக்குப்பதிவுகளை முழுமையாக செய்வதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். எங்கள் மக்களுடைய வெற்றி மிக முக்கியமானது.
எத்தனையோ துன்ப துயரங்களுக்குப் பிறகும் இதுவரையில் எந்த நன்மைகளையும் பெறாத எங்கள் மக்களுடைய உடனடிப் பிரச்சனைகளுக்காவது ஒரு தீர்வு வரவேண்டும் என்பதை கருத்தில்கொண்டு நாங்கள் கலந்துரையாடி வருகின்றோம்.
ஆகவே நாங்கள் வெகு விரையில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளையெல்லாம் நிறைவு செய்யக்கூடியதாக யாருக்கு நாங்கள் வாக்களிக்க வேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை உறுதிபட தெரிவிப்போம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszCScKalu5.html
Geen opmerkingen:
Een reactie posten